Friday, September 18, 2026

நஜிப்புக்கு கட்டுப்பாட்டுடன் வீட்டுக்காவல்: அடுத்து என்ன?

மலேசிய அரசியலில் மீண்டும் ஒரு பழைய அலை எழ வாய்ப்புள்ளதா?

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைச் சுற்றிய அரசியல் சர்ச்சை, அவர் சிறைக்குச் சென்ற நாளில் முடிவடைந்துவிட்டதாக பலர் நினைத்திருக்கலாம். ஆனால் மலேசிய அரசியலின் தனிச்சிறப்பு என்னவென்றால், சில அரசியல் ஆளுமையர் பதவியை இழந்த பின்னரும் அவர்களின் பெயரும் அரசியல் மரபும் தொடர்ந்து அரசியல் களத்தில் அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். நஜிப் விவகாரமும் அத்தகைய ஒன்றாகவே மாறியுள்ளது.

இன்று, செப்டம்பர் 18,(2026), மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், நஜிப்புக்கு நிபந்தனைக்குட்பட்ட அரச மன்னிப்பை வழங்கி, நஜீப் தற்போதைய சிறைத்தண்டனையின் மீதியை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதித்துள்ளார்.

இதற்கான முக்கிய நிபந்தனைகளில் 50 மில்லியன் வெள்ளி அபராதத்தை செலுத்துவதும் அடங்கியுள்ளது. விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் மீறப்பட்டால், இந்த மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு அவர் மீதமுள்ள தண்டனையை மீண்டும் சிறையில் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது சாதாரண நிருவாக அறிவிப்பு அல்ல. மலேசியாவின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஒன்றுடன் தொடர்புடைய முன்னாள் பிரதமர் ஒருவர் சிறையிலிருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்படுவது என்பதால், இது சட்டம், மன்னிப்பு அதிகாரம், அரசியலமைப்பு நடைமுறை, அரச குடும்பத்தின் பங்கு, அரசியல் கட்சிகளின் உறவு ஆகிய அனைத்தையும் மீண்டும் விவாத மேசைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இங்கு இன்னொரு முக்கியமான உண்மையை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். நஜிப்புக்கு எதிராக 1MDB தொடர்பான தனி வழக்கில் 2025 டிசம்பரில் மேலும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வெ.11.4பில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது; அந்தத் தீர்ப்புக்கு அவர் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே இன்று வழங்கப்பட்ட வீட்டுக்காவல் உத்தரவை, நஜிப்பின் அனைத்து சட்டச் சிக்கல்களும் முடிவுக்கு வந்துவிட்டன என்று பொருள் கொள்ள முடியாது.

தவிர, இதன் அரசியல் தாக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய இடம் இதைவிடப் பெரியது.

மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கம் உருவானபோது, ஒருகாலத்தில் ஒன்றுக்கொன்று எதிராக இருந்த அரசியல் சக்திகள் ஒரே அரசாங்கத்தில் இணைந்தன. பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தில் பக்காத்தான் ஹராப்பான் அணியும், முன்னாள் பிரதமர் நஜிப் தலைமை வகித்த அம்னோ(UMNO)-வும் ஒரே அரசியல் நிர்வாக அமைப்புக்குள் வந்தன.

இந்த கூட்டணி அரசாங்கத்தின் உள்ளேயே நஜிப் விவகாரம் நீண்ட காலமாக உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருந்து வருகிறது.

அதனால் இன்று அறிவிக்கப்பட்ட வீட்டுக்காவல் சலுகை, நஜிப்பின் தனிப்பட்ட சட்ட விவகாரத்தைத் தாண்டி அம்னோ + நம்பிக்கைக் கூட்டணி உறவின் புதிய சோதனையாகவும் பார்க்கப்படுகிறது.

அம்னோ-வின் அடித்தளத்தில் நஜிப்புக்கு இன்னும் உணர்வுபூர்வமான ஆதரவு இருப்பதை சமீபத்திய கட்சிச் செயல்பாடுகளே வெளிப்படுத்தியுள்ளன.

ஆண்மையில்(செப்டம்பர் 11) நடைபெற்ற அம்னோ தேசியப் பேரவைக்கூட்டத்தில் நஜிப்பின் மன்னிப்பு விவகாரம் முக்கியமாகப் பேசப்பட்டது. அப்போது கட்சித் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி, மன்னிப்பு விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தபோதும் மாமன்னருக்கான மரியாதையையும் நிலைநிறுத்தினார்.

இப்போது அந்தக் காத்திருப்புக்கு பதில் கிடைத்திருக்கிறது.
இதனால் அம்னோவின் அடித்தளத் தொண்டர்களிடையே ஒரு புதிய அரசியல் உற்சாகம் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே நஜிப்பின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர், அவர் மீதான வழக்குகளும் தண்டனைகளும் அரசியல் ரீதியாகப் பார்க்கப்படுகின்றன என்ற கருத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

அத்தகைய ஆதரவாளர்களுக்கு வீட்டுக்காவல் என்பது நஜிப் மீண்டும் அரசியல் இயக்க மையத்துக்குள் வருவதற்கான வாய்ப்பாகத் தோன்றலாம். அதேநேரத்தில், நஜிப்பின் 1MDB தொடர்பான குற்றத் தீர்ப்புகளை முன்னிறுத்தும் தரப்புகள் இதை சட்டத்தின் ஆட்சியைப் பற்றிய கேள்வியாக முன்வைக்கக்கூடும். இவ்விரு பார்வைகளும் ஏற்கெனவே மலேசிய அரசியல் விவாதத்தில் இருப்பதை அண்மைய அரசியல் ஆய்வுகள் காட்டுகின்றன.

இன்று நஜீப்பிற்கு அறிவிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய வீட்டுக்காவல் அறிவிப்பின் மிக நேரடியான அரசியல் களம் மலாக்கா சட்டமன்றாத் தேர்தல்.
மலாக்கா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. செப்டம்பர் 17 நிலவரப்படி சட்டமன்றம் கலைக்கப்படும் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று முதலமைச்சர் அப்துல் ரவுப் யூசோப் தெரிவித்துள்ளார். எனவே தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும், தேர்தல் அரசியல் ஏற்கனவே சூடுபிடித்திருக்கிறது.

மலாக்கா சட்டமன்றத்திற்கான கடந்த தேர்தலில் தேசிய முன்னணி 21 இடங்களையும், நம்பிக்கைக் கூட்டணி(பக்கத்தான்) 5 இடங்களையும், தேசியக் கூட்டணி(பெரிக்காத்தான்) 2 இடங்களையும் பெற்றன. இந்த 21 இடங்களையும் தக்க வைத்துக்கொள்ளப்போவதாக மலாக்கா தேசிய முன்னணி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் நஜிப்புக்கான வீட்டுக்காவல் அறிவிப்பு வருவது அரசியல் ரீதியாக கவனிக்கத்தக்க நேரத் தேர்வாக அமைந்துள்ளது.

இதன் பொருள் நஜிப் மலாக்கா தேர்தலில் நேரடியாக போட்டியிடுவார் என்பதல்ல. அத்தகைய முடிவை இப்போது கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அவர் ஒரு தேர்தல் பிரச்சார பீரங்கியாக(சின்னமாக) மாறக்கூடிய அரசியல் சாத்தியம் இருக்கிறது.

அம்னோவின் பாரம்பரிய ஆதரவாளர்களிடம் ‘நஜிப்புக்கு என்ன நேர்ந்தது?’ என்ற கேள்வி உணர்ச்சியைத் தூண்டும் அரசியல் கருவியாக மாறலாம்; அதேவேளை எதிரணிகள் ‘1MDB வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதமருக்கு ஏன் இத்தகைய சலுகை?’ என்ற கேள்வியை முன்வைக்கலாம்.

அதாவது, நஜிப் விவகாரம் ஒரு கட்சிக்கு மட்டும் சாதகமான அல்லது பாதகமான மேடையாக இருக்காது. அது வெவ்வேறு வாக்காளர் குழுக்களில் வெவ்வேறு வினையையும் எதிர்வினையையும் உருவாக்கக்கூடிய சிக்கலைக் கொண்டது.

இதுதான் மலாக்கா தேர்தலின் முக்கியமான அம்சமாக இருக்கக்கூடும்.
மலாய் வாக்காளர்களில் அம்னோவின் பாரம்பரிய ஆதரவுத் தளத்தை மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து அந்தக் கட்சி முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில், இளம் வாக்காளர்கள், நகர்ப்புற வாக்காளர்கள், ஊழல் எதிர்ப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை முன்னிறுத்தும் வாக்காளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நஜிப் விவகாரத்தை வேறொரு கோணத்தில் அணுகலாம்.

செப்டம்பர் தொடக்கத்தில் ஊடக தளத்தில் வெளியான அரசியல் ஆய்வுகளும் நஜிப்புக்கான மன்னிப்பும் அம்னோவின்அடித்தளத்தை உற்சாகப்படுத்தக்கூடும்; அதே சமயம் நம்பிக்கைக் கூட்டணி தனது ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டை மீண்டும் முன்வைக்கக்கூடும் என்று வெவ்வேறு ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மொத்தத்தில், மலாக்கா தேர்தலில் விறுவிறுப்பான ஓர் அரசியல் முரண்பாடு உருவாகிறது.

