Saturday, September 12, 2026

இந்து சமய-ஆலயத் தலைவர்கள் புக்கிட் அமானில் அணி திரண்டனர்!

பகாங் புக்கிட் திங்கி பிரம்மரிஷி மலைக்கோயில் சாமி சிலைகள் உடைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட கருங்காலியரை-காலாடியரை உடனே கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய போலீஸ் தலைமையகம்-புக்கிட் அமானில் இன்று கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.

மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் பிரம்மரிஷி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வனத் துறைக்கு சொந்தமான நிலமோ அல்லது அரசாங்க நிலமோ, புறம்போக்கு நிலமோ கிடையாது.

தனியாருக்கு சொந்தமான நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. நில உரிமையாளரும் பிரிம்மரிஷி மலைக்கோயில் செயல்படுவதற்கு நல்லெண்ண அடிப்படையில் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இந்த ஆலயம் சீராக இயங்கிவந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள், அடையாளம் தெரியாத யாரோ சில போக்கிரியர், சம்பந்தப்பட்ட ஆலய வளாகத்தில் நுழைந்து அங்குள்ள சாமி சிலைகளை உடைத்து சேதம் ஏற்படுத்தினர்.

இதன்தொடர்பில் அப்போதே கோம்பாக் மாவட்ட தலைமைக் காவல் நிலையம், செந்தூல் மாவட்ட தலைமைக் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலயத் தரப்பினர் சார்பில் அதிகமான புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று செப்டம்பர் 10, வியாழக்கிழமை தேசிய காவல்படை தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டது.

சமூக-சமய ஆர்வலரும் மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஸ்ரீ ரமேஷ் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது

மலேசிய இந்து தரும மாமன்றத் தலைவர் . ரிஷி குமார், தாப்பா அருள்மிகு ஜெகநாதர் ஆன்ம நிலைய நிர்வாகி மகேந்திரன், ஏராளமான ஆலய தலைவர்கள் இந்து சமய ஆர்வலர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் புக் இட் அமான் தலைமையகத்தின்முன் திரண்டனர்.

புக்கிட் அமான் முன் பதாகையுடன் திரண்டவர்கள் சங்கு முழக்கத்துடன் திருமுறை பாடிக் கொண்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி நேரில் வந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ரிஷிக்குமார் இந்த நாட்டில் அமைதியாக வாழ்கிறோம்; சமய-சமூக நல்லிணக்கத்தைப் பேணி சட்டத்தை மதித்து அமைதியாக வாழ்கின்ற இந்து மக்களின் வழிபாட்டு தலங்களையும் வழிபாட்டுத் தலகங்களில் இருக்கின்ற சிலைகளையும் ஏன் உடைக்க வேண்டும் என்று வினாத் தொடுத்தார்.

தொடர்ந்து பேசிய ரமேஷ், இந்துக்களின் வழிபாட்டு தலங்களை பொத்தாம் பொதுவாக ‘கோயில் ஹராம்’ -சட்டவிரோதமானது என்று கூறுவது பொருத்தம் இல்லாதது நியாயம் இல்லாதது.

தொடக்கத்தில் அவ்வாறு குறிப்பிட்ட பிரதமரே வருத்தம் தெரிவித்த பின்னரும் ஒரு சில தரப்பினர் இன்னமும் இந்து வழிபாட்டுத் தலங்களை ‘கோயில்ஹராம்’; ‘கோயில்ஹராம் என்று சொல்லி இழிவு படுத்துகின்ற நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முக்கியமாக பகான் புக்கிட்திங்கி பிரம்மரிஷி ஆலய
வளாகத்தில் இருந்த சாமி சிலைகளை உடைத்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முயற்சியை தேசிய போலீஸ் படைத்த தலைவர் உடனே மேற்கொள்ள வேண்டும் என்று ரமேஷ் மேலும் வலியுறுத்தினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை