
இன்று வெளியாகியுள்ள ‘O.M: Operation Mole’ திரைப்படம் குறித்து பல விமர்சகர்களும்ரசிகர்களும் அளித்துள்ள ஆரம்ப கருத்துகளைப் பார்த்தால், இது ஒரு வழக்கமான ஆக்ஷன் திரைப்படம் அல்ல; உணர்வுகளும், உளவு நடவடிக்கையும் கலந்த குற்றத் திரில்லராக அமைந்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தூள்பறக்கும் திரைப்படம்!
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஓம்’ திரைப்படம், வழக்கமான வணிகத் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு உளவுத்துறை நடவடிக்கை, குற்றப் பின்னணி, அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இப்படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷுடன் மலையாளத் திரையுலகின் முன்னிலை நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் கதைக்களம் செம்மரக் கடத்தல் பின்னணியையும், அதனை முறியடிக்க மேற்கொள்ளப்படும் ரகசிய உளவுத்துறை நடவடிக்கையையும் மையமாகக் கொண்டுள்ளது.
குற்றக் கும்பலுக்குள் ஊடுருவி அதன் செயல்பாடுகளை வெளிக்கொணரும் முயற்சிகள் கதைக்கு விறுவிறுப்பைச் சேர்க்கின்றன.
இத்திரைப்படத்தில் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். குறிப்பாக, அவரது அறிமுகக் காட்சி முதல் அதிரடியான காட்சிகள் வரை தனக்கே உரிய நடிப்பாற்றலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், அழுத்தமான தருணங்களிலும் தனுஷ் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரின் கதாபாத்திர வடிவமைப்பு, திரைப்படத்தின் பலமாக அமைந்துள்ளது.
மம்முட்டியின் திரை ஆளுமை, படத்திற்குப் பெரும்பலம். அவரின் அனுபவமிக்க நடிப்பு கதையின் முக்கியமான தருணங்களை வலுசேர்க்கிறது.
சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாகத் தோன்றி தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஸ்ரீலீலாவும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின்வழி சிறப்பாகப் பங்களித்துள்ளார்.
சாய் அப்யங்கரின் பின்னணி இசை அதி ரடிக் காட்சிகளுக்கும் உணர்வுப் பூர்வமான தருணங்களுக்கும் வலுசேர்க்கிறது. ஒளிப்பதிவும் காட்சியமைப்பும் கதையின் பின்னணியைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன.
குறிப்பாக, ஒற்றைத் தொடர்காட்சியாக அமைந்த சில காட்சிகள், செம்மரக் கடத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும் இடை வேளைக்கு முந்தைய திருப்பங்கள் திரைப் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக அமைந்துள்ளன.
சில குறைபாடுகளும் உண்டு!
திரைப்படத்தின் கதை சில இடங்களில் மெதுவாக நகர்வதுடன், நீண்ட காட்சிகள் காரணமாகச் சிறிய தொய்வுகளும் ஏற்படுகின்றன. சில திருப்பங்களை முன்கூட்டியே கணிக்க முடிவதும் ஒரு குறையாக இருக்கிறது.
இருப்பினும், நடிகர்களின் நடிப்பும் விறுவிறுப்பான காட்சிகளும் அந்தக் குறைகளை ஓரளவு மறைக்கின்றன.
மொத்தத்தில்…,
‘ஓம்’ திரைப்படம் தனுஷின் மாறுபட்ட நடிப்பையும், மம்மூட்டியின் அனுபவத்தையும், சாய் பல்லவியின் இயல்பான நடிப்பையும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்துள்ளன.
அதிரடி, உளவுத்துறை நடவடிக்கை, குற்றப் பின்னணி மற்றும் உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் எனப் பல அம்சங்களைக் கொண்ட இத்திரைப்படம், வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரையரங்க அனுபவமாக அமையக்கூடும்.


