
பாடல் வெளியீட்டின் மூலம் கிடைத்த வெ.35,000 முழுத் தொகையையும் சாரதா தேவி ஆசிரமத்திற்கு வழங்கிய மண்ணின் மைந்தன் மலேசியா!
பத்து கேவ்ஸ், அக்.31-
மலேசிய இந்தியக் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், சுமார் 200 உள்ளூர் கலைஞர்களின் பங்கேற்பில் உருவாக்கப்பட்ட மண்ணின் மைந்தன் மலேசியாவின் ‘தீபாவளி திருவிழா’ பாடல் காணொளி வெளியீடு கண்டது.
மண்ணின் மைந்தன் மலேசியாவின் தோற்றுநர் குமார் முன்னெடுப்பில் உருவான இப்பாடலுக்கு யுவாஜி வரிகள் அமைத்துள்ளார். வெறும் இரண்டு மாதங்களில் பாடல் மற்றும் காணொளி உருவாக்கப் பணிகள் நிறைவடைந்து, சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரவாங் ஸ்ரீ சாரதா தேவி இல்லம் மற்றும் இராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இப்பாடல் காணொளியில் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.
இதன் வெளியீட்டு நிகழ்வில் பேசிய ரவாங் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தின் பொறுப்பாளர் குமரன், மலேசியாவில் முதன்முறையாக ஆசிரமக் குழந்தைகளுக்கு இவ்வாறு ஒரு பாடல் காணொளியில் இடம்பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், சோனி மியூசிக் நிறுவனம் இப்பாடலை RM35,000-க்கு வாங்கிய நிலையில், அந்த முழுத் தொகையையும் மண்ணின் மைந்தன் மலேசியா சாரதா தேவி ஆசிரமத்திற்கே வழங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும். இதற்காக மண்ணின் மைந்தன் மலேசியா அமைப்புக்கும் அதன் தோற்றுநர் குமாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

இந்நிகழ்வில் பேசிய இராமகிருஷ்ணா ஆசிரமத்தின் துணைச் செயலாளர் மோகன கிருஷ்ணா, ஆசிரமக் குழந்தைகளுக்காக ஒரு தீபாவளிப் பாடலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதாகத் தெரிவித்தார்.
பாடலின் இயக்குநர் ரவினாஸ் பேசுகையில், சுமார் 200 கலைஞர்கள் பங்கேற்றதால், மூன்று இயக்குநர்கள் பிரிந்து செயல்பட்டு பாடல் காட்சிகளை உருவாக்கியதாகக் குறிப்பிட்டார்.

பாடலாசிரியர் யுவாஜி பேசுகையில், ஆசிரமத்திற்காக ஒரு தீபாவளிப் பாடலை உருவாக்க வேண்டும் என்று குமார் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
இது வெறும் தீபாவளிப் பாடலாக மட்டுமின்றி, ஆசிரமக் குழந்தைகளுக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பாடல் வரிகளை எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாடல் பாரம்பரிய இசை பாணியில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப பாடகர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கேற்ற வகையில் இசை அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு வீட்டில் குடும்பத்தினர் ஒன்றிணைந்து தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பாடலின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
கலை, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்கும் பங்களிக்கும் வகையில் உருவாகியுள்ள இம்முயற்சி மலேசிய இந்தியச் சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது.


