Saturday, September 12, 2026

தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தின் சமூக – பொருளாதார மறுமலர்ச்சித் திட்டங்கள்!

இந்த கூட்டுறவு அமைப்பில் 2030க்குள் 30% அளவிற்கு இளைஞர்களை இணைக்க திட்டம் வகுத்து அதன்படி செயல்படுவதாக இந்த கூட்டுறவு அமைப்பின் தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

“கேகேபி தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம் சொத்துடமைகளைப் பெருக்க புதிய திட்டங்களை வகுத்துள்ளன”.

கேகேபி தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்க வாரியத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காட்டு இளைஞர்களை இணைத்து, சங்கத்தின் எதிர்கால நிர்வாகத்தில் இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் என்.எஸ். தங்கராஜ் தெரிவித்தார்.

சங்கத்தின் செயல்பாடுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தென் கொரியாவைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பினரும் தங்களது கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள், நிர்வாக முறைகள் மற்றும் உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கேகேபி தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, உறுப்பினர்களின் பங்களிப்பு எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது, சங்கத்தின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தென் கொரியக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் கேட்டறிந்தனர்.

அவர்களின் கேள்விகளுக்கு சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் விளக்கங்களை வழங்கியதுடன், சங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

கூட்டுறவுச் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி-யில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்திய தங்கராஜ், புதிய தலைமுறையினரை நிர்வாகத்தில் கொண்டு வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப் படுவதாகவும் கூறினார்.

அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் சங்கத வாரியத்தில் 30 விழுக்காட்டு இளைஞர்களை இணைப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்களின் புதிய சிந்தனை, தொழில்நுட்ப அறிவு மற்றும் நிர்வாகத் திறனை தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க வளர்ச்சியுடன் இணைப்பதன் மூலம் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளை, சங்கத்தின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் வகையில் சொத்துடமையை அதிகரிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தங்கராஜ் தெரிவித்தார்.

குறிப்பாக, எதிர்காலத்தில் நிலங்களை வாங்குவதற்கான திட்டம் இருப்பதாகவும், சங்கத்தின் சொத்து மதிப்பை அதிகரிக்கும் வகையில் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அங்கத்தினர்களின் கூட்டுப் பங்களிப்பின் மூலம் கட்டடங்கள் மற்றும் பிற சொத்துகளை வாங்கி, அதன் மூலம் அங்கத்தினர்களையே அந்தச் சொத்துகளின் உரிமையாளர்களாக மாற்றும் வகையிலான திட்டமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் சங்கத்தின் வளர்ச்சியுடன் அங்கத்தினர்களும் நேரடியாகப் பயனடையும் வாய்ப்பை உருவாக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவு என்பது அங்கத்தினர்களின் ஒற்றுமை மற்றும் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு என்பதால், சங்கத்தின் அனைத்து திட்டங்களிலும் உறுப்பினர் அனைவரும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றும் தங்கராஜ் கேட்டுக்கொண்டார்.

சங்கத்தின் வளர்ச்சி, நிர்வாகிகளின் முயற்சியால் மட்டும் சாத்தியமில்லை என்றும், ஒவ்வோர் உறுப்பினரின் ஆதரவு, பங்களிப்பு மற்றும் ஈடுபாடு யாவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் சங்கத்தை மேலும் வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட கூட்டுறவு நிறுவனமாக உருவாக்குவதுடன், அதன் வளர்ச்சியின் பயன்கள் அனைத்து அங்கத்தினர்களையும் சென்றடையும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தின் செயலாளர் நாச்சிமுத்து உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை