Tuesday, July 28, 2026

ஒற்றை மனிதராக தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் ஆற்றிய சேவை அளப்பரியது: -டத்தோ வி.எஸ். மோகன்!

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தற்போதைய பக்கத்தான் ஆட்சியில் இந்திய சமுதாயத்தின் சார்பில் இரண்டு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நான்கைந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இவர்கள் சாதிக்காததை ஒற்றை மனிதராக இருந்து தான் சாதித்தது அதிகம் என்று
ஜெரம் பாடாங் தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினருமானடத்தோ வி.எஸ். மோகன் கூறினார்.

தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, ஆலய நிலப் பிரச்சினைகள் மற்றும் குடியிருப்பு நிலப்பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல முக்கிய பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தேசிய முன்னணி ஆட்சியின்போது, தான் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த ஐந்து ஆண்டு காலத்தில் 12 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் பெற்றுத் தந்ததுடன், ஸ்ரீ செண்டாயான் நவீன தமிழ்ப்பள்ளியும் உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2008 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் 12 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட்டதாகவும் தற்போதைய பக்கத்தான் ஆட்சியின் எட்டு ஆண்டுகளில் இரண்டு பள்ளிகள் மட்டுமே மேம்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

அதேவேளை, மஇகா மற்றும் தேசிய முன்னணியின் ஒத்துழைப்புடன் 45 தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாடு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், தேசிய முன்னணி ஆட்சியில் கட்டத் திட்டமிடப்பட்ட ஏழு புதிய தமிழ்ப்பள்ளிகளின் தற்போதைய நிலை என்ன என்பதை தற்போதைய அரசாங்கம் விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசு நிலங்களில் இயங்கி வந்த 20 ஆலயங்களுக்கு மாற்று நிலங்கள் வழங்கப்பட்டதாகவும், “இந்து ஆலயங்கள் ஹராம்” என்ற சொல்லாடல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குடியிருப்பு நிலப்பட்டாக்கள் மஇகா காலகட்டத்தில் பலருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், தி.வி.ஜெயாவில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டும் திட்டம் தேசிய முன்னணி–மஇகா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, அதற்காக 7 மில்லியன் ரிங்கிட் மானியமும் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால் ஆட்சி மாற்றத்தால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

அந்தக் கட்டுமானத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்கிற்கு கடிதம் அனுப்பியிருந்ததாகவும் இருப்பினும் பொருத்தமானதல்ல என்ற காரணத்தைக் கூறி அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் டத்தோ வி.எஸ். மோகன் கூறினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை