
மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைய இருக்கின்ற மத்திய கூட்டு அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று டத்தோ சங்கரன் ஐயங்கார் தலைமையிலான சிலாங்கூர் மாநில மஇகா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் மாநில மாஇகாவின் 80 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதல் தீர்மானம் மேற்கண்டவாறு வலியுறுத்துகிறது.
நாட்டின் மையப்பகுதி மாநிலமான சிலாங்கூரில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட்டு, வென்று அவர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளதுடன் தேசியத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஒன்றுபட்ட ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது; அத்துடன் கட்சியின் ஒற்றுமைக்கும் வலிமைக்கும் சிலாங்கூர் மஇகா அயராது பாடுபடும் என்றும் முதல் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வியிலும் உயர்க் கல்விக்கான பொது பல்கலைக்கழகங்களிலும் தகுதியான மாணவர்களுக்கு வெளிப்படையைத் தன்மையுடன் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானம் வலியுறுத்துகிறது;
மஇகா தேசிய நிலையிலான தலைவர்கள், மாநில ஒருங்கிணைப்புக் குழுக்களின் பொறுப்பாளர்கள் அதைப்போல தொகுதி- கிளைத் தலைவர்களுக்கு அரசாங்க பொறுப்புகள் தேசிய மாநில அளவிலும் மாவட்ட- ஊராட்சி மன்ற அளவிலும் வழங்கப்பட வேண்டும் என்று மூன்றாவது தீர்மானம் வலியுறுத்துகிறது;
மலேசிய இந்திய சமுதாயம், தேசிய பொருளாதார வளர்ச்சியில் இடம்பெறும் வகையில் சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் இந்திய சமுதாயத்திற்காக வகுக்கப்பட வேண்டும் என்றும் இளம் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு இளைய சமுதாயம் வர்த்தக துறையில் மறுமலர்ச்சி காண்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான்காவது திருமணம் வலியுறுத்துகிறது.


