Sunday, September 13, 2026

சிறார் நூல் வெளியீட்டு விழாவில் காவி வள்ளுவர்: -பச்சையான தமிழ்த் துரோகம்!

உலகின் மூத்த குடி தொல் தமிழினத்தின் பெருமையையும் தலையாய செம்மொழியாம் தமிழ் மொழியின் மேன்மையையும் சிதைக்கின்ற கூட்டம் அவ்வப்பொழுது முளைத்துக் கொண்டே இருக்கிறது.

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிற இந்து சமயத்தில் திருவள்ளுவரின் அடையாளத்தைக்கூட தமிழிய எல்லையில் விட்டு வைக்காமல் அதையும் வளைக்கப் பார்க்கிறது இந்த சனாதன அடிமைக் கூட்டம்.

இது அப்பட்டமான வெட்கம்கெட்ட செயல்; மாசு மறுவற்ற தமிழ்த் துரோகம்.

நல்ல தமிழச்சியின் மடியில் பால் குடித்த எவரும் இத்தகைய இழிச் செயலை ஏற்கமாட்டார்.

‘நித்திரைக் கதைகள்’ என்னும் பெயரில் சிறுகதைத் தொகுப்பு நூல் நேற்று கோலாலம்பூர் தேசிய நூலக வளாகத்தில் நடைபெற்றது; இந்த நூல் சிறார் சிறுகதை சம்பந்தப்பட்டது.

இந்த நூற் தொகுப்பு குறித்து உள்ளத்தில் அச்சம் எழுந்துள்ளது. கணியன் பூங்குன்றனார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற செம்மாந்த சொற்றொடருக்குரிய சமதர்ம கருத்து இந்த சிறார் இலக்கியத்தில் இருக்குமா என்ற ஐயம் எழுகிறது.

தவிர இந்த மலையக மண்ணுக்கேரிய சமதரும சிந்தனை, சமய நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, ஆன்மீக நன்னெறி, மொழிப் பற்று ஆகியக் கூறுகளைவிட சனாதன – பார்ப்பனிய மேலாதிக்கக்
கருத்து இதில் பொதிந்திருக்குமோ என்ற ஐயம் இயல்பாகவே எழுகிறது. இந்த நூல்களை முழுதுமாக படித்துப் பார்த்தால், உண்மை நிலை தெரியவரும்.

ஆனாலும் இதன் முகப்பிலேயே இதனுடைய தன்மை ஓரளவுக்கு வெளிப்பட்டது; மொழிச் சிதைவு, இலக்கண பிழை உள்ளிட்டவை இதில் மலிந்து இருக்கக்கூடிய சாத்தியத்தை அது பறைசாற்றியது; இது சிறார் கையில் சிக்குவதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த சிறார் இலக்கியப் படைப்பு வெளியீட்டு விழாவில் சிறப்பு பிரமுகர்களுக்கு பட்டயமும் திருவள்ளுவர் உருவச் சிலையும் வழங்கப்பட்டன.

அந்த திருவள்ளுவர் சிலைகள், திருக்குறளையும் திருக்குறளை இயற்றிய ஐயன் வள்ளுவனையும் தமிழிய எல்லையில் இருந்து பெயர்க்க முனையும் தமிழ்த் துரோக கூட்டத்தின் ஒரு கூறாக வள்ளுவர் சிலைகளுக்கு காவி வண்ணம் பூசப்பட்டிருந்தது.

ஏறக்குறைய ஒரு மாமாங்க காலத்திற்கு முன்பு சிவநேயச் செல்வர்;தமிழ் வழிபாட்டை முன்னெடுப்பவர்; திருமுறை வழிபாட்டில் பாரிய பற்றுடையவர்; தகவல் துறையில் பணியாற்றி பரந்த அனுபவம் பெற்றவர்; கிள்ளானைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கந்தசாமி என்னும் சிவனடியாரின் தலைமையில் உள்ள நால்வர் மையத்தின் சார்பில் திருமுறை விழா நடைபெற்றது.

2013 ஆம் ஆண்டு தலைநகரத்து செராஸ் பிஜிஆர்எம் மண்டபத்தில் நடைபெற்ற அந்தத் திருமுறை விழா உள்ளத்தைத் தொட்டது.

“அம்மையே அப்பா” என்று பரம்பொருளாம் உமையொரு பாகனையும் உலகாளும் அன்னை உமையவளாம் பரமனொரு பாகியையும் ஒரு சேர வணங்கும் திருமுறையைப் போற்றவும் சைவ சிந்தனையாளர் ஒருவர், தான் இறந்த பிறகு தனக்காக மற்றவர்கள் திருமுறையை ஓதுவதைவிட தான் வாழும் காலத்திலேயே விழித்திருக்கும் வேளைதோறும் திருமுறையை ஓதி உணர்ந்து பரமனருள் நாட வேண்டும் என்னும் ஆன்மீக விழிப்புணர்வையும் ஏற்படுத்திய அந்த விழா மொத்தத்தில் தமிழ் வழிபாட்டை முன்னிறுத்தியது.

ஏராளமானோரின் ஆதரவையும் பெற்றது அவ்விழா.


இதனால் சம்பந்தப்பட்ட விழாக் குழுவினர் மேலும் ஆக்கமும் ஊக்கமும் பெறுதலுக்கு பதிலாக உள்ளத்தில் தினவெடுத்தனரோ என்னவோ அடுத்த ஆண்டு அவர்கள் முன்னெடுத்த திருமுறை விழாவின்பொழுது திருமுறையை, ‘தமிழ்மறை’, ‘தமிழ் மறை’ என்று முழங்க ஆரம்பித்தனர்.

ஊடக அறிக்கையும் விட்டனர்; செய்தியாளர் சந்திப்பும் நடத்தினர்.

இதனால் தமிழ் ஆர்வளரிடையே தேசிய அளவில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் மறை என்பது திருக்குறளுக்கு உரிய பெயர்; அதை ஏன் திருட வேண்டும்? திருமுறையை திருமறை என்பது சிறுமையாக இருக்கிறதோ என்றெல்லாம் கருத்து பரிமாறப்பட்டது.

2014ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் கோலாலம்பூர் கலா மண்டபத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அந்த திருமுறை விழாவில் பேசியவர்கள் கூட திருமறை தமிழில்தானே இருக்கிறது? அதனால் அதை தமிழ் மறை என்று சொல்லலாம் என்றெல்லாம் குறிப்பிட்டனர். தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த முனைவர் சிவக்குமார் என்பார்கூட திருமுறையை தமிழ் மறை என அழைப்பதற்கு சப்பைக்கட்டு கட்டினார்.

இதன் தொடர்பில் அன்றைய தினக்குரல் நாளேட்டில் திருமுறையின் பெருமையையும் தமிழ் மறையின் மேன்மையையும் குறிப்பிட்டு திருமுறை திருமறையாகவே இருக்கட்டும்; திருக்குறள் தமிழ் மறையாகவேத் தொடரட்டும்; திருமுறை விழா நடத்துவோர் வள்ளுவத்தின் பெயரைக் களவாட வேண்டாம் என்றெல்லம் செய்தி வெளியானது

அதிலிருந்து இதுவரை ஒரு மாமாங்க காலம் – 12 ஆண்டுகள் முடிந்து விட்டன. அத்தகைய திருமுறை விழா நடத்தப்படவே இல்லை.

அதுபோல சிறுவர் இலக்கியப் படைப்பு வெளியீட்டு விழாவில் வள்ளுவத்திற்கு சிறுமை சேர்த்த இந்தக் கூட்டத்தின் முயற்சி இத்தோடு அடிபட்டுபோகட்டும்; காலமகள் கண் வைக்கட்டும்!

முயற்சி மெய் வருத்த கூலி தரும்;

உள்ளத்து அனையது உயர்வு;

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்;

என்றெல்லாம் சொல்லி உள்ள திருவள்ளுவர் ஒருகட்டத்தில்..,

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் – பரந்து
கெடுக உலகியற்றியான்
(1062-ஆவது குறள்; அதிகாரம்: இரவச்சம்)

என்று இறைவனுக்கே சாபம் விட்டுள்ளார்;

ஒரு மனிதன் பிச்சை எடுத்து வாழ வேண்டிய நிலை ஏற்படுமாயின் அத்தகைய உலகத்தைப் படைத்த இறைவனே கெட்டு ஒழியட்டும் என்று ஆண்டவனையே சபித்துள்ளார் வள்ளுவர்.

இப்படி நிலம் கடந்து நீர் கடந்து எல்லா உயிர்களுக்குமான பொதுவான அறநெறி கருத்துகளை உள்ளடக்கி, மாந்தநேய இலக்கியம் படைத்த திருவள்ளுவரை எந்த மதத்தினரும் சொந்தம் கொண்டாட முயலக் கூடாது.

உதாரணத்திற்கு திருக்குறளை தேசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதை ஒரு மலாய் மாணவரிடம் கொடுத்தாலோ அல்லது மெண்ட்றின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதை ஒரு சீன மாணவரிடம் கொடுத்தாலோ அதை படிப்பவர்கள் இந்த இலக்கியத்தின் மூலம் எதுவென்றோ எந்த மொழியில் இயற்றப்பட்டது என்பதையோ கண்டறிய முடியாது. காரணம் அதில் எந்த இன – மொழி அடையாளமோ, குறிப்பாக தமிழன்-தமிழ் என்ற அடையாளம் எங்ஙனும் இல்லை.

அத்தகைய பொதுமறை படைத்த திருவள்ளுவரின் வெள்ளாடையை மறைத்து காவி ஆடை புணைய வேண்டிய கருங்காலித்தனம் ஏன் அவ்வப்பொழுது துளிர்க்கிறது?

அண்ணல் காந்தியடிகள் 1920-ஆம் ஆண்டுகளில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அதற்கு தலைமை ஏற்கும்முன், அவர் அமெரிக்காவில் ஒரு வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் ரஷ்ய தத்துவ மேதையும் அரசியல் ஞானியுமான வில்லியம் டால்ஸ்டாயுடன் அவருக்கு எப்படியோ தொடர்பு ஏற்பட்டு அவருடன் கடிதத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

வழக்கறிஞர் தொழிலில் ஈட்டிய பணத்தைக் கொண்டு தென் அமெரிக்காவில் தான் வாங்கிய தோட்டத்திற்கு டால்ஸ்டாயின் பெயரையே சூட்டியதுடன், இது குறித்த தகவலையும் குறிப்பிட்டு இந்த தோட்டத்தை பார்க்க தாங்கள் ஒரு முறை வர வேண்டும் என்று டால்ஸ்டிராய்க்கு காந்தி கடிதம் எழுதி இருக்கிறார்.

விவரம் அறிந்த டான்ஸ்டாய் அகமகிழ்ந்து காந்திக்கு எழுதிய பதில் மடலில் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து, வயது முதிர்ந்த தன்னால் தென்னாப்பிரிக்காவிற்கு அதுவும் நீண்ட தூரம் கடல்வழி பயணம் மேற்கொள்ள இயலாது என்று தன் ஆதங்கத்தையும் இயலாமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இற்றை நாட்களைப் போல அடுத்த வினாடியே தகவல் பரிமாறிக் கொள்வதோ விமான பயணம் என்பதோ இல்லாமல் தகவல் பரிமாற்றத்திற்கு அஞ்சல் வழி கடிதமும் நீண்ட தூர பயணத்திற்கு கடல்வழி கப்பல் பயணமும்தான் அதிக சாத்தியமாக இருந்த காலம் அது.

இப்படியே இருவருக்குமான நட்பு தொடர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் காந்தி, டால்ஸ்டாய் எழுதும் கடிதங்களில் வெளிப்படும் மாந்தநேய கருத்துகளையும் அறநெறிசார் கோட்பாடுகளையும் அறிந்து வியப்புக்கு ஆளாகி இருக்கிறார்.

