
மலேசிய திராவிட இயக்க கூட்டமைப்பின் சார்பாக மலேசிய மாந்தநேய திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயாவில் இன்று பிப்ரவரி இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை கைக்கூலி சீமானுக்கு எதிராககண்டனக் கூட்டம் நடைபெற்றது.
மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத் தலைவர் நாகபஞ்சு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மலேசிய திராவிட கழகம், மலேசிய பெரியார் பாசறை, மலேசிய தமிழர் தன்மான இயக்கப் பேரவை ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாந்தநேய திராவிடர் கழக பொதுச்செயலாளர் ச. அன்பரசன் வரவேற்புரையைத் தொடர்ந்து நாகபஞ்சு பேசியபொழுது சீமானின் பொய்யையும் புரட்டையும் வெகுவாக கண்டித்தார்.
திராவிட இயக்க மேடைகளில் பயிற்சி பெற்று திராவிட இயக்க தலைவர்களின் துணையோடு வளர்ந்து விட்டு இப்பொழுது ஆரிய அடிமையாகி இருக்கும் சீமான் கொள்கை ரீதியாக பேசுவதற்கு எதுவும் ஆகாத நிலையில் தனிப்பட்ட முறையில் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதுவும் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசி தன்னை ஒரு அரசியல் நாயகனைப்போல நாடகமாடும் அவருக்கு இனத்தின் நன்மை குறித்து மொழியின் மேன்மை குறித்து பேசுவதற்கு வக்கூம் இல்லை: வகையும் இல்லை.

ஏறக்குறைய கடந்த 15 நூற்றாண்டுகளாக தமிழ் நாட்டு தமிழ்ச் சமூகத்தில் பகைமையை தோற்றுவிக்கும் கோடரிக்காம்பாக இவரை ஆரிய வட்டம் இறக்கி விட்டிருக்கிறது.காலம் இதற்கு விரைவில் பதில் சொல்லும் என்று மானமிகு நாகபஞ்சு தன் உரையில் குறிப்பிட்டார்.
அவரை அடுத்து மாந்தநேய திராவிடர் கழகத்தின் மதி உரைஞரும் மலேசிய திராவிட கழகத்தின் முன்னாள் தேசிய தலைவருமான இரெ. சு. முத்தையா பேசினார்.
தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்டும் அளவுக்கு பெரியாரைப் பற்றி கேவலமாக பேசித் திரியும் ஒரு ஆசாமிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய பணிகளை கேவலப்படுத்தும் நோக்கில் சீமானுடைய பேச்சும் செயலும் அமைந்திருப்பது கண்டு நாங்கள் வெட்கப்படுகிறோம்; வேதனைப்படுகிறோம்.
அந்த அடிப்படையில் இன்று நடக்கிற இந்தக் கூட்டத்தின் மூலம் சீமானுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் அதேவேளை, இதன் தொடர்பில் விரைவில் ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி, சீமானுக்கு எதிராக நாங்கள் திசை திருப்ப இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏறக்குறைய நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது திராவிட இயக்கம். இந்த இயக்கத்தை உருவாக்கிய தந்தை பெரியார் மறைந்து 53 ஆண்டுகள் ஆன பின்னும் தமிழ்ப் பெருமக்களின் மனதில் கொள்கைக்குன்றாக, சமதர்ம சமுதாய அடையாளமாக
தந்தை பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியாருடைய தொண்டறம் என்பது மிகவும் சிறந்தது; உயர்ந்தது. மாந்தநேயத்தையும் சமதருமத்தையும் பெண் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டது.
கல்வியிலும் பொருளாதரத்திலும் மிகவும் பின்தங்கியிருந்தஇந்த மக்களுக்காக அவர் ஆற்றிய சேவை மகத்தானது என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் சீமான் போன்ற இந்த கருங்காலி மனிதர்கள் அந்த பெரியாருடைய இயக்கத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டு, திராவிட இயக்க மேடைகளில் பேசிப் பேசி, அதன்மூலம் தன் வாழ்வை செம்மைப்படுத்திக் கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டபின், இப்போது பெரியார்மீது எதிர்வினை ஆற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கருத்துக்கு கருத்து என்ற அடிப்படையில் மோதல்நிலை இருந்தாலும் தாழ்வில்லை; மாறாக, தந்தை பெரியாருடைய செயலை, அவருடைய பணியை அவருடைய இயக்கத்தை அவருடைய தொண்டறத்தை கேவலப்படுத்தும் நோக்கில் மிகவும் மோசமான நிலையில் பேசி வருவதை நாம் கடுகளவும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்கள் எப்படி நினைக்கிறார்கள் என எங்களுக்கு தெரியாது. ஆனால் மலேசியாவில் வாழுகின்ற தமிழ் மக்களாகிய நாங்கள் சீமானுடைய இந்த மொழி-இன துரோக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசும் தமிழ்நாட்டு மக்களும் இதற்கு தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பெரியாரைப் பற்றி இழிவாகப் பேசும் எவராக இருந்தாலும் நாமும் தக்க நடவடிக்கை எடுத்து உரிய பாடம்புகட்ட வேண்டும் என்று இந்தவேளையில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதாக மானமிகு இரெ சு முத்தையா தன் கண்டன உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பெரியார் பாசறை இயக்கத்தின் சார்பில் மருத்துவர் பாரியும் தமிழர் தன்மானப் பேரவையின் செயலாளர் சி.மு. விந்தைக்குமரனும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மாந்தநேய திராவிடர்க் கழகத்தின் பொருளாளர் முல்லை யோகேசுவரன் ஆற்றிய நன்றியுரையுடன் இந்தக் கூட்டம் நிறைவடைந்தது; மருத்துவர் பாரியும் விந்தைக்குமரனும் ஆற்றிய கண்டன உரைகள் நாளை தொடரும்..!


