
இந்திரா காந்தி தன் மகளை மீட்டுத்தருமாறு மேற்கொண்ட பேரணியில் தேசிய போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) டத்தோஸ்ரீ காலிட் இஸ்மாயில் முன்னிலை ஆகாதது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் காவல்துறையின் முனைப்பின்மையையும் சுஹாகாம்-மலேசிய மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.
கடந்த சனிக்கிழமை நவம்பர் 22-ஆம் நாள், ஐஜிபி காலிட் இஸ்மாயிலைச் சந்திக்கும் நம்பிக்கையில் மு. இந்திரா காந்தி, அவரின் இரண்டு பிள்ளைகள் மற்றும் ஆதரவாளர்க் குழுவினர், தேசிய காவல்படை தலைமையகமான புக்கிட் அமானுக்குச் செல்லும் சாலையில் காத்திருந்தனர்.
மேநாள் கணவனால் கடத்திச் செல்லப்பட்ட மகளுக்குப் பிடித்த பொம்மைக் கரடியுடன் மேற்கொள்ளப்பட்ட அந்த அணிவகுப்பின் நிறைவில் இந்திரா காந்தியைச் சந்திக்கத் தவறிய காவல் துறைத் தலைவர் காலிட் இஸ்மாயிலின் நடவடிக்கை ‘முழு ஏமாற்றத்தை’ அளிக்கிறது என்று மலேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈப்போ உயர்நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பை அமல்படுத்தவும் இந்திராவின் முன்னாள் கணவரால் 2008 இல் ஒருதலைப் பட்சமாக அழைத்துச் செல்லப்பட்ட மகள் பிரசன்னா திக்சாவை மீட்டு, தாயிடம் ஒப்படைக்க வேண்டிய சட்டப்படியான கடமையையும் தார்மீகப் பொறுப்பையும் நிலைநாட்ட தேசிய காவல் படை உறுதி கொண்டிருக்க வில்லை என்னும் தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் சுஹாகாம் தெரிவித்துள்ளது.
ஒரு தாயின் 16 ஆண்டுகால போராட்டத்தையும் நீதிமன்றங்களால் நிலைநிறுத்தப்பட்ட நியாயம்-உரிமையை, இந்திரா காந்தி மேற்கொண்ட அண்மையை ஜனநாயக அணுகுமுறை மீண்டும் எடுத்துக் காட்டியது.
‘மனசாட்சியின்படி நடந்துகொள்ள வேண்டிய தார்மிக பொறுப்பும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய கடமையும் ஐஜிபி-க்கு உள்ளது. நீதித்துறை உத்தரவை அமல்படுத்துவதில் ஏதேனும் பின்னடைவு அல்லது தாமதம் ஏற்பட்டால் அது சட்ட அமலாக்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும்’ என்றும் சுஹாகாம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திரா, 100க்கும் மேற்பட்டோருடன் பங்கேற்ற பேரணியை வழிநடத்தி, தன் முன்னாள் கணவர் ரிடுவான் அப்துல்லாவால் கடத்தப்பட்ட பிரசன்னாவைக் கண்டுபிடிக்கும்படி காவல்துறையை வலியுறுத்தினார்.
அதேநாளில் ஐஜிபியைச் சந்தித்து இந்தச் சிக்கல் தொடர்பான கோரிக்கை மனுவை ஐஜிபி-யிடன் நேரில் வழங்கவும் முனைப்பு காட்டினர். அது முடியாத நிலையில், சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த துணை அமைச்சர் மு. குலசேகரன், காலிட்டுடனான சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

கே.பத்மநாதன் என்னும் முகமது ரிடுவான் கடைசி மகள் பிரசன்னாவை, ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றியது தொடர்பான சட்டப் போராட்டத்தில் தோல்வியடைந்த பிறகு, மகளைத் திருப்பி அனுப்பத் தவறிவிட்டார்.
2009ஆம் ஆண்டில் தாய் இந்திராவின் அனுமதியோ ஒப்புதலோயின்றி, மூன்று குழந்தைகளையும் ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றிய ரிதுவான், ஷரியா நீதிமன்றத்தையும் நாடினார்.
2018 ஜனவரி 29இல், இந்த மதமாற்றங்கள் செல்லாது என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது; பிரசன்னாவை தாயிடம் திரும்ப அனுப்பும்படியான உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ரிதுவானைக் கைது செய்யும்படியும் ஐஜிபிக்கு உத்தரவிட்டது.
கடைசியாக, நவம்பர் 21 அன்று ஈப்போ உயர் நீதிமன்றம், ரிதுவானைத் தேடும் பணியை விரிவுபடுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது; நீதிபதி நோர்ஷரிதா அவாங், இது நாடு முழுவதும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஐஜிபி-யும் காவல்துறையினரும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு சுஹாகாம் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது; சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற நாட்டில் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதிலிருந்து தவறுவது, நீதி-சட்ட நிருவாகத்தின் மீதான பொது நம்பிக்கையை சீர்குலைக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை ஐஜிபி என்னும் உயரிய பொறுப்பில் உள்ள காலிட்டிற்கு இருக்கிறது என்றும் பிரசன்னாவைக் கண்டுபிடித்து அவள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து முயற்சியையும் காவல் படை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுஹாகாம் வலியுறுத்தி உள்ளது.
‘ஒரு குழந்தையின் உரிமையும் நலனும் எல்லா வகையாலும் நிலைநிறுத்தப்பட வேண்டும்’.
அதேவேளை, இந்திரா, அவரின் சட்டக் குழுவினர், இந்த விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ள பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த சட்டப் பயணம் குறித்த தொடர்த்தகவலைப் பெறுவதுடன் வெளிப்படையான தொடர் அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்; மாறாக, திடீர் நடவடிக்கை அடுத்து மௌனம் என்னும் அணுகுமுறையும் போதுமான தகவல் தொடர்பு இல்லாததும் அவநம்பிக்கையையும் பதற்றத்தையும் அதிகரிக்கும் என்று என்று சுஹாகாம் அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.
காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகள் உடனடியாகவும் வெளிப்படையாகவும் சட்டத்தின் விதிக்கு இணங்கவும் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கு நீதித்துறை, சட்ட அமலாக்கம் மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு இடையேயான பயனுள்ள ஒத்துழைப்பு மிக முக்கியம் என்பதையும் இந்திரா காந்தி தொடர்பாக மலேசிய மனித உரிமை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நன்றி – FMT


