
நாம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையையும் இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற இறை அச்சத்தையும் நன்னெறிசார் சிந்தனையையும் இளம் தலைமுறையினரிடையே ஏற்படுத்த வேண்டும் என்று மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் பேசினார்.

கோலாலம்பூரில்மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் புதிய அலுவலக தொடக்க விழாவில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு பேசிய சரவணன் அதன் தலைவர் ரிஷிகுமாரின் முயற்சியை பெரிதும் பாராட்டினார்
“தமிழ்ப் பள்ளி மாணவர்களிடம் சமய அறிவைப் பரப்புவதற்கான முயற்சியை இப்போதே வலுப்படுத்த வேண்டும்
என்று அவர் வலியுறுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் மேலும் உரையாற்றிய அவர், சமயத் துறையில் ரிஷிகுமார் மேற்கொண்டு வரும் பணிகளைப் பாராட்டினார். சாதகமான சூழல் நிலவும்போதே அடுத்த தலைமுறைக்குத் தேவையான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் இந்தியச் சமுதாயத்தின் வாக்காளர் பலமும் அரசியல் பலமும் குறையக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்திய சரவணன், தற்போதுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி மொழி, சமயம் மற்றும் கல்விக்கான நிலையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

பிரம்மாண்ட கோபுரங்களோடுஆலயங்களைக் கட்டுவதைவிட குழந்தைகளுக்கு வழிபாட்டு மரபுகளையும் சமய இலக்கியத்தையும் கற்பிப்பது அவசியம் என்று அவர் தெரிவித்தார். தமிழ் மொழியும் சைவ மரபும் பிரிக்க முடியாதவை எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் பள்ளிகள் சமய அறிவைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்ற முடியும் என்றார்.
ஆசிரியர்களின் நிர்வாகப் பணிச்சுமையையும் சுட்டிக்காட்டிய சரவணன், மாணவர்களுக்குச் சமயக் கல்வியைத் தொடர்ந்து வழங்க உரிய திட்டமும் ஆதரவும் தேவை எனத் தெரிவித்தார்.
ரிஷிக்குமார் முன்னெடுத்துள்ள முயற்சி அடுத்த தலைமுறைக்குப் பயனளிக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.


