Friday, October 30, 2026

குழந்தைப் பிறப்பு விகிதம் சரிவு: -மலேசியாவின் எதிர்காலம்?மலேசியாவில் குறைந்து வரும் கருவுறுதல் விகிதம் சொல்லும் செய்தி என்ன?

சிறப்பு ஆய்வு கட்டுரை

ஒரு நாட்டின் எதிர்காலத்தை அதன் வானுயர்ந்த கட்டிடங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை மட்டுமே கொண்டு அளவிட முடியாது; மாறாக, ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதும் நாளைய தலைமுறையை உருவாக்கும் குடும்பங்கள் எவ்வாறு மாற்றம் காண்கின்றன என்பதும் அதே அளவு முக்கியமானவை.

இந்த கோணத்தில் பார்க்கும்பொழுது மலேசியாவின் புதிய மக்கள் தொகை புள்ளிவிவரம் சாதாரண புள்ளிவிவரம் அல்ல; அது மலேசிய சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முக்கியமான எச்சரிக்கை மணி ஆகும்.

2025 ஆம் ஆண்டில் மலேசியாவில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3,96,275 என பதிவாகி உள்ளது; 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,14,918 என்ன பதிவாகி உள்ளது; இது 4.5 விழுக்காடு வீழ்ச்சி. ஆயிரம் பேருக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் 12.2 இலிருந்து 11.6 ஆக குறைந்துள்ளது

இதைவிட கவலைக்குரிய புள்ளிவிபரம் மொத்த கருவுறுதல் விகிதமாகும்.

பொதுவாக ஒரு பெண்ணின் இனப்பெருக்க வயதுக்குள் சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அளக்கும் இந்த விகிதம் 2024-இல்1.6 ஆக இருந்தது; இதே விகிதம் 2025 இல் 1.5ஆக சரிந்துள்ளது.

நீண்டகால அடிப்படையில் ஒரு நாட்டின் மக்கள் தொகை சீராக நிலைபெற வேண்டும் எனில், பொதுவாக தேவைப்படும் மாற்றீட்டு கருவுறுதல் அளவு 2.1 குழந்தைகள்.

மலேசியா இந்த நிலையிலிருந்து இறங்கி இருப்பதற்கு, திடீரென்று இன்றோ நேற்றோ ஏற்பட்ட சூழல் காரணம் அல்ல;

நவீன மலேசியாவில் ஓராண்டில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை முதல் முறையாக 4 லட்சத்திற்கும் கீழே சென்றிருக்கும் தகவல், ஓர் எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் 2025-இல் மலேசியாவில் இறந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 807 ஆக இருந்தது; இந்த எண்ணிக்கை 2024-இல் 1,98,992 ஆக பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு 2024-இல் 2,15,926-ஆக இருந்த நிலையில் 2025 இல் 1,96,368-ஆக குறைந்துள்ளது.

அதாவது இயல்பான இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் மலேசியாவில் குறைந்து கொண்டிருக்கிறது; அதேவேளை இதை வைத்து மலேசியாவில் மக்கள் தொகை நாளையோ நாளை மறுநாளோ குறைந்து விடும் என்று எடைபோடத் தேவையில்லை.

அதேவேளை தற்போதைய குறைந்த குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை, இதே அளவில் தொடர்ந்தால், இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் மலேசியா குறைந்த தொழிலாளர்களைக் கொண்ட நாடாக உருவாகும் அபாயம் இருக்கிறது; இப்பொழுதே ஏறக்குறைய அந்த நிலைதான் உள்ளது.

மலேசியாவில், அனைத்து பெற்றோரும் தங்களின் ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எட்ட வேண்டும் என்று கருதுவதுடன் அதற்கேற்பவே செயல்படுகின்றனர். பிள்ளைகளும் அவ்வண்ணமே செப்பம் பெறுகின்றனர்; தவறியும் ‘4-D'(Dirty, Dangerous, Difficult & Degrading) பணிகளை விரும்புவதில்லை. பொதுவாக கட்டுமானத் தொழில், தோட்டத் தொழில், சுத்தப்படுத்தும் வேலைகள், சில தொழிற்சாலைப் பணிகள் போன்றவை, மதிப்புக் குறைவாகக் கருதப்படும் வேலை போன்றவற்றை இளப்பமாகக் கருதும் போக்கு மலேசியர்களிடம் மலிந்து காணப்படுகிறது.

இத்தகைய சூழலில் பிறப்பு விகிதம் தற்போதைய நிலையிலேயே நீடித்தால் இன்னும் ஒரு தலைமுறைக் காலம் கழித்து மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இல்லை என்றால் நாடே நிலைகுத்தி விடும் ஆபத்து எழக்கூடும்.

