
சிரம்பான், ஜூலை 31 –
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் லோபாக் சட்டமன்றத் தொகுதியில் தனக்கு 80 விழுக்காட்டு வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உறுதியாக இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் குமார் எஸ். பரமசிவம் (பி.எம்.குமார்) தெரிவித்தார்.
இரண்டு வாரங்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், மலாய் மற்றும் இந்திய வாக்காளர்கள் தமக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாகவும், நாடு முழுவதிலிருந்தும் கட்சியினர் வந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

“எனக்கு 80 விழுக்காட்டு வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. லோபாக் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நாடு முழுவதிலுமிருந்து கட்சியினர் வந்து எனக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மஇகாவும் முழுமையாக ஆதரவு வழங்கி வருகிறது,” என்றார்.
லோபாக் தொகுதியில் சுமார் 16,000 சீன வாக்காளர்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், மலாய் மற்றும் இந்திய சமூகத்தினரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
தொகுதியில் மக்களை சந்தித்தபோது பல்வேறு பிரச்சினைகள் தமது கவனத்திற்கு வந்ததாகவும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட பலர் அரசின் சமூக நல உதவித் திட்டங்களை பெற முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“முதியோர் பலரின் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. உடல் நலக் குறைபாடு உள்ளவர்களுக்குக் கூட உரிய உதவிகள் கிடைக்கவில்லை என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இவை உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்,” என்றார்.
அதேபோல், லோபாக் பகுதியில் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாததால், பல இளைஞர்கள் தலைநகர் கோலாலம்பூருக்கு வேலைக்காகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இளைஞர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் விளையாட்டு வசதிகளும் போட்டிகளும் குறைவாக இருப்பதால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் கல்வி வாய்ப்புகளை அதிகரித்தல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அரசின் உதவித் திட்டங்களை தகுதியானவர்களுக்கு பெற்றுத்தருதல், தாய்மார்களுக்கு பேறுகால நிதியுதவி மற்றும் இறப்பு நிதி உதவித் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கெடா மந்திரி பெசார் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதன் உண்மை நிலையை தனது தொகுதி வாக்காளர்களிடம் நேரடியாக விளக்கி விட்டதாகவும் அவர் கூறினார்.


