Thursday, October 8, 2026

மலாயா பல்கலைக்கழகத்தில் புதிய மாணவ-மாணவியருடன் சந்திப்பு-கலந்துரையாடல்!

மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய முன்னாள் மாணவர் சங்கம் (PANIUM) சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று, நிகழும் 2026ஆம் ஆண்டு புதிய மாணவ, மாணவியருடன் மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புநிலை பேராசிரியர் டத்தோஸ்ரீ முனைவர் ஆ.தெய்வீகன் உரையாற்றினார்.

ஏறத்தாழ 200 புதுமுக உயர்க்கல்வி மாணாக்கருடன் இந்த சிறப்பு சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் பல்கலைக்கழக வாழ்க்கைக்கும் எதிர்காலத்திற்கும் வழிகாட்டும் வகையில் தெய்வீகன் சிறப்புரை ஆற்றினார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு பொன்போன்றது. அதைக் கண்ணைப்போல் போற்றி மதித்தல் வேண்டும்; இந்த உயர்க்கல்வி நிலையம், உலகின் மிகச்சிறந்த-புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இங்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைப்பது, அரியது; இவ்வாய்ப்பு குதிரைக் கொம்பைப் போன்றதென்று வாய்ப்பு கிடைக்காதவர்கள் சொல்வதைக் கேட்கலாம்; உலகில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட சகலகலாசாலைகளில்,194வது இடத்தில் உயர்ந்து நிற்கும் இப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது, மிகப்பெரிய நல்வாய்ப்பு என்று மாணவர்களுக்கு அவ்ர் எடுத்துரைத்தார்.

“இதேக் கனவையும் இலட்சியத்தையும் கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காமல் உள்ளனர். எனவே, கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை நீங்கள் மிகவும் மதித்து, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”.

மாணவர்கள், கல்விக்கும் அறிவாற்றல் மேம்பாட்டுக்கும் முதலிடம் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், “நீங்கள் தேர்ந்தெடுத்-துள்ள துறையில், கல்வியில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக வாழ்க்கையின் முதன்மையான நோக்கம் அறிவைப் பெற்று, கல்வியில் சிறந்து விளங்கி, வெற்றிகரமாக பட்டம் பெறுவதாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கல்வியில் நாட்டம் செலுத்துவதைப்போல பல்கலைக்கழகத்தின் பல்வேறு நடவடிக்கைகளிலும் பங்கேற்பது அவசியம் என்ற அவர், “கல்வியுடன் மட்டும் நின்று விடாமல், இணைப்பாட நடவடிக்கை, விளையாட்டு, மாணவர் சங்கங்களில் இணைந்து பயணிப்பது, கலை, பண்பாடு மற்றும் சமூகப் பணிகளில் நாட்டம் போன்றவற்றிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்” என்றார்.

“இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின உடல், உணர்வு, உளவியல், ஆன்மீக அளவில் செப்பம்பெற உதவுவதுடன் சமூக வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்” என்று குறிப்பிட்டார்.

மாணவர்கள் புத்திசாலித்தனமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதுடன் அறிவுத் தேடலிலும் அக்கறைகொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்ததே வாழ்க்கையின் நோக்கத்தின் முடிவு என்று நினைத்துவிடாதீகள். முழு வெற்றியும் அடைந்துவிட்டோம் என்று எண்ணிவிடாதீர்கள். பல்வேறு வாழ்க்கைத் திறனுடன் மனிதநேயத் தன்மையையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகப் படிப்பை முடித்து வேலைவாய்ப்பினைத் தேடி, உழைக்கும் உலகிற்குள் நுழையும் போது, கல்வியுடன் இத்தகைய திறன்களும் இருப்பதுதான் உங்களின் வெற்றிக்கு முக்கியமான அடித்தளமாக அமையும் என்று குறிப்பிட்டார்.

தனிமனித ஒழுக்கத்தையும் பல்கலைக்கழகத்தின் நற்பெயரையும் பாதுகாத்தல் அவசியம்.

மாணவர்கள் தங்களுடைய தனிப்பட்ட ஒழுக்கம், பேச்சு மற்றும் நடத்தையை எப்போதும் கவனமாகப் பேண வேண்டும்.

மாணவர்களின் அறிவு, பேச்சு மற்றும் நடத்தை ஆகியவையே அவர்களின் மதிப்பு, கற்கும் பல்கலைக்கழகம், சார்ந்துள்ள
சமுதாயம் ஆகியவற்றின் தரத்தை வெளிப்படுத்தும்.

பல்கலைக்கழகத்தில் பன்முக சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மாணவர்கள், தங்களுக்கிடையிலான நல்லுறவையும் பல்லின உறவையும் பேண வேண்டும்;

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் அனைத்து பொறுப்பாளர்களையும் மதித்து நடக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதுடன், நாட்டின் சட்டங்களையும் மதித்து நடக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களுடைய சுய பாதுகாப்பில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். போதைப்பொருள், இணைய மோசடிகள் (scam) மற்றும் பிற தீய அல்லது விரும்பத்தகாத குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் விஷமிகளிடமிருந்து விலகி, மிக கவனத்துடனும் , உஷாராகவும் இருக்க வேண்டும் என்று மாணவ சமுதாயத்தை டத்தோஸ்ரீ முனைவர் ஆ. தெய்வீகன் எச்சரித்துள்ளார்

ஒரு தவறான செயல், பல ஆண்டுகளாக உருவாக்கி, கட்டிக்காத்த கனவுகளையும் இலட்சியங்களையும் சிதைத்து, சின்னாபின்னமாக்கிவிடும்; வாழ்க்கையைத் துன்பத் தடாகத்தில் தள்ளிவிடக்கூடும் என்பதை மாணவர்கள் உணரவேண்டும்.

பல்கலைக்கழக வாழ்க்கை, பாதுகாப்பு, கல்வி மற்றும் தனிமனித முன்னேற்றம் தொடர்பான அம்சங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் தேவைப்பட்டால் பல்கலைக்கழக மேநாள் மாணவர் சங்கம் அல்லது தமிழ்ப் பேரவை வாயிலாக தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பும் கருத்துப் பகிர்வும் புதிய மாணவ, மாணவியர்களுக்கு அவர்களுடைய பல்கலைக்கழக வாழ்க்கையிலும் எதிர்காலப் பயணத்திலும் சிறிதளவாவது வழிகாட்டியாகவும், ஊக்கமளிப்பதாகவும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதாகவும் அமையும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்

இன்றைய இளம் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்த பின் வெளியேறும் போது அறிவுள்ள பட்டதாரிகளாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஒழுக்கமுள்ள, திறமைமிக்க, பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் பங்களிக்கக்கூடிய சிறந்த, முனைப்புமிக்க மனிதர்களாகவும் உருவாக வேண்டும் என்பதே தன் விருப்பமாகும் என்று, மலாயா பல்கலைக்கழக, இணைப் பேராசிரியர் டத்தோஸ்ரீ முனைவர் தெய்வீகன் ஆறுமுகம் கூறினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை