Sunday, August 2, 2026

திரையரங்கில் தேச ஒருமைப்பாட்டு முழக்கம்!

மலேசிய தினம், தேசிய தினத்தை முன்னிட்டு ஒற்றுமையைப் பறைசாற்றிய திரைப்பட நிகழ்ச்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஜாலுர் கெமிலாங் பாடலுக்கு அனைத்து இன மக்களும் எழுந்து நின்று ஒன்றாகப் பாடிய தருணம் அது

மலேசிய தினம் மற்றும் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டுப்பற்று, இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தும் நோக்கில் மக்கள் நீதிக் கட்சி உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ந. சத்திய பிரகாஷ் தலைமையில் சிறப்பு திரைப்படக் காட்சி, ரவாங் ‘ஏஇயோன்’ பேரங்காடி திரையரங்கில் இரு திரைப்படங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் கலந்து கொண்டு குடும்பத்தினருடன் திரைப்படங்களை கண்டு மகிழ்ந்தனர். பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி “ஸ்பைடர்மேன்” மற்றும் “ஜனநாயகன்” திரைப்படங்களைப் கண்டு ரசித்தது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசியக் கொடியான ஜாலுர் கெமிலாங் திரையில் தோன்றியதுடன் ஜாலுர் கெமிலாங் பாடல் ஒலிக்கப்பட்டது.

அப்போது திரையரங்கில் இருந்த அனைத்து இன மக்களும் தன்னெழுச்சியுடன் எழுந்து நின்று, ஒரே குரலில் பாடிய காட்சி அங்கு நிலவிய தேசிய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியது.

மொழி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைத் தாண்டி மலேசியர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வை அந்த தருணம் பிரதிபலித்தது.

இந்நிகழ்ச்சி குறித்து டாக்டர் சத்திய பிரகாஷ் கூறுகையில், மலேசிய தினம் மற்றும் தேசிய தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; நாட்டின் சுதந்திரத்தையும், பல இன மக்களின் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் முக்கியமான தருணம் என்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை இதுபோன்ற பல்வேறு ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்று சார்ந்த நிகழ்ச்சிகள் உலு சிலாங்கூர் பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளதாகவும் அனைத்துத் தரப்பு மக்களும் இதில் பங்கேற்று தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய உணர்வை மக்களிடையே வேரூன்றச் செய்யும் வகையில் நடைபெற்ற இந்த திரைப்பட நிகழ்ச்சி, பொழுதுபோக்கை மட்டுமல்லாமல் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மலேசியர் என்ற பெருமிதத்தையும் அனைவரின் மனதிலும் மேலும் வலுப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை