Friday, October 23, 2026

மலேசியாவில் தமிழர் மட்டுமல்ல; தமிழும் வாழ்கிறது: புத்தகப் பரிசுப் போட்டி மீண்டும் மலர்கிறது; -டத்தோ சகாதேவன்

பேரறிஞர் அண்ணா சொன்னார்; “மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கின்றனர்” என்று; உண்மையில் தமிழர்கள் மட்டும் வாழவில்லை; தமிழும் வாழ்கிறது. அதற்கான கடப்பாட்டை, கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு கூறுதான், இன்று நடைபெறுகின்ற இந்த இலக்கிய பரிசளிப்பு விழா என்று நேற்று நடைபெற்ற 34 ஆவது இலக்கிய பரிசுப் போட்டியில் தலைமை உரை ஆற்றியபோது, கூட்டுறவு சங்கத்தின் நிருவாக இயக்குநரும் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியச் செயலருமான டத்தோ ப.சகாதேவன் குறிப்பிட்டார்.

இதுபோன்ற இலக்கிய-தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதிச் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், கூட்டுறவு சங்க வருமானத்தில் இருந்து ஒரு கோடி நிதியை அறவாரியத்தின் பெயரில் வைப்புநிதியாக வைத்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாயைக் கொண்டு, இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இடையில், பன்னாட்டு-உள்நாட்டு புத்தகப் பரிசுப் போட்டி, ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றது. பத்தாயிரம் டாலர் பரிசுத் தொகையை உள்ளடக்கிய அந்தப் போட்டிக்கு உரிய வரவேற்பு குறைந்ததால் ஆறாவது முறை நடைபெற்ற போட்டியுடன் அது நிறுத்தப்பட்டது.

தற்பொழுது, அந்தப் போட்டி மறுவடிவத்தில் மீண்டும் நடைபெற இருக்கிறது. உளநாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 10ஆயிரம் வெள்ளி பரிசுத் தொகையுடன் அந்தப் போட்டி மீண்டும் தொடர இருக்கிறது என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்த இலக்கியப் பரிசளிப்பு விழாவிற்கான வித்தை 34 ஆண்டுகளுக்குமுன் விதைத்தவர், கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தம்தான் என்று டத்தோ பா. சகாதேவன் தன்னுடையில் உறையில் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, மருத்துவரும் இலக்கியப் பேச்சாளருமான வ.ஜெயபாலன், வாழ்க்கையை மாற்றும் வார்த்தைகள் என்ற தலைப்பில் பேசினார். தமிழர்தம் சொல்லும் சிந்தனையும் பரந்த அளவில் இருக்கும் என்பதை சங்க காலம் முதல் தற்பொழுதுவரை உருவாகும் இலக்கிய வடிவங்களும் கருத்து வெளிப்பாடும் சுட்டுகின்றன என்றார்.

-கவிதா ராமசாமி சிறுகதையில் முதல் பரிசு வென்றார். தொடர்ந்து, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தான்ன்ஸ்ரீ கே ஆர் சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 34 ஆவது இலக்கிய பரிசுப் போட்டிக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
சிறுகதை பிரிவில் கவிதா ராமசாமி வெ.2,500 ரொக்கத்துடன் முதல் பரிசை வென்றார்.

அதைப்போல மரபுக் கவிதையில் கவிஞர் சுங்கைஜாவி சுப்பிரமணியன் 2,500 வெள்ளியுடன் முதல் பரிசை வென்றார்; மூன்றாவதாக கட்டுரைப் போட்டியில் சிவம் தமிழ்ச்செல்வம்வெ.2,500 பண பரிசுடன் முதல் பரிசை வென்றார். நான்காவதாக புதுக்கவிதை பிரிவில் வெள்ளைச்சாமி த/பெ சுப்பிரமணியன் என்பவர் முதல் இடத்தில் வென்று வெள்ளி 2,500 பண பரிசு பெற்றார். ஐந்தாவதாக மாணவர் சிறுகதைப் பிரிவில் யோகேஸ்வரன் சேது வெ.2,500 ரொக்கத்துடன் முதல் பரிசை வென்றார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை