Tuesday, July 28, 2026

டத்தோ தினாளனை ஆதரித்து மக்கள் சக்திக் கட்சி பிரச்சாரம்!

நெகிரி செம்பிலான் மாநில சட்ட மன்றத்திற்கு இன்னும் நான்கு நாட்களில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ‘எண் 24’ சிரம்பான் ஜெயா தொகுதியில் போட்டியிடுகின்ற டத்தோ இரா. தினாளனை ஆதரித்து மக்கள் சக்திக் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமை-யில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

தினாளன் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினருக்கான ஊதியம் அனைத்தையும் தொகுதி மேம்பாட்டிற்காகவும் தொகுதிவாழ் மக்கள் நலனுக்காகவும் செலவழிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

தவிர, தினாளன் வெற்றி பெற்றால் மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெறுவார் என்று தேசிய முன்னணித் தலைவர் உறுதி அளித்துள்ளார்.

எனவே, சிரம்பான் ஜெயா தொகுதியில் வசிக்கின்ற வாக்காளர் அனைவரும் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளனை ஆதரித்து தேசிய முன்னணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றிபெறும் நிலை உருவாகி உள்ளது; மேலும் மாநில ஆட்சியை தேசிய முன்னணி அமைக்கும் சூழலும் உருவாகி வருவதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

சிரம்பான் ஜெயா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர். தினாளனுக்கு ஆதரவாக மலேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இத்தேர்தல் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமானதாகும் என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் அரசு, குறிப்பாக சிரம்பான் ஜெயா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எந்தத் திட்டத்தையோ நடவடிக்கையையோ மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

“மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறனும் அனுபவமும் தேசிய முன்னணியிடம் உள்ளது. எனவே இந்தத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு மக்கள் வலுவான ஆதரவை வழங்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிரம்பான் ஜெயாவில் நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை வசதி குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இவ்வளவு பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சிரம்பான் ஜெயா பகுதியில் இதுவரை ஒரு போலீஸ் நிலையம் கூட இல்லாதது வருத்தமளிப்பதாகவும் இந்த பிரச்சினையை தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர். தினாளன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைத்திருப்பது மக்களின் உண்மையான தேவைகளை பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவாக அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டத்தோ ஆர். தினாளன் உருவாக்கியுள்ள செயலியை அவர் பாராட்டினார்.

அந்த செயலி மூலம் மக்கள் தங்களின் குறைகள், தேவைகள் மற்றும் உதவிக்கான கோரிக்கைகளை நேரடியாக பதிவு செய்ய முடியும் என்றும், அதனடிப்படையில் தினாளன் சம்பந்தப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முற்போக்குடன் செயல்படுவது பாராட்டத்தக்க மக்கள் சேவையாகும் என்றும் தனேந்திரன் குறிப்பிட்டார்.

அண்மையில் ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு கிடைத்த மகத்தான மக்கள் ஆதரவைப் போலவே, நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் “நீல அலை” எழுச்சி உருவாக வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் பயனுள்ள சேவையை கருத்தில் கொண்டு தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சிரம்பான் ஜெயாவில் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார்.

மஇகா சார்பில் டத்தோ அசோகன், டத்தோ சைமன் ராஜா, கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா அசோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

, மன்னன்
நரேந்திரன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை