Friday, October 30, 2026

முனாஃபிக்’- ‘கோயில் ஹராம்’ விவகாரம்:-அன்வார் இரட்டை நிலை!-பொன் வேதமூர்த்தி குற்றச்சாட்டு!!

தன்னையும் இந்து வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்துப் பயன்படுத்தப் படும் மதரீதியான முத்திரைகளுக்குப் பதிலளிப்பதில் பிரதமர் அன்வார் இப்ராகிம் இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாக மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று, அக்டோபர் 29-ஆம் தேதியிட்ட கடிதத்தில், கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் ‘முனாஃபிக்’ என்ற வார்த்தையை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சர்ச்சையைத் தொடர்ந்து, ‘மிதவாதத்தையும் சகிப்புத்தன்மையையும்’ கடைப்பிடிக்குமாறு அன்வார் விடுத்த கோரிக்கையை பொன். வேதமூர்த்தி கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

‘முனாஃபிக்’ என்ற வார்த்தை பிரதமர் அன்வாரை தனிப்பட்ட முறையில் குறி வைக்கும்போது அவர் வருத்தப்படுகிறார். அதேவேளை, இருபது லட்சத்திற்கும் அதிகமான இந்துக்களின் புனித வழி பாட்டுத் தலங்களை அடையாளப்படுத்த ‘கோயில் ஹராம்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியபோது, இந்துக்கள் எப்படி உணர்வார்கள் என்பதைப் பற்றி அவர் அக்கறைப்படவில்லை”.

அன்வாரின் மொழிநடையை “அலட்சிய மானது-பொறுப்பற்றது” என்று குறிப்பிட்டுள்ள சட்ட வல்லுநருமான பொன். வேதமூர்த்தி, ‘முனாஃபிக்’ மற்றும் ‘ஹராம்’ ஆகிய இரண்டு வார்த்தைகளுமே இஸ்லாத்தில் ஆழமான அர்த்தங்களைக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளார்.

அன்வார் பயன்படுத்திய சொல், இந்து வழிபாட்டுத் தலங்களைக் கண்டிப்பதில் மதரீதியான முக்கியத்துவத்தை அளிப்பதாகவும், நீண்ட காலமாக நில உரிமைப் பட்டாக்கள் வழங்கப்படாத கோயில்கள்மீது சந்தேகத்தைத் தூண்டுவதாகவும் அவர் வாதிட்டார்.

அரசாங்கம் காட்டிய அலட்சியத்தின் விளைவுகளை, இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான ஒரு களங்கமாக அன்வார் மாற்றிவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர்ருமான அவர் கூறியுள்ளார்.

காலனித்துவ ஆட்சியின் போது அனுமதியுடன் நிறுவப்பட்ட கோயில்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை நிலைநாட்டுவதில், மெர்டேகாவுக்குப் பிறகு ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக, அடுத்தடுத்து அமைந்த அரசாங்கங்கள் தோல்வியடைந்துவிட்டன என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘கோயில்கள் மீது குண்டு வீசப்படும்’ என்ற அச்சுறுத்தல்; ‘இந்தியர்களை அவர்களின் இடத்தில் வைக்க மே 13 போன்ற கலவர எச்சரிக்கை’ மற்றும் கோயில்களைக் குறிவைக்கும் இணையவழிப் பிரச்சாரங்கள் குறித்து அன்வாருக்குத் தான் ஏற்கெனவே அனுப்பிய கடிதங்களில் எச்சரித்ததாகவும் அக்கடிதத்தில் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டு இருக்கிறார்.

“இவை தேசியப் பாதுகாப்பு, சமூக அமைதி மற்றும் உயிர்களின் பாதுகாப்பு தொடர்பான கடுமையான எச்சரிக்கைகள்” என்று தெரிவித்திருக்கும் ஹிண்ட்ராஃப் தலைவருமான அவர், தன் கடிதங்களுக்கு இதுவரை பதில் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘முனாஃபிக்’(நயவஞ்சகப் பேச்சு) குறித்த சபாநாயகரின் தலையீட்டுடன் அந்த மௌனத்தை ஒப்பிட்டுள்ள பொன் வேதமூர்த்தி, ஒரு முழு சமூகத்தின் கண்ணியமும் பிரதமரின் உணர்வுகளுக்குக் குறைவானதாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின்மூலம் வரலாற்றுப் பதிவுகளை வெளிப்படுத்தி நாட்டில் உள்ள பழம்பெரும் கோயில்களுக்கு நிரந்தர அங்கீகாரமும் பாதுகாப்பான நில உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலருமான பொன்.வேதமூர்த்தி அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை