(இன்று கலைஞருக்கு 102-ஆவது பிறந்தநாள்)

1969 பிப்ரவரி 03-04; தமிழ் நாட்டின் இடைக்கால முதலமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் நல்லடக்கத்திற்-கான ஏற்பாடுகள் மெரினா கடற்கரையில் முழு வீச்சில் நடைபெறுவதாக தமிழக ஊடகத் தகவல் தெரிவித்தன; குறிப்பாக, சென்னை வானொலி, அடிக்கடி இந்த அறிவிப்பை செய்து வந்தது; அன்றைய தமிழகம் மட்டுமல்ல; உலகத் தமிழினமே கண்ணீரில் தத்தளித்தது.
இந்த மலையக தேசிய தமிழ் நாளேடான தமிழ் நேசனில் அனைத்துப் பக்கங்களிலும் அண்ணாவைப் பற்றிய செய்திகள் மட்டுமே இடம்பெற்ற தகவலை அறிந்த அன்றைய மலேசிய அரசு, இது குறித்து விளக்கம் கேட்டதாகவும் தெரிகிறது.
கடைசியில், நெடுஞ்செசியனை வீழ்த்தி தமிழ் நாட்டின் முதல்வரானார் கலைஞர் மு.கருணாநிதி. கலைஞருக்கு இருந்த ஒரேப் பற்றுக் கோடு எம்ஜிஆர். அதற்கேற்ற வண்ணம் எம்ஜிஆரும் செயல்பட்டு கலைஞருக்கு உற்றுழி உதவி, உரிய வகையில் தோளும் கொடுத்தார்.
சாமர்த்தியமான எம்ஜிஆர்., திராவிட இயக்கத்தில் இணையுமுன், அந்த இயக்கத்தில் ஒட்டிக் கொண்டிருந்தவர் சிவாஜி கணேசன். காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர் எம்ஜிஆர்.

பராசக்தி திரைப்படத்தில் நாயகனாக சிவாஜி கணேசன் நடிப்பதை எதிர்த்தவர் ஏவி மெய்யப்ப செட்டியார். அதற்கு அவர் சொன்ன காரணம், சிவாஜியின் தோற்றத்தில், பெண் சாயல் தெரிவதால், அவர் ஆண் கதாபாத்திரத்திற்கு லாயக்கற்றவர் என்று ஏவிஎம் வாதிட்டார்.
அதற்குக் காரணம், அதற்குமுன் சிவாஜி, நாடகங்களில் பெண் வேடம் ஏற்று நடித்து வந்தார்.
பராசக்தி திரைப்படத்தில் சிவாஜிதான் நாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் அண்ணா உறுதியுடன் இருந்தார்; மெய்யப்ப செட்டியாருக்குப் பிடிக்கவில்லை யென்றால், அவருக்கான பங்கு பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு, திரைப்பட தயாரிப்புக் குழுவிலிருந்து விலகிக் கொள்ளட்டும் என்று அண்ணா உறுதி காட்டியதும் வேறு வழியின்றி ஏவிஎம், விலகிக் கொண்டார்.
வர்த்தகத்திலும் திரைப்படத் தயாரிப்பிலும் வல்லாராக விளங்கிய மெய்யப்ப செட்டியார் சறுக்கிய இடம் இது ஒன்றுதான்; பின்னர், ஏவிஎம் தயாரிப்பில் எந்தப் படத்திலும் நடிக்க சிவாஜி கணேசன் அடியோடு-கடைசிவரை தவிர்த்து விட்டார்.
உண்மைநிலை இவ்வாறிருக்க, 2024 ஜனவரி முதல் நாள், ஆர்டிஎம்(Radio TV Malaysia) வானொலியான மின்னல் பண்பலையில், ஆங்கிலப் புத்தாண்டு குறித்து, கலைத் துறை சார்ந்து பலதகவலையும் தெரிவித்து வந்த கரு. கார்த்திக் என்னும் கலைஞர்-கலைத் துறை எழுத்தாளர், பராசக்தி படத்தில் நடித்த சிவாஜி, “ரொம்ப கெச்சலாக(ஓல்லியாக) இருந்ததால், படத்தில் நடிக்குமுன், அவருக்கு ஆறு மாத காலம்வரை புஷ்டியான சாப்பாடு கொடுத்து, உடம்பை சற்று பெருக்கவைத்து, அதன் பின்னர்தான் பராசாக்தியில் மெய்யப்ப செட்டியார் நடிக்க வைத்ததாக சொன்ன தகவல் மிகவும் வியப்பாக இருந்தது; மலேசிய கண்ணதாசன் அறவாரிய செயலாளராகவும் இன்றளவும் கார்த்திக் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது; அவரை செவ்வி கண்ட அறிவிப்பாளர் நளினமான ஒருவர்.
இந்த இடைச்செறுகல் தகவலுக்காக, குமரி வாசகர்கள் பொறுக்க வேண்டும்.
சிவாஜியைப் போல் எம்ஜிஆரையும் நாயக நடிகராக நடிக்க வைக்க தொடக்கத்தில் மறுத்தனர். குறிப்பாக, மந்திரி குமாரி திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு, எம்ஜிஆரின் தாடையில் ஒரு வெட்டு இருப்பதால், அவர் நாயகப் பாத்திரத்திற்கு தகுதி இல்லாதவர் என மறுதலிக்கப்பட்டது; அவ்வேளையில், அதற்கு கடும் மறுப்புத் தெரிவித்தவர் அந்தப் படத்திற்கான திரைவசன ஆசிரியர்தான்; அவர்தான் கலைஞர்.
எம்ஜிஆரின் தாடையில் ஒரு ஒட்டுத் தாடியை ஒட்ட வையுங்கள்; எல்லாம் சரியாகிவிடும் என்று பரிந்துரைத்தவரும் கலைஞர்தான். இப்படித்தான் தொடங்கியது இருவரின் நட்பும் பாச அரவணைப்பும்; இது, எங்கள் தங்கம் திரைப்படம்வரை நீடித்தது.
சிவாஜி கணேசன் திருப்பதிக்கு சென்று வந்ததன் தொடர்பில் எழுந்த விமர்சனத்தால் அவர் திராவிட இயக்கத்தில் இருந்து விலகி நிற்க, ‘உறுமீன் வரும்வரை காத்திருந்த கொக்கை’ப் போன்ற எம்ஜிஆர் அந்த நேரம் பார்த்து திமுக-வில் இணைந்தார்.
இந்தப் பாரம்பரிய நட்புதான், 1969 பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி திமுக-வில் எழுந்தபொழுது, எம்ஜிஆர் தன் ஆதரவாளர்களை நெடுஞ்செழியனுக்கு எதிராக ஏவிவிட்டு, கலைஞர் அரியணையில் அமர துணைபுரிந்தார்.
அப்படிப்பட்ட எம்ஜிஆர், கலைஞரை எதிர்க்க வேண்டிய சூழல் ஏன் எழுந்தது?
இந்த விவகாரத்தில் பாதைமாறி பயணித்தவர் நூற்றுக்கு நூறு எம்ஜிஆர்தான்.

அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் உள்ளிட்ட எந்தத் தலைவர் எந்தக் கூட்டத்தில் பேசினாலும், அவர்களின் பேச்சின் நடுவே கூட்டத்திற்கு வந்து கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி, தன் இரசிகர் மன்றத்தினர் ‘எம்ஜிஆர்’, ‘எம்ஜிஆர்’ என முழங்குவதை உள்ளூர இரசித்து இரண்டகம் புரிந்தவர் எம்ஜிஆர். கூட்டத்திற்கும் தலைவர்களின் உரைக்கும் மறைமுகமாக குந்தகம் விளைவித்தவர் எம்ஜி ஆர். திமுக-வின் எந்தக் கூட்டத்திலும் அவர் முன்னரே வந்து மேடையில் அமர்ந்ததாக வரலாறே இல்லை; ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அது வியப்பானதுதான்.
