
ஒவ்வோர் இந்து ஆலயமும் நம் சயமத்தின் மாண்பாகவும் நம் சமயம் சார்ந்த ஆக்கப்பூர்வமான நம்பிக்கைக்கும் அதுசார்ந்த முன்னெடுப்புகளுக்கும் அடித்தளமாகவும் திகழ்ந்திட வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளையில்,ஆலயங்களை முறையாக பதிவு செய்தல், நில விவகாரங்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், நன்முறையில் தீர்வுகாணுதல் என பல்வேறு விடயங்களில் ஆலய நிர்வாகத்தினர் தனிக் கவனம் செலுத்திட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், சமயம் சார்ந்த நடவடிக்கைகளோடு சமூகப்பணிகளிலும் குறிப்பாக கல்வி சார்ந்த செயல்பாடுகளிலும் ஆலயங்களின் பங்களிப்பு இன்றையச் சூழலில் மிக அவசியம் அவர் சுட்டிக் காட்டினார்.

அதுமட்டுமின்றி, இளம் தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள் மத்தியில் சமய நம்பிக்கை, நெறிமுறை ஆகியவற்றை ஆழமாக பதிவு செய்திட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் அவசியம்.
மெங்லெம்பு அருள்மிகு தேவி ஆதிபராசக்தி ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு வெ.30 ஆயிரத்தை ஆலய நிர்வாகத்தினரிடம் மானியமாக வழங்கிய பின்னர் சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆக்கப்பூர்வமான சமயப்பணியை முன்னெடுத்து வரும் ஆலய நிர்வாகத்தினரின் சமய-சமூகப் பணி மேலும் சிறக்க இம்மானியம் வழங்கப்படுவதாக கூறிய அவர், இந்த நன்கொடை பூசாரிகளுக்கான ஊதியம், சடங்கு உபகரணங்கள், ஆலய கட்டமைப்பு, பாதுகாப்பு சேவை மற்றும் ஹோமம், யாக சாலை, நாதஸ்வர இசைக் கலைஞர்கள், மலர், பிரசாதம் போன்றவற்றுக்கான செலவை ஈடுகட்ட இந்த நிதி பெரும் உதவியாக இருக்குமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஆலயத்தின் கும்பாபிஷேகம் நேர்த்தியாகவும் சமயநெறியோடும் நடந்தேறிய நிலையில் அதனை நிறைவாகவும் வெற்றிகரமாகவும் செய்துமுடித்த ஆலய நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்ட சிவகுமார் இவ்வாலயம் இந்து சமூகத்தின் மத்தியில் பக்தி,நல்லிணக்கம் மற்றும் கலாச்சார பெருமை ஆகியவற்றை மெய்ப்பிக்கும் ஆன்மீக மையமாக தொடர்ந்து செழிக்கட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.


