
மலேசிய வானவீதியை அண்மைக் காலமாக ஆக்கிரமித்துள்ள புகைமூட்டம் தற்போது அதிகரித்திருப்பதால் நாளை வெள்ளிக் கிழமை, அக்டோபர் 9, 2026, நாட்டின் பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தன் முகநூல் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன.
மேலும், பகாங் மாநிலத்தின் ரொம்பின் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் மூடப்படும். புத்ராஜெயா முழுவதும் உள்ள பள்ளிகளும் நாளை செயல்படாது என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, பெர்லிஸ், பேராக், பினாங்கு, சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
புகைமூட்டம் தொடர்பான நிலைமையை அனைத்து மாநில கல்வித் துறைகளும் (JPN), மாவட்ட கல்வி அலுவலகங்களும் (PPD) தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நிலைமைக்கு ஏற்ப தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை திடீரென மூடுவது பெற்றோர் களின் அன்றாட நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கல்வி அமைச்சு புரிந்துகொள்வதாகவும் எதிர்காலத்தில் பள்ளிகளை மூடுவது தொடர்பான முடிவுகள் முடிந்தவரை முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் பயிலும் பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் மாநில கல்வித் துறைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர் களின் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


