
கோலாலம்பூரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசியான் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிரதமர் அன்வார் அழைப்பது போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கை-களுக்கு டிரம்ப் தொடர்ந்து உடந்தையாக இருப்பதை மலேசியாவும் ஆசியானும் நியாயப்படுத்துவதாகும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன். வேதமூர்த்தி எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடுநிலைத் தலைவராக இல்லை. பாலஸ்தீன மோதலில் இஸ்ரேலுக்கு நேரடி ஆதரவு அளித்துவரும் அவர் பாலஸ்தீன மக்களின் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த அவர் அக்கறைப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, பாலஸ்தீன மக்களை எகிப்து போன்ற நடுகளுக்கு குடியேறும்படியும் சொன்னார். எனவே, டிரம்பை அழைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இன்று அன்வாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நாட்டின் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பது, பாலஸ்தீன அகதிகளுக்கான உதவியைக் குறைப்பது, பன்னாட்டு அரசியலில் இஸ்ரேலைத் தற்காப்பது, பாலத்தீன மக்களை படுகொலை செய்து சொத்துக்களை அகற்றுதல் என்றெல்லாம் இஸ்ரேலுக்கு முட்டு-கொடுக்கும் அமெரிக்கா, கடந்த வாரம் நடைபெற்ற ஐ.நா. பொதுப்பேரவையில்-கூட அதிபர் மகமுது அப்பாசிற்கு விசா வழங்க மறுத்து அவர் உரையாற்ற முடியாதபடி செய்துவிட்டது.
2023 அக்டோபர் முதல் இதுவரை காசாவில் 65,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டுள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் ஆவர்; காசாவின் மருத்துவமனைகள் அழிக்கப்பட்டு அங்குள்ள சுகாதார அமைப்பும் சீர்குலைக்கப்பட்டுள்ளது
மலேசியா எப்போதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இடை-யில், பிரதமர் அன்வார், பாலஸ்தீனத்-தைப் பாதுகாப்பது நமது புனிதமான கடமை என்று ஐநா மன்றத்திலும், OIC போன்ற அமைப்புகளிலும் ஏற்கெனவே பேசியுள்ளார். இஸ்ரேலுடனான உறவைக்கூட மலேசியா முறித்துக் கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட இஸ்ரேலின் அட்டூழியங்களை வெளிப்படையாக ஆதரிக்கும் டொனால்ட் டிரம்பை மலேசியா எதற்காக அழைக்க வேண்டும்? வரவேற்க வேண்டும் என்று வினாத் தொடுத்துள்ள பொன். வேதமூர்த்தி, வெளிநாட்டில் ஒன்றைப் பேசிவிட்டு, உள்நாட்டில் வேறுவிதமாகப் பேசும் பாசாங்கு தனத்தையும் டொனால்டை வரவேற்கும் முடிவையும் கைவிடும்படி மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.