மலேசியர்கள் ஏன் குழந்தைகளை குறைவாக பெறுகின்றனர்?

இதற்கு இதுதான் காரணம் என்று ஏதோ ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது.

குடும்பத்தின் அல்லது தனிமனிதனின் பொருளாதார நிலைமை, குடும்ப வாழ்க்கை முறை, தேசிய அளவிலான நகரமயமாக்கல், திருமணம் புரிந்து கொள்ளும் வயது-குறிப்பாக முதிர்கன்னித் திருமணம் அதிகரிப்பு, பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, குழந்தை வளர்ப்புக்கான செலவு, தவறான உணவுப் பழக்கத்தால் ஆண்-பெண் இருபாலருக்கும் பாலியல் வீரிய மந்தம் போன்ற பல காரணிகளின் கூட்டு விளைவுதான் இது.

ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பதற்கான மருத்துவ செலவு மட்டும் இன்றைய குடும்பங்களின் கவலை அல்ல; அந்த குழந்தைக்கு நல்ல ஆரம்பக் கல்வி அளிப்பது உயர்கல்வி வழங்குவது சுகாதார செலவுகளை சமாளிப்பது வீட்டு வாகன வசதி என அடுத்த 20 ஆண்டுகளுக்கு இளம் தம்பதியர் பொருளாதார சுமையை சுமக்கின்றனர்; ஓர் இளம் தம்பதியினர் வாழ்க்கையில் நுழையும் பொழுது பெரும்பாலும் கடனாளியாக நுழைகின்றனர்; மாதாந்திர தவணை பணம் கட்டாமல் ஒரு மலேசியரைப் பார்ப்பது அரிது.

இதனால் குழந்தைகள் அதிகமாக இருந்தால் குடும்பம் வளரும் என்ற பழைய பார்வை மாறி.. .,

குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியுமா என்ற கேள்வியும் உள்ளார்ந்த அச்சமும் இன்றைய இளம் தம்பதியரின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. இது இயற்கையான சமூக மாற்றமா அல்லது செயற்கைத்தனம் கொண்டதா என்பதை வரையறுக்க முடியவில்லை.

திருமணமும் தாமதம்; மகப்பேறும் தாமதம்!

நகர வாழ்க்கை விரிவடைந்துள்ள நிலையில் இளைஞர்களின் கல்விக் காலமும் வேலை வாய்ப்பு நிலைபெறும் காலமும் நீள்கின்றன. படிப்பு முடிக்க வேண்டும்; வேலை கிடைக்க வேண்டும்; வருமானம் நிலைபெற வேண்டும்; வீடு வேண்டும்; கடன் சுமையை சமாளிக்க வேண்டும்; அதன் பின்னரே திருமணம் என்ன இக்கட்டில் இன்றைய இளைய சமுதாயம் சிக்கியுள்ளது.

திருமணத்திற்குப் பின்னரும் சில ஆண்டுகள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் புதுமண தம்பதியரிடம் ஏற்படுகிறது.

இதனால் முதல் குழந்தையை பெற்றுக் கொள்வது தாமதமாகிறது; முதல் குழந்தை தாமதமானால் இரண்டாவது குழந்தைக்கான இடைவெளியும் அதிகரிக்கலாம்; அதன் விளைவாக ஒரு குடும்பத்தின் மொத்த குழந்தைகள் எண்ணிக்கையும் குறையலாம். எனவே குறைந்துவரும் கருவுறுதல் விகிதத்தை வெறும் குழந்தை பெற விருப்பம் இல்லை என்ற மனப்பான்மையாக மட்டும் பார்ப்பது தவறானது.

தவிர பெண்களின் வாழ்க்கை முறையையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்கள் கல்வியில் முன்னேறியுள்ளனர். வேலை வாய்ப்புகளில் உயர்ந்துள்ளனர். குடும்ப வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தொழில்முறை வாழ்க்கையிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முனைப்பு காட்டுகின்றனர். இத்தகைய போக்கு, சமூகத்தின் முன்னேற்றம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதே நேரத்தில் குழந்தை பெற்ற பிறகு வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு போதுமான குழந்தை பராமரிப்பு இல்லை என்றால் குடும்பத்தையும் தொழிலையும் ஒரே நேரத்தில் கையாள்வது குடும்பப் பெண்களுக்கு சுமையாக மாறும்.

எனவே, பெண்கள் குழந்தைகளை பெற வேண்டும் என்று அரசாங்கம் கூறுவது மட்டும் போதாது; குழந்தை பெற்ற பிறகும் பெண்ணின் வேலை வருமானமும் தொழில் முன்னேற்றமும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை அரசு உருவாக்க வேண்டும்.

இந்த வேளையில் மிகவும் முக்கியமான ஒரு பகுதியையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்..!

கருத்தரித்தல் நிலையைப் பொறுத்தவரை, மலேசியாவில் இனக் குழுக்களுக்கு இடையிலான வேறுபாடும் கவனிக்கத்தக்கது. 2025 ஆம் ஆண்டில் மலாய் சமூகத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 ஆக இருந்துள்ளது; இந்திய சமூகத்தின் விகிதம் 1.1 ஆகவும் சீன சமூகத்தின் விகிதம் வெறும் 0.7 ஆகவும் பதிவாகியுள்ள நிலையில் மற்ற பூமிபுத்ரா சமூகங்களின் விகிதம் 1.5 என பதிவாகியுள்ளது.

இந்த புள்ளி விவர தகவலில், குறிப்பாக சீன சமூகத்தின் கருவுறுதல் விகிதம் 0.7 என்பது மிகக் குறைந்த அளவாகும்

இந்திய சமூகத்தின் குறிப்பாக தமிழர்களின் கருவுறுதல் விகிதமான 1.1 என்பதும் மாற்றிவிட்டு அளவான 2.1-ஐ விட மிகவும் குறைவானது. இங்கே ஒரு முக்கியமான எச்சரிக்கை தேவைப்படுகிறது

இந்த புள்ளி விவரங்களை இனங்களுக்கு இடையே நிலவும் போட்டியாக பார்க்கக் கூடாது.

மாறாக ஒவ்வொரு சமூகத்திலும் உருவாகிவரும் மக்கள் தொகை மாற்றத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ற சமூக கொள்கைகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மக்கள் தொகை என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல; அது மொழி, பண்பாடு, கல்வி, தொழில், அரசியல் பிரதிநிதித்துவம், சமூகக் கட்டமைப்பு, எதிர்காலத் தலைமுறைக்-கான திட்டமிடல் ஆகியவற்றுடனும் தொடர்புடையது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மலேசிய இந்திய சமூகத்திற்கான கேள்வி!

மலேசிய இந்திய சமூகத்தின் கருவுறுதல் விகிதம் 1.1 என்ற அளவில் இருப்பது தனிப்பட்ட கவனத்திற்குரியது. ஒரு தலைமுறையில் ஏற்படும் சிறிய சரிவு, பெரியதாக தெரியாமல் இருக்கலாம்; ஆனால், தொடர்ந்து பல தலைமுறைகளிளாக இந்த நிலை நீடித்தால் சமூகத்தின் மொத்த மக்கள் தொகை அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பது இயல்பு.

இதன் தாக்கம் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, தமிழ் பள்ளிகளின் எதிர்காலம், தொழிலாளர் சந்தை, சமூக அமைப்புகள், அரசியல் பிரதிநிதித்துவம் என பல துறைகளில் இதன் தாக்கம் வெளிப்படலாம்; பிரதிபலிக்கலாம்.

குறிப்பாக, மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கென ஒரு தனிப்பட்ட கேள்வியும் எழுகிறது. நாம் அடுத்த தலைமுறையை எவ்வாறு உருவாக்கப் போகிறோம்; அதற்கான பதில், வெறுமனே அதிக குழந்தைகளைப் பெறவேண்டும் என்பது மட்டுமல்ல; குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும்; பெற்றோர், பொருளாதார ரீதியாக நலிவடையக் கூடாது; தமிழ் மொழியும் பண்பாடும் அடுத்தத் தலைமுறைக்கு இயல்பாக செல்ல வேண்டும்; இதற்கான சமூக சூழலை உருவாக்குவதில் அனைவரும் ஒரு முகமாக முனைப்பு காட்ட வேண்டும் என்னும் கூறுகள் இதில் அடங்கியுள்ளன.

மலேசிய அரசு என்ன செய்ய வேண்டும்?

குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை சமாளிப்பது, வெறுமனே ‘அதிகக் குழந்தை பெறுங்கள்’ என்ற பிரச்சாரமாக இருக்கக் கூடாது; மாறாக, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் குடும்பத்திற்கு அரசு துணையாக இருக்கும் என்ற கொள்கையாக இருக்க வேண்டும். இளம் குடும்பங்களுக்கு மலிவான விலையில் வீடுகள், தரமான அரசு பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள், நியாயமான மகப்பேறு மற்றும் தந்தை விடுப்பு இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து சமூக நலத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

பெண்கள் வேலை வாய்ப்பு :

குழந்தைகளுக்கான சுகாதார சேவை, கல்விச் செலவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை, குடும்பங்களுக்கு வரி சலுகை உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்த குடும்ப நலக் கொள்கையை உருவாக்க வேண்டும். இதன் தொடர்பில், மகளிர்-குடும்ப-சமூக நலத்துறைக்கு கூடுதல் பொறுப்பிருக்கிறது.

