ராணி சில்க்ஸ் நிறுவனத்தின் மாமாங்க சேவைக்கு சரவணன் பாராட்டு!!

ராணி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ ரஃபின் ஏற்பாட்டில், ஆதரவு இல்லக் குழந்தைகள் ஆயிரம் பேருக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கிய நிகழ்ச்சி இன்று முற்பகலில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இந்த உன்னதமான சமூகப் பணியின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, இந்த ஆதரவு இல்லக் குழந்தைகளை நேரடியாக அழைத்து வந்து, அவர்களுக்குப் பிடித்தமான ஆடை களை அவர்களையே தேர்வு செய்து வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப் பட்டது. குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு மகிழ்ச்சியையும் தீபாவளிப் பண்டிகையின் உண்மையான உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், ராணி சில்க்ஸ் நிறுவனத்தின் சமூகப் பணியைப் பாராட்டினார். முன்னாள் காவல்துறை அதிகாரி டத்தோ சசிகலாவும் சிறப்பு வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

மேலும், ராணி சில்க்ஸ் நிறுவனத்தின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு, ஆசியான் சாதனைப் புத்தகம் மற்றும் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின்போது விருதும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை தொடர்பான சர்ச்சை குறித்து கருத்துரைத்த டத்தோஸ்ரீ எம். சரவணன், இத்தகைய முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக, அப்பகுதி மக்களுடனும் வியாபாரிகளுடனும் கலந்தாலோசிப்பது அவசியம் என வலியுறுத்தினார்.
தாம் ஐந்து ஆண்டுகளும், டத்தோ லோகபாலா ஐந்து ஆண்டுகளும், டத்தோ எட்மண்ட் சந்தாரா இரண்டு ஆண்டுகளும் கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர்களாக பொறுப்புகளை வகித்த காலகட்டங்களில், இத்தகைய பிரச்சினைகள் எழவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒரு திட்டத்திற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது மட்டுமே முக்கியமல்ல. அந்தச் செலவினால் மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உண்மையில்ங்க பயன் கிடைத்துள்ளதா” என்பதுதான் முக்கியம்.
எனவே, ” முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக அப்பகுதி மக்களிடம் பேசி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்,” என்றார்.
மேலும், இதுபோன்ற விவகாரங்களில் ஏற்கெனவே அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனைகளையும் பெறுவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹனா இயோவின் பணிகளைப் பொதுவாகப் பாராட்டிய சரவணன், சில சிறிய விவகாரங்களில் உரிய கவனம் செலுத்தத் தவறுவதால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகின்றன என்றும் கருத்துரைத்தார்.
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை போன்ற மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்களில், சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அவரது கருத்தின் சாரமாக அமைந்தது.


