
இன்று பிற்பகல் 3:30 மணி அளவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சமர்ப்பிக்க உள்ள 2027 நிதிநிலை அறிக்கை, மலேசிய அரசியல், பொருளாதாரம், மற்றும் சமூக நலன் ஆகியவற்றின்பால் மையம் கொண்டிருக்கலாம். குறிப்பாக அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் ஏராளமான சமூகநல திட்டங்களும் குறிப்பாக இந்திய சமூகத்திற்கான அறிவிப்புகளும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு தேர்தல் உறுதி என்று நிலையில், இந்த அறிக்கை ‘மக்கள் நலன்’-ஐ மையமாகக் கொண்டதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மட அணி முழக்கத்துடன் செயல்படுகின்ற ஒற்றுமை அரசாங்கத்தின் மீது மக்கள் மனதில் நம்பிக்கை ஊட்டும் வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பிரதமர்.
திருக்குறள் பாரம்பரியம்: அன்வார் இப்ராகிம் வழக்கமாக திருக்குறளை வாசித்து நிதிநிலை அறிக்கையைத் தொடங்குவார். இன்று அவர் “அரசின் கடமை” அல்லது “சமத்துவம்” குறித்த குறளை வாசிப்பார் என பலரும் ஊகிக்கின்றனர்.
இந்திய சமூகத்திற்கான எதிர்பார்ப்பு: MITRA வழியாக கல்வி, சமூக நலன் சார்ந்த சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
அதைப்போல மக்களின் வாழ்க்கை சுமையை அரசு கவனத்தில் கொண்டு எரிபொருள், உணவு, போக்குவரத்து செலவுகளை குறைக்கும் அறிவிப்புகளும் இடம்பெறக்கூடும்.
குறிப்பாக, கல்வி உதவி, திறன் மேம்பாடு, மொழி வளர்ச்சி த் திட்டங்களும் இடம்பெறக்கூடும்.
வெ.2டிரில்லியன் கடன்சுமை என்ற அழுத்தத்தை அரசு எதிர்கொண்டு இருந்தாலும் போக்குவரத்து கட்டமைப்பு, பொது போக்குவரத்து சலுகை, உணவு பாதுகாப்பு, செய்யறிவு (AI) மறுமலர்ச்சி குறித்து திட்டங்களையும் அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.
மொத்தத்தில், இந்த நிதிநிலை அறிக்கை, சமூக நலன், இளைஞர்கள், மற்றும் இந்திய சமூகத்திற்கான திட்டங்கள் என மக்கள் மனதில் நம்பிக்கையை ஊட்டும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அரசின் நிதி ஒழுங்கு மற்றும் அரசியல் அழுத்தம் ஆகியவற்றின் தாக்கமும் இன்றைய நிதிநிலை அறிக்கையில் இழையோடி இருக்கும்.


