
கருஞ்சட்டை இளைஞர் படையின் ஏற்பாட்டில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0-ற்கான ஏற்பாட்டு வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன என்று அதன் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023ல் தொடங்கிய இந்தப் பகுத்தறிவுப் பயணம் மலேசிய மண்ணில் தொடர்ந்து நடைபெறவுள்ளது என்பதை உவகையுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.இம்முறை புதிய அணுகுமுறையுடன் புதுப்பொலிவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-இல் , இயங்கலை வாயிலாகப் பன்னாட்டுப் பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து அந்த வார இறுதியில், 21 செப்டம்பர் 2025, ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கோலாலம்பூரில் அரங்கமொன்றில் நேரடி நிகழ்ச்சியாக நடைபெறும்.
இயங்கலையில் நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கானது, திராவிடம், சமூக நீதி, பெரியார் என்ற தலைப்புகளில் சில வெளிநாட்டுப் பேச்சாளர்கள் பங்கேற்றுப் பேசுவார்கள்.
2௦25 செப்டம்பர் 21-ல் கோலாலம்பூரில் நடைபெறும் நேரடி நிகழ்ச்சி இரு அமர்வுகளாக நடைபெறும். முதல் அமர்வானது, காலையில் தேசிய மொழியில் பல்லின மலேசியர்கள் பங்கெடுக்கும் வகையில், இனப் பாகுபாடு, மதத் தீவிரவாதம் மற்றும் மலேசியர்களிடையே பேணப்படும் ஒற்றுமை ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.
மதிய உணவுக்குப் பின் இரண்டாவது அமர்வு இடம்பெறும். இதில் சாதிய வேறுபாடு, பாலினப் பாகுபாடு, பகுத்தறிவுச் சிந்தனை ஆகிய தலைப்புகளில் மக்களின் குறிப்பாக இளையோரின் சிந்தையைத் தட்டியெழுப்பும் வகையில் பேச்சாளர்கள் தங்களின் பங்களிப்பினை வழங்குவார்கள். இந்த அமர்வு, முற்றிலும் தமிழ் மொழியில் இடம்பெறவுள்ளது.
மண்ணுக்கான அரசியல் பார்வையையும் பகுத்தறிவுச் சிந்தனையையும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கில், கருஞ்சட்டை இளைஞர் படையினர் முன்னெடுக்கும் இந்த முயற்சி வழக்கம்போல், மக்களின் பேராதரவுடன் நடைபெறும் என்பதை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஈராண்டுகள் உங்களின் உதவியால் வெற்றியடைந்த இக்கருத்தரங்கு, மீண்டும் ஒரு வெற்றியை நோக்கி நடை போட, உங்களின் பேராதரவினை வழங்கிட உரிமையுடன் கோருகின்றோம் என்று ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


