
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டு, 2028, ஆகஸ்ட் 23 வரை மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைப் பெற்றுள்ளார்.
கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தின் (FTPB) 64-வது கூட்டத்தைத் தொடர்ந்து, மாட்சிமைசால் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இந்த நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கியதாகப் பிரதமர் துறையின் சட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.
‘நஜிப், தனக்கு விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் ஒன்றை அவர் மீறினாலும் இந்த நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு ரத்து செய்யப்படுவதுடன் அவர் தனது மீதமுள்ள தண்டனையை அனுபவிக்க உடனடியாகச் சிறைக்குத் திரும்ப வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஜிப் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்த விவரங்களை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை.
2024 பிப்ரவரியில் கூடிய மன்னிப்புக் குழு (FTPB) அவருக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத்தண்டனையை பாதியாகக் குறைத்ததைத் தொடர்ந்து, 73 வயதான நஜிப் காஜாங் சிறையில் ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது.
SRC International Sdn Bhd வழக்கின் இறுதி மேல்முறையீட்டை கூட்டாட்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, 2022 ஆகஸ்ட்-இல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
2025 டிசம்பரில், 1MDB தொடர்பான 2 பில்லி யன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணத்துடன் தொடர்புடைய அதிகார அத்துமீறல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை யும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தக் குற்றத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்து வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்புக் குழு (FTPB) பகுதி மன்னிப்பை அறிவித்த சிறிது காலத்திலேயே, அப்போதைய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா வெளியிட்ட கூடுதல் உத்தரவின் (addendum order) செல்லுபடித் தன்மை குறித்து சர்ச்சை வெடித்தது.
அந்தக் கூடுதல் உத்தரவு, தனது மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிப்பதாக நஜிப் வாதிட்டார்.
அரசாங்கம் ஆரம்பத்தில் அந்த உத்தரவு இருப்பதையும் அதன் சட்டப்பூர்வத்தன்மை யையும் மறுத்தது; இதனால் மாமன்னரின் ஆணையைச் செயல்படுத்தும் முயற்சியாக நஜிப் நீதிமன்ற மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் அந்த ஆவணம் உண்மையானது என்று பகாங் அரண்மனை உறுதிப்படுத்தியது.
கடந்த ஆண்டு டிசம்பரில், நஜிப்பின் நீதி மன்ற மறுஆய்வு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2024 ஜனவரி 29, அன்று நடைபெற்ற மன்னிப்புக் குழு கூட்டத்தில் அந்தக் கூடுதல் உத்தரவு குறித்து விவாதிக்கப்படவோ அல்லது முடிவெடுக்கப்படவோ இல்லை என்றும், அது கூட்டாட்சி அரசியலமைப்பின் 42-வது பிரிவுக்கு இணங்கவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நஜீப் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தாலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் ஒரு புதிய மன்னிப்புக் கோரும் மனுவைச் சமர்ப்பித்தார்; அது செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது, ஆனால் வாரியம் தனது முடிவை அறிவிக்கப்படாத ஒரு தேதிக்கு ஒத்திவைத்தது, குறிப்பிடத்தக்கது.