கருவுறுதல் சிகிச்சை தேவைப்படும் குடும்பங்களுக்கு அரசு ஆதரவு வழங்க முடியும்; மலேசிய அரசின் LPPKN அமைப்பு, துணை இனப் பெருக்க சிகிச்சைக்கான சேவையை மேம்படுத்த வேண்டும்.

பிறப்பு விகிதம் குறைவது மட்டும் அல்ல;
மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சிக்கல்:

இன்றைய குழந்தை பிறப்பு குறைவு என்பது நாளைய இளைஞர் குறைவு; நாளைய இளைஞர் குறைவு என்பது நாளைய தொழிலாளர் பற்றாக்குறை என்னும் நிலையைத் தோற்றுவிக்கும். அதேநேரத்தில் இன்றைய நடுத்தர வயதினர் நாளை முதியவர்களாக மாறுவார்கள்; அப்போது மருத்துவ செலவும் அதிகரிக்கும்; முதியோர் பராமரிப்புத் தேவையும் அதிகரிக்கும். ஓய்வூதிய சுமை அதிகரிக்கலாம்; இளைஞர்கள்மீது குடும்ப பொறுப்பு அதிகரிக்கலாம். இதனால் ஒரு நாட்டின் பொருளாதார கொள்கைகூட மாற வேண்டிய சூழல் உருவாகும்.

மக்கள் தொகை என்பது, பொருளாதாரத்தின் அடித்தளம். எனவே கருவுறுதல் விகிதம் குறைவதை குடும்ப விவகாரமாக மட்டும் பார்க்காமல் பொருளாதார திட்டமிடலின் ஒரு பகுதியாகவும் கருத வேண்டும்.

இந்த சிக்கல் மலேசியாவிற்கு மட்டுமான சிக்கல் அல்ல!

உலகின் பல முன்னேறிய நாடுகளிலும் முன்னேறும் நாடுகளிலும் நகர மயமான சமூகங்கள் இதேப் பிரச்சினையை எதிர்கொள்கின்றன.

கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் மிகவும் குறைந்த கருவுறுதல் விகிதம் காணப்படுகிறது. அதனால் மலேசியா மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சிக்கலை எதிர்கொள்ளவில்லை. ஆனாலும் மலேசியாவிற்கு தனித்துவமான ஒரு சவால் இருக்கிறது

இனம், மொழி, சமயம், மண்டல அளவில் வேறுபடும் சமூக சூழல் ஆகிய பல்வேறு சமூக அமைப்புகளைக் கொண்ட நாடு மலேசியா.

எனவே மக்கள் தொகை மாற்றமும் வேறுபாடும் ஒவ்வொரு சமூகத்திலும் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது. இதனால் எதிர்கால மக்கள் தொகை கொள்கையும் ஒரே மாதிரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.

எனவே, மலேசியாவின் மக்கள் தொகையை வீழ்ச்சியைப் பற்றி பேசும்பொழுது, இளம் தலைமுறையை மட்டும் குற்றம் சாட்டக் கூடாது; அவர்களுக்கு ஏன் குழந்தைகள் குறைவாக இருக்கின்றன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பம் குழந்தையைப் பெற தயங்குவது அந்த குடும்பத்தின் குறைபாடாக இருக்கலாம் என்று கருதுவதற்கு முன், இந்த நாட்டில் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு நாம் எத்தகைய சூழலை உருவாக்கி இருக்கிறோம் என்பதை அரசும் சமூகமும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உலகம் தற்போது புவிசார் அரசியல் தாக்கத்திலிருந்து விடுபட்டு இன-சமய-மொழிசார் வழச்சாரி அரசியல் பக்கம் சாய்ந்துள்ளது. மலேசியாவும் இத்தகைய சூழலில் ஒரு முக்கிய கட்டத்தை தொட்டு நிற்கிறது.

பிறப்பு விகிதம் குறைகிறது; கருவுறுதல் விகிதம் குறைகிறது; இயற்கையான மக்கள் அதிகரிப்பின் வேகம் குறைகிறது; இவை அனைத்தும் சேர்ந்து கூறும் செய்தி ஒன்றுதான்.

இது மக்கள் தொகை பற்றிய புள்ளி விபரம் மட்டுமல்ல; நாளைய மலேசியாவை பற்றிய முன்னறிவிப்பு.

இன்றைய குழந்தைகளின் எண்ணிக்கையை பற்றி நாம் எவ்வளவு கவலைப்படுகிறோமோ அதைவிட முக்கியமாக நாளைய குழந்தைகள் பிறக்க இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக இன்று என்ன செய்கிறோம் என்பதுதான் வரலாறு நாளை நம்மிடம் கேட்கப்போகும் கேள்வியாக இருக்கும்.

-குமரி வான்முற்றத்திற்காக அகரன்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை