Saturday, September 12, 2026

பொன்.வேதமூர்த்திமீது தேச நிந்தனைச் சட்டம் பாய்கிறது: -வரும் திங்கட்கிழமை புக்கிட் அமானில் விசாரணை!

தேச நிந்தனைச் சட்டம்(Sedition Act), தண்டனைச் சட்டம்-505ஆவது பிரிவு-உட்பிரிவு(பி), தகவல் தொடர்பு பல்லூடகச் சட்டம் 233-ஆவது பிரிவு ஆகியவற்றின்கீழ் விசாரணை மேற்கொள்வதற்காக, வரும் திங்கட்கிழமை செப்டம்பர், 14ஆம் நாள், தேசிய காவல் படை தலைமையகம்-புக்கிட் அமானிற்கு வருமாறு தனக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பாஸ், அம்னோ கட்சிகளின் தலைவர்களுக்கு இவர் எழுதிய ஒரு வெளிப்படையான கடிதம் தொடர்பாகவே இந்த விசாரணை என்று சட்ட வல்லுநருமான இவர், இதன் தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொன்.வேதமூர்த்தி கடிதம் அனுப்பிய இரு கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, தற்போதைய ‘ஒற்றுமை அரசாங்கத்தில்’ துணைப் பிரதமராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய விசாரணைக்குரிய செயல். கடந்த ஆண்டே நடைபெற்றிருக்கும் நிலையில், இப்போது ஏன் விசாரணை என்றும் இத்தகைய திடீர் விசாரணைக்கான காரணம், அந்தக் குற்றச்சாட்டுக்குரிய செயலா அல்லது தற்போதைய அரசியல் சூழலா என்றும் ஹிண்ட்ராப் தலைவருமான இவர் கேள்விக் கணைகளை அடுக்கியுள்ளார்.

“இந்த விசாரணை சாதாரண மாவட்ட அளவில் நடைபெறாமல், புக்கிட் அமான் D5 பிரிவின் கீழ் உள்ள ‘குற்றவியல் விசாரணைப் பிரிவு'(USJT) மூலம் கையாளப்படுவதால், இது கவலைக்குரிய விசயமாக பார்க்கப்படும் அதேவேளை, அரசியல் தாக்கம் கொண்ட சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் ஒரு தனிப் பிரிவின்கீழ் நடைபெற இருக்கும் இந்த விசாரணை, வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது”.

பாஸ், அம்னோ தலைவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு எழுதப்பட்ட அரசியல் சார்ந்த வெளிப்படையான அக்கடிதத்தில், இந்த ஆண்டில் சிறப்பு மத்திய விசாரணைப் பிரிவின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு அப்படி என்னதான் இருக்கிறது? அல்லது எந்தத் தரப்பிற்கு அச்சமோ, பதற்றமோ ஏற்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் பொன்.வேதமூர்த்தி வினவியிருக்கிறார்.

“இந்த நடவடிக்கையின் நேரம்(timing), தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அரசாங்கம் அரசியல் பின்னடைவுகளையும் பொதுமக்களின் அதிருப்தியும் எதிர்கொண்டிருக்கும் இந்தவேளையில், எதிர்த்தரப்பு அரசியல் தலைவர்-களுக்கு எதிரான குற்றவியல் விசாரணைகளும் வழக்குகளும் பெருகிவருவது போல் தெரிகிறது”.

அரசியல் கருத்து வேறுபாடுகளைக் குற்றவியல் சட்டத்தின் மூலம் எதிர்கொள்ள வேண்டிய அளவுக்குப் பிரதமர் இப்போது அரசியல் ரீதியாகப் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறாரா என்றும் அவர் கேட்டிருக்கிறார்.


ஒருவேளை, மலேசிய இந்தியர்களிடையே அதிகரித்து வரும் ஏமாற்றத்தைக் கண்டு அரசாங்கம் கவலைப்படலாம்; கடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் தலைமை வகிக்கும் மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர், அமானா கட்சிகள் 39 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்வதற்கு இந்திய சமூகத்தின் தேர்தல் ஆதரவு மிக முக்கியமானதாக இருந்தது.

தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்று கேள்விகேட்க இந்திய வாக்காளர்களுக்கு உரிமை உண்டு. அவர்களின் வாக்குகள் பிரதமருக்கோ அல்லது பிகேஆர் மற்றும் ஜசெக கட்சிகளுக்கோ அல்லது வேறு எந்த அரசியல் கூட்டணிக்கோ நிரந்தர சொத்து அல்ல.

இந்தியர்களின் ஆதரவை இழக்க நேரிடுமோ என்று பிரதமர் அஞ்சினால், அதற்கான தீர்வு மிகவும் எளிமையானது என்று தெரிவித்துள்ள பொன்.வேத மூர்த்தி, இந்திய சமுதாயத்தின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்; அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்; அதன்மூலம் இந்திய வாக்காளர்-களின் நம்பிக்கையை மீண்டும் பெறலாம் என்று ஆலோசனையும் தெரிவித்துள்ளார்.

இதைவிடுத்து, விமர்சனங்களுக்காக தேச நிந்தனைச் சட்டத்தின் மூலம் பதிலளிக்கத் தேவையில்லையென்று கேட்டுக் கொண்டுள்ள முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, நீதி, கண்ணியம், இந்நாட்டின் குடிமக்கள் என்னும் வகையில் சம அந்தஸ்து ஆகியவற்றிற்காக மிக நீண்ட காலமாகக் காத்திருக்கும் ஒரு சமூகத்தின் சார்பாகக் குரல் கொடுப்பதிலிருந்து எந்த விசாரணையும் தன்னை மௌனமாக்க முடியாது என்றும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை