
மலேசிய இந்திய சமுதாயத்தின் அரசியல் எல்லையில், குறிப்பாக அம்மாக் கச்சியான எம்.ஐ.சி.யில் கடந்த ரெண்டு மூனு நாளாக பரபரப்பும் ஆள்சேர்ப்பும் பரிந்துரைப் படல மும் அணுவகுத்து நிற்கின்றன.
காரணம், கடந்த 26 மாதங்களாக இந்த அம்மாக் கச்சியில் பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த டத்தோ ஆனந்தன் இரு நாட்களுக்குமுன் அந்தப் பொறுப்பை திடுதிப்பனெத் துறந்தார்.
அதற்கு அவரு சொன்ன காரணம் இருக்கே, அற்புதம்; அழகு; சிறப்போ சிறப்பு.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக சொன்னது இருக்கே, அதுதான் நம் அனைவரின் காதிலும் இரட்டை மல்லிகைச் சரத்தை சுற்ற முயலும் வேலை.
கச்சியின் தேசிய தலைமையும் மேநாள் செனட்டருமான இவரும் ஈருடல் ஓருயிர் போலத்தான் தென்பட்டனர். யார் கண் பட்டதோ? பொறாமை கொண்டனரோ? ஏதோ ஏற்பட்டுவிட்டது. நடக்கக்கூடாதது நடந்து விட்டது.
இதைப்பற்றி கச்சி வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்கூட வாய்த் திறப்பதில்லை.
கச்சியின் தலைமையோ, “ஆமாங்க, அவரு ராஜினாமா செஞ்சிட்டாரு” என்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் சரி.
ஆனந்தனோ, ஏதோ கண்காணா தேசத்துக்கு போய்ட்டாருபோல; பேச்சு-மூச்சில்லை; தாய்க் கச்சி தொடர்பான அனைத்து புலனக் குழுக்களில் இருந்தும் விலகி விட்டார்; எங்கோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார் போலத் தெரிகிறது.
இந்த நேரம் பாத்து, ஏழெட்டு பேருங்க, அதாவது தாய்க்கச்சி உயர்மட்ட வட்டத்தைச் சேர்ந்தவய்ங்க, போலீஸ் அணுவகுப்பு நேரத்துல போலீஸ்காரங்க எப்படி ‘attention’ கோலத்துல வெரப்பா நிப்பாங்களோ, அதுபோல, தேசியத் தலைமையின் ஓரக் கண் பாரவை, நம்மேலப் படாதான்னு கால்கடுக்க அணிவகுத்து நின்னுக்கிட்டிருக்காய்ங்க.(?).
திண்ணை எப்போ காலியாகும்னு காத்திக்கிட்டு இருந்தவங்க போலத் தெரிகிறது.
அண்மை ஆண்டுகளாக தெளிந்த நீரோடையப் போல பயணித்துக் கொண்டிருந்த மஇகா என்னும் அரசியல் பேரியக்கத்திற்கு, இது புது அனுபவம்தான்.
மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளனத்தின்(மைக்கி) அடுத்தத் தலைவர் என்று எதிர்பார்க்கப் படுபவரும் மஇகா நிருவாகச் செயலாளருமான டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜாதான் அடுத்த தேசிய பொதுச்செயலர் என்று ஒரு வட்டம் கட்டியம் கூறுகிறது. அடுத்த பொதுத் தேர்தலில், இவர் களம் காண தேசியத் தலைமை கண்ணசைத்து விட்ட நிலையில், இவர்தான் அடுத்த பொ.செ. என்கிறது இந்த வட்டம்.
இன்னொரு வட்டமோ, “இல்லையில்லை; மஇகா தேசியத் தலைமையுடன் இரவு-பகல் எந்நேரத்திலும் ஊடாடி, உறவாடிக் கொண்டி ருக்கும் டத்தோ எல்.சுப்பிரமணியனுக்குத் தான் அந்த பொன்னான வாய்ப்பு கிட்டப்போகிறது” என்கிறது இந்த வட்டம்; காரணம், இவர்தான் மஇகாவின் தேசிய ஊடகத் தலைவர்; அதுமட்டுமல்ல மத்திய செயலவை உறுப்பினரும்கூட; அதனால், சிவசுப்பிரமணியன்தான் புதிய பொ.செ. என்று கட்டியம் கூறுகிறது இரண்டாந்தரப்பு
நிலைமை இப்படி யென்றால், இன்னொரு தரப்பு முன்வைக்கும் கருத்து வேறொன்றாக இருக்கிறது.
மஇகா தேசிய தகவல் பிரிவுத் தலைவரான டத்தோ ஏ.கே. இராமலிங்கம்தான் அதிக முனைப்பு காட்டுகிறார். அதனால், அவர்தான் மஇகா-வின் அடுத்த பொ.செ. என்கிறது அந்தத் தரப்பு.
நிலைமை இத்துடன் நின்றுவிட்டதா என்றால், அதுதான் இல்லை. கேமரன் மலைத் தொகுதியின் மேநாள் எம்பியும் மேநாள் செனட்டருமான டத்தோ சி.சிவராஜ்-தான் அடுத்த பொ.செ. என்று அடித்துக் கூறுகிறது மற்றொரு தரப்பு. காரணம், கட்சியின் இளைஞர் பிரிவை, இந்த நூற்றாண்டில் செம்மையாக வழிநடத்தியவர் இவர்தான் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர் இத்தரப்பினர்.
மஇகா நெகிரி செம்பிலான மாநில நிரு-வாகத்தை நீண்ட காலமாக தன் இரும்புப் பிடியில் வைத்திருந்த டத்தோ டி.இராஜ கோபாலுவின் மகனாரும் நெகிரி செபிலான மாநில சட்டமன்றத்திற்கு கடந்த ஆகஸ்ட் முதல் நாள் நடைபெற்றத் தேர்தலில், சிரம்பான் ஜெயா தொகுதியில் வெற்றிக் கோட்டை எட்டத் தவறியவருமான தினாளனுக்குத்தான் அந்த வாய்ப்பு வாய்க்கப் போவதாக வேறொரு பிரிவினர் அடித்துச் சொல்கின்றனர்.
இவர்களை யெல்லாம்விட, ஷா ஆலம் தொகுதியைச் சேர்ந்த முருக வேலு பக்கம்தான் பச்சைக்கொடி பறக்கிறது என்கிறது ஆறாவது தரப்பு.
எது எவ்வாறாக இருந்தாலும், இன்று மதிய வேளையில் முற்றிய கத்தரிக்காய் சந்தைக்கு வந்தேத்தீரும்.
இன்னும் ஒருசில மணி நேரத்தில், காலை 11:00 மணி அளவில் மஇகா மத்திய செயலவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அடுத்து, ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கழித்து தேசியத் தலைமை ஊடகத்தாரிடம் அறிவிப்பு செய்யும்பொழுது, மஇகா-வின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்று தெரிந்துவிடும்.
ஒருவேளை, செய்தியாளர் சந்திப்பின்போது, தேசியத் தலைமை அறிவிப்பு செய்யுமுன், மத்திய செயலவை நடைபெற்றுக் கொண்டி-ருக்கும்போதே, ஏதாவது ஒரு கிளி, கழிப்பறைக்குச் செல்வதாக வெளியேவந்து, சோதிடம் சொன்னாலும் வியப்பதற்கில்லை.
அவ்வாறு நடந்தால், தேசியத் தலைமை அறிவிக்கும் முன்னமே, இன்னார்தான் அடுத்த பொ.செ. என்ற விவரம் பரவி இருக்கக்கூடும்.
சற்று பொறுத்திருப்போமே.
வாழ்க மஇகா!
வளர்க மலேசிய இந்திய சமுதாயம்!!.


