Wednesday, October 21, 2026

மலேசியத் திரையுலகின் சிற்பி: தான்ஸ்ரீ எல். கிருஷ்ணன்

இன்று அக்டோபர் 21. மலேசிய திரைப்பட வரலாற்றில் தனது தனித்துவமான தடத்தை விட்டுச் சென்றவர் தான்ஸ்ரீ எல். கிருஷ்ணன் பிறந்த நாள்.

மலேசியத் திரைப்பட வரலாற்றின் பொற்காலத்தைப் பற்றி கருதினால்- எழுதினால் பி. ராம்லீ போன்ற நட்சத்திரங்களின் பெயர்கள் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் அந்த நட்சத்திரங்களை செதுக்கி, வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அமைதியான சிற்பிகளில் மிக முக்கியமானவர் தான்ஸ்ரீ எல். கிருஷ்ணன்.

1922 அக்டோபர் 21 அன்று தமிழ்நாட்டில் பிறந்த அவர், பின்னர் மலாயாவில் கல்வி கற்று, திரைப்படக் கலையின்மீது கொண்ட தீராத காதலால் திரைப்பட உலகில் பயணத்தைத் தொடங்கினார்.

1949-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஷா ஸ்டுடியோவில் இயக்குநராக இணைந்து, மலாய் திரைப்பட உலகில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கினார்.

அவரின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று, பின்னாளில் மலாய் உலகின் தலைசிறந்த கலைமேதையாக உயர்ந்த பி. ராம்லீ-யின் திறமையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவருக்கு முக்கிய வாய்ப்புகளை வழங்கியதே ஆகும்.

பக்தி (Bakti), தக்திர் இலாஹி, பெங்க்ஹிடுபான் போன்ற படங்கள் அதற்குச் சாட்சியாகத் திகழ்கின்றன.

முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய அவர், காதல், குடும்பம், இசை, சமூக உணர்வு மட்டுமல்லாமல், Orang Minyak, Serangan Orang Minyak போன்ற படங்கள் மூலம் மலாய் திகில் திரைப்படங்களுக்கும் அடித்தளம் அமைத்தார்.

திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பு, இசை, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உள்ளூர் கலைத்துறையின் முன்னேற்றத்திற்காகவும் அவர் பங்களித்தார்.

அவரின் சேவையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் வழங்கப் பட்டன; அதில் 2016-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மெர்டேக்கா விருது குறிப்பிடத்தக்கது.

முத்தாய்ப்பு நடிகர்களை உருவாக்கிய இயக்குநர்; திரைப்படங்களை மட்டும் படைக்காமல், ஒரு தலைமுறையின் கனவுகளையும் படைத்தவர்.

காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்தாலும்,
அவர் ஏற்றிய கலைவிளக்கு என்றும் அணையாது.” இன்று அவரது பிறந்த நாளில், மலேசியத் திரைப்பட உலகின் இந்த மாமேதையை நெஞ்சார நினைவுகூர்வோம்.

வாழ்ந்த காலத்தில் திரைப்படங்களை உருவாக்கியவர்; மறைந்த பின்னும் வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருப்பவர் தான்ஸ்ரீ எல். கிருஷ்ணன்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை