
மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்த டத்தோ எஸ்.ஆனந்தன் தன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
அவரின் இந்த முடிவு தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்டதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
கட்சியின் உள்வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இந்தத் தகவலை ஊடக உலகிற்கு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
மஇகா தலைவர்களில் புன்னகை தவழும் முகத்திற்கு சொந்தக்காரரான இவர் அதிர்ந்து பேசாதவர்.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மஇகா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது, கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த முடிவின் அடிப்படையில், முன்னாள் பொதுச் செயலாளரான ஆர்.டி. ராஜ சேகரனுக்குப் பதிலாக அவர் பொறுப்பேற்றிருந்தார்.
இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.
கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் ஆற்றல்மிகு சேவையை வழங்கும் நோக்கத்தில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட ஆனந்தன், முன்னதாக மஇகா கெடா மாநிலத் தலைவராகவும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்-இன் அரசியல் செயலாளராகவும் அவர் சேவையாற்றி யிருந்தார்.
மஇகா-வின் தேசிய அரசியலும் மாநில அளவிலான மண்டல அரசியலும் அண்மைய ஆண்டுகளாக சுமூகமாக இடம்பெற்று வந்த நிலையில் டத்தோ ஆனந்தனின் இந்த திடீர் பதவி விலகல், அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி இருப்பதாக சொல்லப்பட்டாலும் உள்ளூர ஏதும் அரசியல் காரணம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.