ஆனாலும், இதை திமுக மேல்மட்டத் தலைவர்கள் அனைவரும் பொறுத்துக் கொண்டனர். குறிப்பாக, அண்ணா, இன்னும் ஒருபடி மேலாக “தன் இதயக் கனி எம்ஜிஆர்” என்றார். இதனால் எல்லாம் திமுகவில் தனக்குத்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது இன்று மிதப்பில் இருந்தார் எம்ஜிஆர்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபின், எம்ஜிஆரின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த இந்த இறுமாப்பு மெல்லமாக குலைய ஆரம்பித்தது. குறிப்பாக, கலைஞர் முதல்வரானதும், அவருக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்துவது, வண்ண விளக்கு பொறுத்தப்பட்ட போலீஸ் வாகன பாதுகாப்பு, அதிகாரிகள் வாகனக் கதவைத் திறந்து மரியாதை செலுத்தியதெல்லாம் எம்ஜிஆரின் கண்ணையும் கருத்தையும் உறுத்தி இருக்க வேண்டும்.
குறிப்பாக, புது டில்லியில் கலைஞருக்கு ஏற்பட்ட அரசியல் செல்வாக்கு, பிரதமர் இந்திரா காந்தியுடன் கலைஞருக்கு ஏற்பட்ட நெருக்கம் யாவும் எம்ஜிஆருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.
இந்தக் கட்டத்தில்தான் கலைஞருடன் அவர் முரண்பட முற்பட்டார்.
பாவம் கலைஞர், அவர் ஒரு முறைகூட நிம்மதியாக ஆண்டதில்லை;
எதிரணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை அவர் சமாளித்ததைவிட, சொந்தக் கட்சியைச் சேர்ந்த நாவலர், எம்ஜிஆர், கே.ஏ.மதியழகன், ப.உ. சண்முகம், க.இராஜாராம், சத்தியவாணி முத்து, எஸ்.எஸ்.இராஜேந்திரன், மதுரை முத்து உள்ளிட்டோருடன் ‘பச்சை சகுனி’ பண்ருட்டி ச.இராமச்சதிரன், பின்னாளில் வைகோ, மு.கண்ணப்பன், செஞ்சி இராமச்சந்திரன், நன்னிலம் நடராசன், வேதாரண்யத்து மா.மீனாட்சி சுந்தரம், ஒரத்த நாட்டு எல்.கணேசன், சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ஆர்.டி.சீதாபதி உள்ளிட்டோரி எதிர்கொள்ள வேண்டி இருந்தது; உண்மையில் கலைஞர் சமாளித்த சொந்தக் கட்சியினரின் பட்டியல் இன்னும் நீளமானது.
ஒரு வழியாக நாவலரை சமாளித்து முதல்வரானதும், அண்ணா வகித்த பொதுச் செயலர் பதவியை நாவலருக்குத் தந்து, தான் தலைவரானார் கலைஞர்.
தந்தை பெரியாரிடம் இருந்து பிரிந்துவந்து தனிக் கட்சியைத் தொடங்கினாலும், திமுக-வில் தலைவர் பதவியை காலியாகவே வைத்திருந்தார் அண்ணா; தனக்கு எந்நாளும் தந்தை பெரியார்தான் தலைவர் என்பதில் அண்ணா உறுதியாக இருந்தார். இந்தக் கட்டமைப்பில், மாற்றம் செய்ய வேண்டிய சமரச ஏற்பாட்டிற்கு கலைஞர் தள்ளப்பட்டார்.
ஆனாலும், சமாதானம் அடையாத நாவலர் முரண்டு பிடித்துக் கொண்டே வந்தார்.
இந்தத் தருணம் பார்த்து, மதுரையில் நடைபெற்ற ஓர் அரச விழாவில்.., கலைஞரும் கலந்துகொண்ட அவ்விழாவில், ஒரு நடிக்கைக்கு மேடையில் இடம் அளிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் வைத்த கோரிக்கையை கலைஞர் மறுத்ததாகத் தெரிகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான மேடை கலை விழா மேடை அல்ல; அரச விழா; எனவே, அரச நிருவாகத்திற்கும் கலைப் பாட்டைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும் என்று கலைஞர் அறிவுறுத்தியதை எம்ஜிஆர் ஏற்கவில்லை போலும்; சம்பந்தப்பட்ட நடிகையும் ஜெயலலிதா போலும்!!
இப்படிப்பட்ட சூழலில், இந்திரா காந்தி திடீரென பொதுத் தேர்தலை அறிவித்தார். 1971 பாகிஸ்தான் போரில் வென்று, கிழக்குப் பாகிஸ்தானை வங்க தேசமாக உருவாக்கி, உலக வரைபடத்தை மாற்றியதால், இந்திராவின் புகழ் தேசிய அளவிலும் உலக அளவிலும் கொடிகட்டிப் பறந்தது.
இதை தேர்தல் அறுவடைக்காகப் பயன்படுத்த விரும்பிய இந்திரா, 1972-இல் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலை 1971-லேயே திடீரென அறிவித்தார். இந்திய நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்குமான ஒரேக் கட்ட தேர்தல் அது;
அந்தத் தேர்தலில் திமுக தோற்றுவிடும் என்றும் கு.காமராசர் மீண்டும் முதல்வர் ஆகிறார் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளியாயின. இதனை நம்பிய எம்ஜிஆர், வாக்களிப்பு முடிந்தவுடன் காஷ்மீருக்குப் புறப்பட்டார்.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்கான நிறைவுக்கட்ட படப்பிடிப்பு அங்கு நடைபெற்றது.
தேர்தல் முடிவு வெளியானபோது, திமுக யானை வலிமையுடன்(184/234) ஆட்சியைத் தக்க வைத்தது. காஷ்மீரிலிருந்து கலைஞரைத் தொடர்பு கொண்ட எம்ஜியார், தனக்கு சுகாதாரத் துறை அமைச்சர் வேண்டும் என்று கேட்டார்.
அப்படியானால், 5 ஆண்டுகளுக்கு அல்லது அமைச்சர் பதவியில் நீடிக்கும்வரை திரைப்படத்தில் நடிக்கக்கூடாதென்று கலைஞர் விதித்த கட்டுப்பாட்டை ஏற்காத எம்ஜியார், தான் உடனே சென்னைக்கு திரும்புவதாகவும் அதுவரை புதிய அமைச்சரவைப் பட்டியலை அறிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
கலைஞரோ, ‘வேலையைப் பார்’ என்ற தோரணையில் அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துவிட்டார். சென்னைக்குத் திரும்பிய எம்ஜிஆர், ஏமாற்றத்துடனனும் கலைஞர்மீதான பகையுடனும் மீண்டும் காஷ்மீர் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.
எற்கெனவே, காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக ஆட்சியைப் பிடித்ததை விரும்பாமல் இருந்த இந்திரா, இப்பொழுது மிக வலிமையுடன் மீண்டும் கலைஞர் அதிகாரபீடத்தைத் தக்கவைத்ததை அடியோடு விரும்பவில்லை.
திமுக-விற்கு துரோகம் இழைப்பதாக எண்ணி, தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் அடுத்தடுத்து வஞ்சகத்தையும் சூட்சியையும் அரங்கேற்றத் தொடங்கினார், இந்திரா.
இவற்றை அவதாணிக்க கலைஞர் தவறிவிட்டார்.
முதல் தவணை ஆட்சியின்போது நாவலர், இப்பொழுது எம்ஜிஆர் என கட்சியிலும் அதன் விளைவாக ஆட்சியிலும் நிலவிய சிக்கலைத் தீர்ப்பதில் கவனம் செலுத்திய கலைஞர், கர்நாடக காங்கிரஸ் முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸை ஏவிவிட்டு, காவிரி நதிக்கு நீரை வழங்கிவந்த துணை நதிகளான கபினி, ஹேமாவதி, சொர்ணமுகி, சாரங்கி உள்ளிட்ட ஐந்து ஆறுகளிலும் கமுக்கமாக தடுப்பு அணைகளைக் கட்டி, காவிரி வரண்டுபோகும் நிலையை உறுவாக்கினார் இந்திரா.
இது, பன்னாட்டு நதிநீர்ச் சட்டத்திற்கு விரோதமானது; நைல் நதி, நாடுவிட்டு நாடு ஓடினாலும், மேட்டுப் பகுதியில் உள்ள எந்த நாடும் அந்நதியின் குறுக்கே அணைக் கட்டியதில்லை.
காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்த எம்ஜிஆரை இந்திராவின் கையாளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்குத் தாவியவருமான மோகன் குமாரமங்களம் அணுகி, உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவராது என்றும் வெளிநாட்டுப் படப்பிடிப்புத் தொடர்பான அந்நிய செலாவணிக் கணக்கு ஒப்படைக்கப்பட வில்லை என்றும் எம்ஜிஆரை நேரில் மிரட்டிவிட்டு, பிரதமர் இந்திரா காந்தி சொல்வதைக் கேட்டால்-நடந்தால், எல்லாச் சிக்கலும் தீர்த்துவைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதன்பின்னர்தான், எம்ஜிஆரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது; சென்னை திரும்பியதும் திமுக-வினர் அனைவரும் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும் என்று அறிவித்தார்.
திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர்தான் எல்லா கணக்கையும் நேர் செய்ய வேண்டும் என்ற நிலையிருக்க, இவரே கணக்குக் கேட்டு, குந்தகம் விளைவிக்கத் தொடங்கினார்.
இந்த நேரம் பார்த்து, பொதுச் செயலாளராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், தலைவர் கலைஞரின் அனுமதியின்றி எம்ஜிஆரை திமுக-வில் இருந்து விலக்கினார். தன்னை விழ்த்தி, கலைஞர் முதல்வராவதற்கு எம்ஜிஆர்தான் காரணம் என்று உள்ளூர பொறுமிக் கொண்டிருந்த நாவலர், பொருத்தமான சமயம் பார்த்து எம்ஜிஆரை வஞ்சம் தீர்த்தார். கலைஞருக்கும் அவருக்கும் பகைத் தீயையும் மூட்டி வைத்தார்.
1972 அக்டோபர் 17-ஆம் நாள் அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆருக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களான எம்.கல்யாணசுந்தரமும் பி.இராமமூர்த்தியும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நேரம் பார்த்து, முதல்வர் கலைஞரை ஆலோசிக்காமல், தமிழ் நாட்டிற்கு பாத்தியமான கச்சத் தீவை இலங்கைக்கு அளித்து, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகேவின் நட்பை வலுப்படுத்தினார் இந்திரா.

இது குறித்த சிக்கல் முற்றிக் கொண்டிருந்த நேரத்தில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக அமோக வெற்றிபெற, காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும் ஆளும் கட்சியாக இருந்த திமுக மூன்றாம் இடத்திலும் நிலைகொண்டன.
தொடர்ந்து, 1974-இல் புதுப்பிக்க வேண்டிய காவிரி நதி ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாத சூழ்நிலைக்கு இந்திரா தள்ளினார். வேறு வழியின்றி கலைஞர் புது டில்லி உச்சநிதிமன்றத்தில் தொடுத்த வழக்கையும் திரும்பப் பெறவைத்தார் இந்திரா.
இவ்வாறெல்லாம் அடுத்தடுத்து வஞ்சகம், துரோகம், இரண்டகம் என எல்லாவற்றையும் எதிர்கொண்ட கலைஞர், இந்திராவும் எம்ஜிஆரும் கூட்டுசேர்ந்து தனக்கெதிராக அரங்கேற்றிய சர்க்காரியா ஊழல் விசாரணை ஆணையத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தது.
1971 பொதுத் தேற்தலின்போது, உத்திர பிரதேசத்து ரேபரேலி தொகுதியில் இந்திரா தேர்தல் விதிமுறையை மீறி வெற்றிபெற்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அவரின் வெற்றி செல்லாதென்று அறிவித்ததுடன் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் உச்ச நீதிமன்றம் இந்திரா காந்திக்கு தடைவிதித்தது.
இதனால், நாட்டில் அவசர கால(Maintenance of Internal Security Act) சட்டத்தை அறிவித்து, நீதித் துறை, அச்சு ஊடகம் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கினார் இந்திரா.
