
மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், காடேக் தொகுதியில்
மஇகா சார்பில் களம் இறங்கிய தேசிய முன்னணி வேட்பாளர் செ. நடராஜனுக்கு தொகுதி வாக்காளர்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாக மஇகா தலைவர்களில் ஒருவரான டத்தோ டி. மோகன் தெரிவித்துள்ளார்.
“மலாக்கா மாநில 16 ஆவது சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறுவது ஏற்கெனவே ஏறக்குறைய உறுதி-யாகி விட்ட நிலையில், காடேக் தொகுதியில் நடராஜன் வெற்றி பெற்றால் ஆட்சிக் குழுவில் இடம் பெறுவது அதனிலும் உறுதி என்றும் அதனால் காடேக் தொகுதி இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரித்து நடராஜன் செல்லப்பாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பு இரண்டு மூன்று முறை நான் தொகுதி வாக்காளர்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன்”.
அதற்கு ஏற்ப தொகுதி மக்கள் விவேகமாக சிந்தித்து வாக்களித்து நடராஜனை வெற்றி பெற செய்துள்ளதற்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் செனட்டருமான டத்தோ மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