ஒரு ஒரு கட்டத்தில் வெட்கத்தை விட்டு டான்ஸ்ட்டாயிடும் நேரடியாகவே
கேட்டிருக்-கிறார், காந்தி.

“ஐயா, தாங்கள் தனக்கு எழுதும் மடல்களில் புதுமையான கருத்துக்களை ஏராளமாக தொடர்ந்து குறிப்பிடுகிறீர்கள். இந்தக் கருத்தையெல்லாம் தாங்கள் எப்படி அறிந்தீர்கள்? எங்கிருந்து பெறுகிறீர்கள்? எத்தகைய இலக்கியத்தை படிக்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்.

காந்தி எழுதிய மடல் 15 நாட்களுக்கு பிறகு டால்ஸ்டாய்க்கு சேர்ந்து இருக்கிறது. அதற்கு அவர் எழுதிய பதில் அடுத்த 15 நாள் கழித்து காந்திக்கு சென்றது. ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு தான் எழுதிய கடிதத்திற்கு பதில் வில்லியம் டால்ஸ்டாயிடமிருந்து பதில் வந்து சேர்ந்தது.

” அன்புள்ள காந்தி, உங்களுடைய இந்திய நாட்டின் தென்பகுதியில் தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் என்ற நூலில் இருந்துதான் இத்தகைய கருத்துகளை நான் பெற்றேன். திருவள்ளுவர் என்பார் எழுதிய திருக்குறளின் ஜெர்மனி மொழிபெயர்ப்பு எனக்கு கிடைத்தது. அதைச் செய்தவர் கால்டுவெல் போப் என்னும் பாதிரியார் என்றெல்லாம் காந்திக்கு தகவல் தெரிவித்திருக்கிறார் வில்லியம் டால்ஸ்டாய்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழைக் கற்று தமிழின் மேன்மையில் மூழ்கி தமிழர்தம் வாழ்வின் பாரம்பரியத்திலும் சிக்குண்டு தமிழராகவே வாழ ஆரம்பித்தார் கால்டுவெல்.

இவரே, தமிழ் இலக்கியங்களையும் படைத்தார்; அவர்தான் திருக்குறளையும் திருவாசகம் என்னும் பக்தி இலக்கியத்தையும் தமிழின் எல்லையில் இருந்து உலகம் மொழிகளுக்கு பரப்பியவர்.

அப்படிப்பட்ட சூழலில் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படித்துதான் இத்தகைய கருத்தை நான் தெரிந்து கொண்டதாக டால்ஸ்டாய் சொன்னதைக் கேட்டு வியந்த காந்தி அடுத்த சில நாட்களில் பாரதியாருக்கு இது குறித்து கடிதம் எழுதி விவரம் கேட்டிருக்கிறார்.

பாரதியாரிடம் இருந்து பதிலைப் பெற்று டால்ஸ்டாயின் கருத்தை சரிபார்த்துக் கொண்ட காந்தி, அடுத்தப் பிறவி என்று ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறந்து திருக்குறளை அதன் மூல வடிவத்தில்- தமிழிலேயே படிக்க விரும்புகிறேன் பாரதி என்றெல்லாம் பதில் எழுதிய வரலாற்றை திருவள்ளுவரின் திருவுருவத்திற்கு காவி சாயம்பூச முனைவோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை போலும்.

அறிந்திருந்தால் இவ்வாறான அடியறுப்பு-திருகுதால வேலையை செய்ய முனைவரோ?

வளரும் இளம் தலைமுறையினருக்கு – பிஞ்சு உள்ளத்தினருக்கு காவி வள்ளுவரை அறிமுகம் செய்வது தமிழ்த் துரோகம்; தமிழருக்கு இழைக்கும் வஞ்சகம்.

எல்லாவற்றுக்கும் கணக்குத் தீர்க்கும் தருணத்தை காலமகள் தீர்மானித்திருப்பாள்! பொறுத்திருப்போம்!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை