
19 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஹிண்ட்ராஃப் எழுச்சிக்குப் பின் மலேசியாவில் மத்திய – மாநில அரசாங்கங்கள் மாறினாலும் இந்தியச் சமூகத்தின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்று மலேசிய முன்னேற்றக் கட்சியின் துணைத் தலைவர் மோகன் எல்லப்பன் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2017 25ஆம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணிக்கு இன்று-டன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
மலேசிய இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றிணைந்து தங்களின் உரிமைகளையும் நீதியையும் கோரி எழுச்சி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் அது.
ஒரு சமூகத்தின் உரிமைகளும் நலன்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது, இறுதியில் மக்கள், நீதிகேட்டுக் குரல் எழுப்புவார்கள் என்பதை அப்பேரணி நிரூபித்தது.

இருப்பினும், இன்றைய இளம் தலைமுறை-யினரில் பலர் இப்போராட்டத்தின் வரலாறு, லட்சியங்கள், அதன் பின்னணியில் உள்ள தியாகங்களைப் பற்றி இன்னும் முழுமை-யாக அறிந்திருக்கவில்லை.
ஆனால், 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிண்ட்-ராப் போராட்டத்தின் இலட்சியங்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன?
ஹிண்ட்ராப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக ஆகியுள்ளனர்.
அவர்களில் சிலர் இன்றும் அப்பதவிகளில் சேவையாற்றி வருகின்றனர்.
இருப்பினும், தமிழ்ப்பள்ளிகள், கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, குடியுரிமை, மயான நிலங்கள், ஆலய நிலங்கள், வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளைச் சொந்தமாக்குதல் போன்ற இந்தியச் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
சுதந்திரம்பெற்று, இந்த 69 ஆண்டுகளில் தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி, முகைடின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி தேசிய முன்னணி கூட்-டணி, இஸ்மாயில் சப்ரி தலைமையிலான தேசிய முன்னணி தேசியக் கூட்டணி, நம்பிக்கைக் கூட்டணி தலைமையிலான இப்போதைய ஒற்றுமை அரசாங்கம் ஆகிய ஆட்சிகளை மக்கள் கண்டுள்ளனர்.

தலைவர்கள் மாறியுள்ளனர், ஆளும் கூட்டணிகள் மாறியுள்ளன, பிரதமர்கள் மாறியுள்ளனர்.
ஆனால், இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன.
மலேசிய இந்தியச் சமூகத்தின் நலன்கள் உண்மையிலேயே நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களில் இடம் பெற்றுள்ளனவா அல்லது தேர்தல் நெருங்கும் போது மட்டும் இனிப்பான வாக்குறுதிகள் மூலம் கவனம் பெறுகின்றனவா என்ற கேள்வியை இந் நிலை எழுப்புகிறது.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை இந்தியச் சமூகம் எளிதில் மறந்துவிடும் என்றும், தங்களது உரிமைகள், நலன்கள் குறித்து அதிகம் கேள்வி எழுப்பாமல் கொடுக்கப்படுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் என்றும் இன்றைய தலைவர்கள் பலர் கருதுகின்றனர்.

இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டிற்கென தனித்துவமான, இலக்கு சார்ந்த செய ல்திட்டம், போதுமான நிதி ஒதுக்கீடு, முறையான செயலாக்கம் அளவிடக்கூடிய இலக்குகளுடன் நீண்டகால சமூக- பொருளாதார- கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமாகும்.
இவ்வகையில், மலேசிய முன்னேற்றக் கட்சி, ஹிண்ட்ராப் தலைவர் பொன். வேதமூர்த்தி இந்தியச் சமூகத்திற்கான சிறப்பு மேம்-பாட்டுத் திட்டங்களை மலேசிய ஐந்தாண்டு பெருந்திட்டங்களிலும் தேசிய வரவு செலவுத் திட்டத்திலும் இடம்பெறச் செய்வதற்கான கோரிக்கைகளையும், நாட்டின் சட்டம் சார்ந்த பிற விவகாரங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துப் போராடி வருகிறார்.
இந்தியச் சமூகத்திற்குத் துணிச்சல், நேர்மை, நாணயம், கொள்கைப்பற்று ஆகியவற்றைக் கொண்ட, ஊழலற்ற, அரசியல் பதவிகளைப் பொருட்படுத்தாத, சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கத் துணிந்த தலைமைத்துவம் தேவைப்படுகிறது.
ஹிண்ட்ராப் போராட்ட உணர்வு வெறும் நினைவுகூரலாகவோ அரசியல் சொல்லாட-லாகவோ மட்டும் இருந்துவிடக்கூடாது.
அது சமூக மறுமலர்ச்சிக்கான கொள்கை-யாகவும், செயல்பாடுகளாகவும், கண்கூடான சாதனைகளாகவும் மாற்றப்படவேண்டும்.
19 ஆண்டுகளுக்குப்பிறகு, இந்தியச் சமூகத்திற்குத் தேவை இனிப்பான வாக்குறுதிகள் அல்ல;
உறுதியான தீர்வுகளும் அர்த்தமுள்ள மாற்றங்களுமே; லட்சியங்கள் நிறைவேறும்-வரை போராட்டம் ஓயாது என்று இன்றைய ஹிண்ட்ராப் எழுச்சி நாள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மோகன் எல்லப்பன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