இதற்கு தேசிய அளாவில் ஆதரவளித்த ஒரேத் தலைவர்-ஜனநாயக விரோதி எம்ஜிஆர் மட்டுமே.
சளைக்காத கலைஞர், இந்திராவிற்கு(பிரதமருக்கு) எதிராக தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதனால், வெகுண்ட இந்திரா, தமிழ் நாட்டு சட்டமன்றத்தைக் கலைத்து, அளுநர் ஆட்சியை 1976 ஜனவரி 31-ஆம் நாள் அமல்படுத்தினார். இந்த வேளையில்தான் திமுக-வின் இன்றைய தலைவரும் அன்றைய தலைவரின் மகனுமான மு.க.ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டு சிறையில் தாக்கப்பட்டார்.
அந்த நேரத்தில், தேசிய அரசியலும் புது உருமாற்றம் கண்டது; எதிரும் புதிருமான பல கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சி என்னும் ‘ரோஜா’க் கட்சி உருவானது.
ஒருவழியாக அவசர காலச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, 1977-இல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, திமுக வட சென்னையில் மட்டும் வென்றது. வென்ற ஒரேயொரு எம்பி ஏவிபி ஆசைத் தம்பி.
அடுத்து நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது எம்ஜிஆரின் அதிமுகவும் காங்கிரசும் பிரிந்து தனித்தனியே களம் கண்டன; ஆனாலும், எம்ஜிஆர் ராமமூர்த்தி தலைமையிலான இடது(மார்க்சிய) கம்யூனிஸ்ட் கட்சியுடனும் காங்கிரஸ் கட்சியோ கல்யாண சுந்தரம் தலைமையிலான வலது கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அணி அமைத்து தேர்தல் களம் கண்டன.
கலைஞர் தலைமையிலான திமுக-வும் ப.இராமச் சந்திரன் தலைமையிலான ஜனதாக் கட்சியயும் அணியின்றி தனித்தனியே போட்டியிட்டன. மொத்தத்தில் கலைஞர் தனியாக போட்டியிட்டார்; எம்ஜிஆரோ கூட்டமைத்து போட்டியிட்டார்.
இந்த உண்மைகளை உணராத தலைவர்களும் பத்திரிகையாளர்களும் எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை, அவரை கலைஞரால் கடைசிவரை வெல்ல முடியவில்லை என்று இன்றளவும் பேசுகின்றனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜனதாக் கட்சியும் ஆட்சியும் கட்டுகுலைந்தன. அவ்வாறு, ஜனதாக் கட்சி சிதறியபொழுதுதான், அதில் இணைந்திருந்த ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் கரமான ஜன சங்கம், பாரதிய ஜனதாக் கட்சி என்ற பெயரில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் மீளுருவாக்கம் கண்டது.
ஜனதா ஆட்சி கவிழ்ந்ததால், மூன்று ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்திற்கு மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது. இப்போது, இந்திரா காந்தியும் கலைஞரும் கரம்கோத்து தேர்தலை எதிர்கொண்டனர்.
மெரினா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருவரும் மாறிமாறி மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். அந்தத் தேர்தலில் திமுக 100 விழுக்காட்டு வெற்றியை பெற்றது; போட்டியிட்ட 16 தொகுதிகளிலும் வென்றது.
சிவகாசி, கோபிச் செட்டிப் பாளையம் என இரு தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி எம்ஜிஆரின் அதிமுக வென்றது; அந்த வேளையில் “நல்லவேளை, அதிமுகவின் சின்னம் இரட்டை இலையாக இருந்தது” என்று கலைஞர் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ரே கமிஷன் ஊழலைக் காரணமாகக் கூறி, எம்ஜிஆர் ஆட்சியைக் கலைத்து, கலைஞரின் எண்ணத்தை ஈடேற்றினார் இந்திரா.
அதைத் தொடர்ந்து தமிழ் நாட்டு சட்டமன்றத்திற்கு-1980-இல் நடைபெற்ற புதுத் தேர்தலில் மீண்டும் திமுகவும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன. எம்ஜிஆருடன் கல்யாணசுந்தரமும் இராமமூர்த்தியும் கரம்கோத்தனர்.
