
(செ.வே. முத்தமிழ் மன்னன்)
கடந்த நவம்பர் 4 & 5, 2026 – சர்வதேச அரங்கில் மலேசிய இந்திய இளைஞர் தலைமைத்துவத்தின் திறமையைப் பறைசாற்றும் வகையில், உலக சந்தைப்படுத்தல் உச்சி மாநாடு மலேசியா 2026-இல் மிக இளம் வயதுடைய குழு விவாதப் பேச்சாளராகவும் (Youngest Panelist), மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இந்தியப் பேச்சாளராகவும் தினேஷ் ராஜ் நாகராஜன் பங்கேற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
உலகளவில் அங்கீகரிக்கப் பட்ட இந்த உச்சி மாநாடு, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலேசியாவில் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்றது.
நவீன சந்தைப்படுத்தல் துறையின் தந்தை (Father of Modern Marketing) எனப் போற்றப்படும் பேராசிரியர் பிலிப் கோட்லரால் (Professor Philip Kotler) நிறுவப்பட்ட இந்த சர்வதேச மாநாட்டை, மலேசியாவின் துணைப் பிரதமரும் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டின் மாநாடு “புதிய யுகத் தொழில்நுட்பம்” (New Age Technology) என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
இதில் சர்வதேச மற்றும் மலேசியாவின் முன்னணி வர்த்தகத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், சந்தைப்படுத்தல் வல்லுநர்கள், ஊடகப் பிரபலங்கள் மற்றும் சிந்தனையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, தொழில் நுட்பத்தின் எதிர்காலம், தலைமைத்துவம், மூலோபாயத் தகவல் தொடர்பு மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற குறிப்பிடத்தக்க பிரமுகர்களில், பெர்ஜெயா மெகா மோட்டார்ஸ் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் பிரபல உள்ளடக்கப் படைப்பாளருமான ஜேம்ஸ் என்ஜி (பாஸ் ஜேம்ஸ்), டெலினார் ஆசியாவின் மூத்த துணைத் தலைவரும் செல்காம் டிஜி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகமற்ற இயக்குநருமான இர்ஃபான் உல் வஹாப் கான், போஸ் மலேசியா பெர்ஹாட்டின் குழும தலைமைச் செயல் அதிகாரி சார்லஸ் ப்ரூவர் மற்றும் மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனத்தின் (RTM) தலைமை இயக்குநர் டத்தோ அஷ்வாட் இஸ்மாயில் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்தச் சிறப்புமிக்க சர்வதேச மேடையில் மலேசிய இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தினேஷ் ராஜ் நாகராஜன், மூலோபாயத் தகவல் தொடர்பு, பங்குதாரர்களுடனான ஈடுபாடு மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனாக நம்பிக்கையை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட குழு விவாதத்தில் பங்கேற்றார்.
தற்போது மலேசிய இந்தியக் கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் (Maju Institute of Educational Development – MIED) நிறுவன உத்தி மற்றும் ஊடகத் தொடர்புப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வரும் தினேஷ் ராஜ், தலைமைத்துவப் பொறுப்புணர்வு, வெளிப்படையான தகவல் தொடர்பு, நிறுவனங்களின் தயார்நிலை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக மாறிவரும் சூழலில் பொதுமக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதன் அவசியம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் குழு விவாதப் பேச்சாளர்களில் மிக இளம் வயதுடையவராகவும், மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இந்தியப் பேச்சாளராகவும் அவர் திகழ்ந்தது இந்தச் சாதனையின் தனிச்சிறப்பாகும். சர்வதேச மற்றும் மலேசியாவின் அனுபவமிக்க தொழில்துறைத் தலைவர்களுடன் ஒரே மேடையில் அவர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனை மலேசிய இந்திய சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய தருணமாக அமைந்துள்ளது.
இளம் தலைமுறையைச் சேர்ந்த இந்தியத் தொழில்முறை வல்லுநர்களும் உலகளாவிய வர்த்தகம், தலைமைத்துவம், சந்தைப்படுத்தல் மற்றும் மூலோபாயத் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்க முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டாகும்.
மேலும், சர்வதேச அளவிலான கருத்துப் பரிமாற்ற அரங்குகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு முக்கியமானது என்பதையும் தினேஷ் ராஜின் பங்கேற்பு எடுத்துக் காட்டுகிறது.
எதிர்காலத்தை வடிவமைப்பதில் புதிய சிந்தனைகள், புதுமையான அணுகுமுறைகள் மற்றும் பொறுப்பான தலைமைத்துவம் ஆகியவை இன்றியமையாதவை என்பதை அவரது பங்கேற்பு வலியுறுத்துகிறது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உலக சந்தைப்படுத்தல் உச்சி மாநாடு மீண்டும் மலேசியாவில் நடைபெற்றிருப்பது, சர்வதேச அறிவுப் பரிமாற்றம் மற்றும் வர்த்தகத் தலைமைத்துவத்திற்கான முக்கிய தளமாக மலேசியா விளங்குவதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
மலேசியாவிலிருந்து சர்வதேச மேடை வரை – உலக சந்தைப்படுத்தல் உச்சி மாநாடு மலேசியா 2026-இல் தினேஷ் ராஜ் நாகராஜன் பெற்றுள்ள இந்த அங்கீகாரம், மலேசிய இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு மைல்கல்லாகவும், நாட்டின் இளம் தலைமைத்துவத்தின் திறமையை உலகிற்கு எடுத்துரைக்கும் பெருமைக்குரிய தருணமாகவும் அமைந்துள்ளது!


