
Pusat Tuisyen Arena Matriks கல்வி நிலையத்தின் சார்பில் 2026 எஸ்பிஎம் தேர்வு மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் அக்கறை செலுத்தி வந்தாலும் கடைசிநேர தடுமாற்றத்தை தவிர்க்கவும் பதற்றத்தை விடுத்து நிதானமாக மாணவர்கள் தங்களின் தேர்வை எழுதி முடிப்பதற்குமான சிந்தனையை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்த கல்வி நிலையத்தின் தோற்றுனர் ஜனகன் ஆறுமுகம் தெரிவித்தார்.
குறிப்பாக யூபிஎஸ்ஆர் தேர்வை ஆரம்பப் பள்ளியிலும் பிடி3 தேர்வை இடைநிலைப் பள்ளி மூன்றாம் ஆண்டிலும் எழுதாமல் 13 ஆண்டுகள் தேர்வையே எழுதாமல் முதல் முறையாக தேர்வில் அமர இருக்கும் இந்த மாணவர்களுக்கு தெளிவை ஏற்படுத்து வதற்காக இந்த நிகழ்ச்சி சரஸ்வதி பூஜை நாளில் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக ஆலயத்தில் மாணவர்களின் கல்வி வெற்றிக்காக நடைபெற்ற சிறப்பு பூசனைக்குப் பின் ஆசிரியர் கதிரவன் மாணவர்களுக்கு ஊக்க உரை ஆற்றினார்.

நம் சமுதாயத்திற்கு இந்த நாட்டில் கல்வி ஒன்று தான் பற்றுக்கோடு என்பதால் இளம் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சுற்றி நிகழும் நட்பு, காதல், குடும்ப உறவு, பாசம் இன்பம் துன்பம் உள்ளிட்ட அனைத்திற்கும் முகம் கொடுக்காமல் தேர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு அனைத்து புறச் சூழல்களில் இருந்தும் விடுபட்டு கண்ணும் கருத்துமாக எஸ் பி எம் தேர்வை எழுதி தங்களின் கல்விப் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்று ஊக்கமுற பேசினார்.
நிறைவாக தேவி மகேஸ்வரன் ஸ்டுடியோவைச் சேர்ந்த இளம் மாணவியரின் பரதநாட்டியமும் இடம்பெற்றது.
புக்கிட் கெமுனிங் அருள்மிகு காளியம்மன் ஆலய நிர்வாக ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வின் முறையான எழுத்துத் தேர்வுகள் நவம்பர் 23ஆம் நாள் தொடங்கினாலும் வாய்மொழி தேர்வுகள் நிகழும் அக்டோபர் மாத பிற்பகுதியில் தொடங்குகின்றன. டிசம்பர் 17-இல் தேர்வுகள் யாவும் நிறைவு பெறும் என்று மலேசிய கல்வித்துறை தேர்தல் வாரியம் அட்டவணை இட்டுள்ளது.


