
-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.30:
மலேசியர்களுக்கு இரண்டு அம்சங்கள் மிகவும் பிடிக்கும்; அவற்றின் ஒன்று விடுமுறை; அடுத்தது உணவு என்று அந்நாளைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் குறிப்பிட்டார் ஒருமுறை; இதைப்பற்றி மலேசியர்கள் ஏதும் ஆதங்கம் கொண்டதாகத் தெரியவில்லை; உண்மையைத்தானே அவர் சொல்கிறார் என்று கடந்து சென்றுவிட்டனர் போலும்;
ஒன்பது ஆண்டுகள் அவர் நாட்டை வழிநடத்திய காலத்தில், அவர் எந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், பொதுமக்களுக்கான உணவு உபசரிப்பு தாராளம்; தாராளம்.
தற்பொழுது அவர், சிறைச்சாலைக்கும் நிதிமன்றத்திற்கும் நடைபயின்று கொண்டிருந்தாலும், பொதுமக்கள் அதைக் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. பிரிம் உதவித் தொகை, ‘1 மலேசிய கிளினிக்’, UTC-நகரிய உருமாற்ற மையங்கள், MRT துரித தொடர்வண்டி சேவை, பி-40 பிரிவு மக்களுக்கான கரிசனம் யாவும் மக்கள் மனம் கவர்ந்தவை.
இன்றளவில், அவர் இன்னமும் மக்கள் விரும்பும் தலைவராகத்தான் இருக்கிறார். இதை அடிப்படையாக வைத்து, அரசியல் பகடைக்காய் நகர்த்தும் வேலையை பாஸ் கட்சி அற்புதமாக மேற்கொண்டுள்ளது. காலமறிந்து பாஸ் கட்சி மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கையை அரசியல் சாதுரியம் என்பதா அல்லது அடுத்த நாடாளுமன்றம் காணும் அமைச்சரவையில் தான் எப்படியும் இடம்பிடித்துவிட வேண்டும் என்ற பதவி வேட்கையை வெளிப்படுத்துகிறதா என்றும் தெரியவில்லை.
தேசிய அரசியல் மெல்லமெல்ல 16-ஆவது பொதுத் தேர்தலை நோக்கி நகர்கிறது. தற்பொழுது, முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவு என்னும் பெயரில் பாஸ் கட்சியும் அம்னோவும் பின்வாசல் பக்கம் கூடி குலாவுகின்றன.
தேசிய முன்னணியின் பெரிய அண்ணன் அம்னோவின் தளபதியான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடிக்கு, நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீதான ஆதங்கம் இன்னமும் தீரவில்லையெனத் தெரிகிறது.
‘உனக்கு நான்; எனக்கு நீ’ என்னும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டுக் குடும்பம் நடத்தும் இந்த வேளையில்கூட, அம்னோ சிலாங்கூர் மாநில பொருளாளராக இருந்தவரும் தற்பொழுது வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில் துறை அமைச்சராக இருப்பவருமான தெங்கு ஸப்ருல் அசீசைக் கவர்ந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட அன்வாரின் போக்கு பொருத்தமற்ற நடவடிக்கையாகவேப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், அம்பலப்பட்ட அன்வார், தற்பொழுது செய்வதறியாது தவித்து நிற்கிறார்.
பிகேஆர்(மக்கள் நீதிக் கட்சி) கட்சியும் அம்னோவும் சேர்ந்து அரசாங்கத்தை வழிநடத்தும் இவ்வேளையில், தெங்கு ஸப்ரூலை தன் கட்சியில் இணைத்துக்கொள்ள விரும்பிய அன்வார், முதலில் அம்னோவைவிட்டு விலகி, கொஞ்சகாலம் தனித்து இயங்கும்படி தெங்கு ஸப்ரூலுக்கு ஆலோசனை வழங்கி இருக்கலாம்; அதைவிடுத்து, அப்படியே கட்சிதாவ வைக்கும் நடவடிக்கையில் முனைப்பு காட்டியது, தன் கையை தானே சுட்டுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளியது;

இதனால், வெகுண்ட ஜாஹிட் ஹமிடி, தான் துணைப் பிரமராகப் பொறுப்பு வகிக்கிறோம் எனபதையும் பொருட்படுத்தாமல், நிகழும் ஒற்றுமை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு, அடுத்த பொதுத் தேர்தல் வரைதான் என்று ஒரேப் போடாக போட்டுவிட்டார்.
அதன் பிரதிபலிப்புதான், நஜீப்பிற்கான ஆதரவு என்னும் புள்ளியில் பாஸ் கட்சியையும் அம்னோவையும் இப்போது கரம்கோக்க வைத்துள்ளது.
2025 ஜனவரி 6-இல் நஜீப்பின் மேல்முறையீட்டு வழக்கு புத்ராஜெயாவில் நடைபெறும் நாளில், நூறு பேருந்துகள் மூலம் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டிவந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கையை பாஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.

இதற்கு ஒத்தூதும் அம்னோவோ, 118 பேருந்துகளுடன் தயார்ப்பட்டு வருகிறது. இந்த ‘118’ என்னும் எண், நஜீப் தொடர்புடையது. இதற்கு, பெர்சத்துக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அமானாக் கட்சியும் இதில் களம் குதித்துள்ளது சற்று வியப்புதான்.
பச்சை அலையையும் வலசாரி இன அரசியலையும் நோக்கி, இந்தக் கட்சிகள் ஒன்று சேர்கின்றநவோ என்ற கருத நிறைய இடமிருக்கிறது. எந்த நரி எந்தப் பக்கம் போனால் என்ன? எல்லாம் ஒன்றுதான் என்ற மனநிலையில் இருக்கும் மசீச-வும் மஇகா-வும் இந்த அணியில் இணைந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் நேராது;
மொத்தத்தில், அடுத்தப் பொதுத் தேர்தலில், பிகேஆரும் ஜனநாயக செயல் கட்சி(ஜசெக)யும் தனித்து விடப்படும் நிலை உருவாகுமோ என்று தற்போதைய அரசியல் போக்கு எண்ணிப்பார்க்க வைக்கிறது. பொறுத்திருப்போம் அடுத்தடுத்த அரசியல் காட்சிகளைக் காண.. .!


