யாசர் அராஃபத் நினைவு நாளில் எழும் கேள்வி!

கடந்த ஒரு தசாப்தமாக உலக அரசியலில், குறிப்பாக வலசாரி இனவாத அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திவரும் தலைவர்களில் டொனால்டு டிரம்பும் அவரின் வலச்சாரி சகா பெஞ்சமின் நெதன்யாகுவும் முக்கியமானவர்கள்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் அவர்கள் முன்னெடுத்த அரசியல் அணுகுமுறை யாவும் தேசிய பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு, தேசியவாதம் மற்றும் வலதுசாரி அரசியல் சிந்தனைகளுடன் இணைந்ததாகப் பார்க்கப்பட்டன.
குறிப்பாக மத்திய கிழக்கு அரசியலில், அதனிலும் குறிப்பாக, பாலஸ்தீன-மேற்குக் கரை விவகாரத்தில் இருவரின் நிலைப்பாடும் இணக்கமாக இருக்கிறது.
இதனால் இஸ்ரேலிய அரசின் கொள்கைகளுக்கு வலுவான அரசியல் மற்றும் தூதரக ஆதரவு நிலவுவதாக பல அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
மறுபுறம், பாலஸ்தீனர்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் சுயாட்சி தொடர்பான எதிர்பார்ப்புகள் பன்னாட்டு அரசியல் அரங்கில் குறைவான முக்கியத்துவம் பெற்றதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக, கீழ்திசை நாடுகளில் தூதரக அரசதந்திர களம் கிடைப்பதில் தேக்கநிலை நீடிப்பதாகவும் கருத்து நிலவுகிறது.
இத்தகைய சூழலில், இந்த இரு தலைவர்களும் தத்தமது நாடுகளில் அரசியல் சவால்கள் அல்லது தேர்தல் பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ள நிலை, பாலஸ்தீனர்களுக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.
ஆனால் அரசியல் யதார்த்தம் அதைவிட சிக்கலானது. அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கையோ அல்லது இஸ்ரேலின் பாதுகாப்புக் கொள்கையோ தனிநபர் தலைவர்களை மட்டும் சார்ந்தவை அல்ல. மாறாக வலச்சாரி ஆதிக்க அரசியல், இராணுவ கட்டமைப்பு, கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கி உள்ளன.

எனவே, டிரம்ப் அல்லது நெதன்யாகு அரசியல் பின்னடைவைச் சந்திப்பது மட்டுமே பாலஸ்தீன மக்களின் நிலைமையில் உடனடி மாற்றத்தை உருவாக்கிவிடும் என்று கூற முடியாது.
இருப்பினும், புதிய அரசியல் தலைமைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டால், பாலஸ்தீன பிரச்சினையை அணுகும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தோன்றக்கூடும்.
பாலஸ்தீன மக்களுக்கு உண்மையான நிவாரணம் கிடைப்பது ஒருசில தலைவர்களின் அரசியல் எழுச்சி அல்லது வீழ்ச்சியைத் தாண்டிய ஒரு விடயமாகும்.
அது பிராந்திய அரசியல், சர்வதேச அரசதந்திரம், இஸ்ரேல் – பாலஸ்தீன பேச்சுவார்த்தைகள் மற்றும் உலக அரசியல் சக்திகளின் அணுகுமுறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவாகவே அமையும்.
அதனால், டிரம்ப் அல்லது நெதன்யாகுவின் அரசியல் பின்னடைவை பாலஸ்தீனர்களின் வெற்றியாக நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், புதிய அரசியல் சூழலுக்கான ஒரு வாயிலாக சிலர் அதைக் கருதுகின்றனர்.
அந்த வாயில் எவ்வளவு தூரம் திறக்கப்படும் என்பதை எதிர்கால அரசியல் தீர்மானிக்கும்.
பாலஸ்தீன மண்ணின் விடுதலைக்காக காலமெல்லாம் போராடிய யாசர் அராஃபாத்தின் இன்றைய நினைவு நாளில், இதை எண்ணிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்