அத்தேர்தலில் முரசொலி மாறன் வகுத்த வியூகத்தின்படி திமுக-வும் காங்கிரசும் 113, 113 என சரிபாதி தொகுதிகளில் போட்டியிட்டன. அப்போது, தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவராக இருந்த எம்.சுப்பிரமணியன், திமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றால், அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்சினையை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எழுப்பினார்.
இதுகுறித்து விளக்கமளித்த கலைஞர், இந்த விவகாரம் இந்திராவிடம் ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டு விட்டது; திமுக-விற்குத்தான் முதல்வர் வாய்ப்பு என்றார்.
அத்துடன் விடாத சுப்பிரமணியன், ஒருவேளை, திமுக-வைவிட காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வென்றால், திமுக-விற்கு எப்படி முதல்வர் வாய்ப்பு வழங்கப்படும் என்று சண்டித்தனத்தைத் தொடர்ந்தார்.
சளைக்காத கலைஞர், முதலில் தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவோம்; மற்றதை பிறகு பார்ப்போம் என்றார். ஆனாலும், சுப்பிரமணியன் இதுகுறித்து தொடர்ந்து பேசிவந்தார்.
ஒரு கட்டத்தில், தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை, எம்ஜிஆர் சந்தித்து நலம் விசாரித்ததும் அந்நாளைய அரசியல் போக்கு மாறத் தொடங்கியது. இந்திரா காந்தியும் கண்டுகொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சியினர், கூட்டணிக் கட்சியான திமுக-விற்கு துரோகம் இழைத்து, அதிமுக-வுடன் கள்ள உறவு கொண்டனர். வாக்குப்பதிவு நாளில் காங்கிரஸ் வாக்காளர்கள் திமுக-விற்கு வாக்களிக்கவில்லை; திமுகவினரும் அப்படியே பதிலடி கொடுத்தனர்.
விளைவு, எம்ஜிஆரே மீண்டும் வென்று முதல்வரானார்.
இந்த அக்கிரமத்தையும் காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்தும் கலாச்சாரத்தையும் மறைத்து, கலைஞரால் எம்ஜிஆரை வெல்லமுடியவில்லை என்று இன்றளவும் பேசி வருகின்றனர். அந்த மட்டில், திமுக-காங்கிரஸ் உறவும் முறிந்தது.
இந்தச் சூழலில், 1984 அக்டோபர் 30-ஆம் நாள் பிரதமர் இந்திரா, சொந்த மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டார். அந்தச் சூழலில் மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி பிரதமராக விரும்பினார். ஆனால், காங்கிரஸ் கட்சி, விமான ஓட்டியாக இருந்த ராஜீவ் காந்தியை பிரதமராக அறிவித்தது.
அத்துடன், இந்திரா படுகொலை செய்யப்பட்டதால் நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த அனுதாப அலையை வாக்குகளாக மாற்ற திட்டமிட்டு, நாடாளும்னறத்தைக் களைத்து புது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த எம் ஜி ஆர், அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில், தமிழ் நாட்டு சட்டமன்றத்தைக் களைத்து, நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஒரேக் கட்டத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது;
தமிழ் நாட்டு அரச நிருவாகத்தில் பல்வேறு குளறுபடிகளும் மோசடிகளும் இடம்பெற்றிருந்தாலும், இரக்க சுபாவமுடைய தமிழக வாக்களர்கள் சாவுக்கொடு ஓட்டு; நோவுக்கொரு ஓட்டென காங்கிரஸ்-அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்தனர். எம்ஜிஆர் 3-ஆவது முறையாக தொடர்ந்து வென்றார்; கலைஞரால் வெல்ல முடியாதவர் என்று அன்றிலிருந்து இன்றுவரை அரசியல் ஞானசூனியங்களும் ஊடக வட்டத்து அரைகுறைக் கூட்டமும் சொல்லி வருகின்றன. குறிப்பாக, பிராமண ஊடகக் கூட்டம் அழுத்தமாக கூறி வருகிறது.
(கலைஞர் தன் அரசியல் பயணத்தில் எதிர்கொண்ட வஞ்சகம் தொடரும்..)


