
“பொது வாழ்விலும் வர்த்தக துறையிலும் எத்தனையோ விருதுகளை நான் பெற்றிருக்கிறேன். ஆனால் மின்னல் பண்பலை வானொலி சார்பில் வழங்கப்பட்ட விருது நெஞ்சத்தைத் தொட்டது; மனதை வருடியது” என்று பிரபல தொழில் அதிபரும் சமூக ஆர்வலருமான
டத்தோ அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
மின்னல் பண்பலை வானொலி, பல்துறைசார் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி பாராட்டிய விழா கடந்த காரிக்கிழமை ஆகஸ்ட் 22-இல், சிலாங்கூர், பத்து மலை ஷெங்கா மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

வர்த்தகம், கல்வி மறுமலர்ச்சி, சமூக மேம்பாடு, மாணவர் நலம், பொருளாதார வளர்ச்சி என்றெல்லாம் பல்துறை சார்ந்து சாதனை புரிந்தது டன் சமுதாய மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய- வழங்கிவருகின்ற சமூகத் தலைவர்கள், நண்பர்கள், வியூக பங்காளிகள், தனி மனிதர்கள் என ஏராளமான சாதனையாளர்களுக்கு மின்னல் பண்பலை வானொலி சார்பில் சிறப்பிக்கப்பட்டது.
இத்தகையோரில் ‘Ehsan Group of Companies’ நிறுவனரும் உரிமையாளரும் ஒருவர்.
தவிர, மின்னல் பண்பலை வானொலிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அன்பர்கள், சமூகப் பங்களிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதும், அவர்களின் சேவையைப் பாராட்டுவதும் இவ்விழாவின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
சமூகத்திற்கு பாரிய அளவில் பங்களிப்புகளை வழங்கி, எதிர்பார்ப்பின்றி மக்களுக்கு உதவி செய்து வரும் 20 நாயகர்களும் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.
அவர்களின் காலம் கருதாக் கடமை, அர்ப்பணிப்பு, எதிர்கால தலைமுறையினருக்கு முன்மாதிரியாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
விருது பெற்ற ஒவ்வொருவரின் சமூக சேவையும் அங்கீகரிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
சமூக நலனுக்காக தொடர்ந்து செயல்படும் இவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த பாராட்டு விழா அமைந்தது.
நிகழ்ச்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றதுடன்விருது பெற்ற அனைவருக்கும்மரியாதை செலுத்தப்பட்டது. மின்னல் பண்பலை வானொலியின் வியூக நண்பர்கள் – பங்காளிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மின்னல் பண்பலை ஒலிபரப்பின் தலைமை இயக்குநர் அஷ்வத் பின் இஸ்மாயில், CAPTIAL A குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ தோனி பெர்னாண்டஸ், மின்னல் நிர்வாகி குமரன் சுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்