அம்னோவைப் பொறுத்தவரை நஜிப்பின் பிம்பம் என்பது, உணர்ச்சி மற்றும் அடித்தள அரசியலின் ஒரு பகுதி; நம்பிக்கைக் கூட்டணிக்கு நஜிப் விவகாரம், சீர்திருத்தம் மற்றும் ஊழல் எதிர்ப்பு அரசியலை விளக்கும் முக்கியமான உதாரணங்களில் ஒன்றாகும். ஆனாலும், இன்றைய நிலையில் நம்பிக்கைக் கூட்டணியால் இதை வெளிப்படையாக முன்வைக்க முடியாது. காரணம், இரு தரப்பும் சேர்ந்து ஓர் அரசை வழிநடத்துகின்றனர்.

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் களத்தில், இந்த இரு அரசியல் அணியினரும் மோதக்கூடும். இதில், கூடுதலாக இன்னொரு சிக்கலும் இருக்கிறது. நஜிப் விவகாரத்தை பிரதமர் அன்வார் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி மிகவும் தீவிரமாக எதிர்த்தால், அம்னோவுடனான அரசியல் அழுத்தம் மேலும் உச்சத்தைத் தொடலாம்.
மறுபுறம், இந்த விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி மென்மையான நிலைப்பாட்டை எடுத்தால், அதன் சீர்திருத்த ஆதரவாளர்களிடையே கேள்விகள் எழலாம். செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியான அரசியல் ஆய்வுகளிலும் இதுபோன்ற இரு வழிச் சிக்கல்கள் சுட்டிக்காட்டப் பட்டிருந்தன.

இதனால் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு முன் நிற்கும் அரசியல் சிக்கல், அவர், நஜிப்பை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்ற எளிய கேள்வியாக மட்டும் இருக்காது.

மாறாக, அரசியலமைப்பின் கீழ் மன்னிப்பு அதிகாரத்தின் வரம்பு, நீதித்துறையின் தீர்ப்புகளுக்கான மரியாதை, அரசாங்கத்தின் சீர்திருத்த வாக்குறுதி, கூட்டணி அரசியலின் உண்மை நிலை ஆகியவற்றை மக்களுக்கு எவ்வாறு விளக்குவது என்பதே முக்கியமான கேள்வியாக மாறும்;
இதில் அரச நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கையும் முக்கியம்.

குறிப்பாக, நஜிப்புக்கு வழங்கப்பட்ட இன்றைய முடிவு, மன்னரின் அரசியலமைப்புச் சிறப்புரிமை மற்றும் மன்னிப்பு வாரியத்தின் பங்கு குறித்து புதிய விவாதத்தை உருவாக்கும் என்று பன்னாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளதை, நாம் புறக்கணிக்க முடியாது.

குறிப்பாக, நஜிப்பின் வீட்டுக்காவல் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்பட்ட சட்டப் பிரச்சினைகளுக்குப் பின்னர், புதிய மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் மூலம் வீட்டுக்காவல் நிபந்தனை வெளிப்படையாக அறிவிக்கப் பட்டிருப்பது தனித்துவமான நிகழ்வாகும்; மலேசிய அரசியல் வரலாற்றில், இது புதுமையானது.

இதன் காரணமாக மலாக்கா தேர்தலில் வாக்காளர்கள் கட்சியின் பெயரை மட்டுமே பார்த்து வாக்களிப்பார்களா அல்லது “நாடு எந்த திசையில் செல்ல வேண்டும்?” என்ற பரந்த கேள்வியையும் கருத்தில் கொள்வார்களா என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கும்.

இதன் தொடர்பில், மேலும் ஒரு புதிய பரிமாணமும் இருக்கிறது.

மலாக்காவில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி தனியாகப் போட்டியிடுமா அல்லது நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைப்பைத் தொடருமா அல்லது பெரிக்காத்தான் கூட்டணியுடன் தேர்தல் உடன்பாட்டை எட்டுமா அல்லது பாஸ் கட்சியுடன் மட்டும் கூட்டணி உறவு உருவாகுமா என்ற விவாதங்கள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்ற நிலையில், இத்தகைய போக்கு இனி விறுவிறுப்பை எட்டும்.

அம்னோவின் இளைஞர் பிரிவு பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் கூறியுள்ளது. அதே நேரத்தில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் கூட்டணி இடையேயும் தேர்தல் உடன்பாடு குறித்து பேச்சுகள் தொடங்கலாம் என்ற ஊக செய்திகளும் வெளியாகியுள்ளன.

இத்தகைய சூழலில் நஜிப் விவகாரம், அம்னோவின் உள்நிலை அரசியலுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, அம்னோவின் எதிர்கால அரசியல் பாதை நம்பிக்கைக் கூட்டணியுடனா அல்லது தனித்தா அல்லது மலாய் ஆதரவை மையமாகக் கொண்ட புதிய அரசியல் கூட்டணியுடனா என்ற விவாதத்துக்கு புதிய உந்துதலை வழங்கக்கூடும்.

ஆனால் ஒரு விசயத்தை மிகவும் கவனமாக கருத்தில் வேண்டும். இன்றைய முடிவை வைத்துக்கொண்டு மலாக்கா தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று இப்போதே முடிவு செய்ய முடியாது. தேர்தல் தேதி கூட இன்னும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை; மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக பரவிய தகவலையும் மாநில முதலமைச்சர் அலுவலகம் மறுத்துள்ளது.

எனவே இன்றைய நிலவரத்தைக் கொண்டு தேர்தல் முடிவை வரையறுக்க முடியாது; தேர்தல் களத்தின் தன்மையும் விவாதப் போக்கும் மாறக்கூடும். என்பதே.

நஜிப்பின் வீட்டுக்காவல் விவகாரம் இப்போது மலேசிய அரசியலில் மூன்று தனித்தனி கேள்விகளை ஒன்றாக இணைத்திருக்கிறது:
‘நஜிப்புக்கு என்ன நடக்கிறது?’ என்பதைத் தாண்டி, ‘கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தின் அரசியலமைப்புச் செயல்பாடு என்ன?’ என்ற கேள்வியும் அம்னோவும் நம்பிக்கைக் கூட்டணியும் இன்றையஅரசாங்கத்தில் இன்னும் எவ்வளவு தூரம் ஒன்றாகப் பயணிக்க முடியும்?என்ற கேள்வியையும் ஒருசேர எழுப்புகின்றன.

அதனால் மலாக்கா தேர்தல் ஒரு மாநிலத் தேர்தலாக மட்டும் பார்க்கப்படாமல், மலேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் உள்ளார்ந்த உறவுகளை அளவிடும் மற்றொரு அரசியல் கண்ணாடியாகவும் பார்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இன்றைய முடிவின் இன்னொரு முக்கிய அம்சம், நஜிப் மீண்டும் அரசியல் மேடையில் நேரடியாகத் தோன்றுவாரா என்பது மட்டுமல்ல; அவர் வீட்டுக்காவலில் இருந்தபோதும் அவரின் பெயர் தேர்தல் அரசியலில் எத்தகைய தாக்கத்தை வெற்படுத்து என்பதுதான்.

அவர் பிரசாரத்தில் நேரடியாக ஈடுபட முடியாத நிலையில், அவரின் பெயர் ஆதரவு திரட்டும் கருவியாகவும், எதிர்ப்பை உருவாக்கும் கருவியாகவும் பயன்படுத்தப்படலாம். இதனால் நஜிப்பின் அரசியல், நேரடி தோற்றத்தைவிட இன்னும் வீரியமானதாக மாறலாம்.

ஒரு காலத்தில் ‘மலேசியாவின் நீண்டகால ஆட்சிக் கட்சியின் முகம் என்று அறியப்பட்ட நஜிப், இன்று சிறைத்தண்டனை அனுபவிக்கும் முன்னாள் பிரதமர். ஆனால் அவரின் பெயர் இன்னும் அனோவின் அடித்தள அரசியலில் ஒலிக்கிறது.

இன்று கிடைத்துள்ள வீட்டுக்காவல் சலுகை அந்த அரசியல் நிலைப்பாட்டிற்கு மீண்டும் உயிரூட்டுகிறதா, அல்லது மாறாக அவரது சட்ட வரலாற்றையே மீண்டும் மக்களின் முன்னால் நிறுத்துகிறதா என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகத் தெரியும்.

மொத்தத்தில், இன்றைய நிகழ்ச்சி, மலேசிய அரசியலில் ஒரு பழைய அத்தியாயம் புதிய வடிவில் திறக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி ஆகும். மலாக்கா தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த புதிய அத்தியாயத்தை யார் எப்படிப் படிக்கிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வரும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று வெளியாகியுள்ள செய்திகளின்படி அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி, வெ.50 மில்லியன் தொகையை நஜீப் செலுத்துவதற்கான நிதிச்சுமையைத் தணிக்க நன்கொடை நிதி திரட்டும் நடவடிக்கையை அம்னோ தொடங்கும் என்று கூறியுள்ளார். இது வெறும் சட்ட விவகாரமாக இல்லாமல், கட்சிக்குள் அரசியல் இயக்கமாகவும் மாறக்கூடிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை