- புதுமைத் தலைவர் பொன் வேதமூர்த்தியின் மறுமலர்ச்சிச் சிந்தனை!!

தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைக் காலங்கள் வந்தாலே அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், கல்விமான்கள் என பலரும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.
இந்த வகையில் மலேசிய முன்னேற்றக் கட்சி (MAP) தலைவர் பொன் வேதமூர்த்தி முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார். நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளித் திருநாளையொட்டி ஊடக நண்பர்கள் வாழ்த்துச் செய்தி கோரியபோதும், அவர் வாழ்த்து தெரிவிக்க மறுத்திருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து தனது நிலைப்பாட்டை விளக்கிய அவர், வெறும் சம்பிரதாயமாக வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதால் மக்களுக்கு எந்தவித நடைமுறைப் பயனும் ஏற்படுவதில்லை என்று கூறியுள்ளார்.
“ஓர் அரசியல் தலைவர், சமூகத் தலைவர், கல்விமான் அல்லது செல்வந்தர் வாழ்த்து தெரிவிப்பதால் மட்டும் மக்களின் வாழ்க்கை யில் வளர்ச்சியோ ம்றுமலர்ச்சியோ ஏற்படுவதில்லை. அவர்களுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் அது நேரடியாக உதவுவதில்லை. சமூகமும் அதனால் முன்னேறுவதில்லை. மக்கள் தங்களுடைய உழைப்பு, திறமை, முயற்சி மற்றும் விடாமுயற்சியின் மூலமே முன்னேற்றம் அடைகிறார்கள்,” என்று அவர் ஊடகத்தாரிடம் கருத்து தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் வாழ்த்து என்பது சமூகத்தில் காலப்போக்கில் உருவாகியுள்ள ஒரு மரபு என்றாலும், அதன் உண்மையான அர்த்தத்தையும் பயனையும் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய காலகட்டம் இது என்பது அவர் வெளியிட்ட கருத்தின் உள்ளார்ந்த பொருளாகத் தெரிகிறது.
இன்றைய சூழலில் பண்டிகைக் காலங்களில் ஆயிரக்கணக்கான வாழ்த்துச் செய்திகள் பரிமாறப்படுகின்றன. சமூக ஊடகங்கள் முழுவதும் வாழ்த்துகளால் நிரம்பி வழிகின்றன. எனினும், அவை பெரும்பாலும் சடங்கு ரீதியான செயற்பாடுகளாகவே மாறிவிடுகின்றன என்ற விமர்சனமும் சமூகத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ‘வாழ்த்துகளை விட மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கான செயல்களே முக்கியம்’ என்ற அடிப்படையில் பொன் வேதமூர்த்தி எடுத்துள்ள முடிவு வித்தியாசமான பார்வையாகக் கருதப்படுகிறது.
அவரது இந்த நிலைப்பாட்டை சிலர் வரவேற்று, மக்களை சிந்திக்கத் தூண்டும் கருத்தாகப் பாராட்டுகின்றனர். அதேவேளை யில், பண்டிகை வாழ்த்துகள் என்பது சமூக உறவுகளையும் அன்பையும் வெளிப்படுத் தும் பண்பாட்டு அடையாளம் என்பதால் அவற்றை முற்றிலும் தவிர்க்கக் கூடாது என பிற தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
எதுவாயினும், வழக்கமான அரசியல் பாணியிலிருந்து – வாழ்த்துச் செய்திகளின் பாதையிலிருந்து விலகி, ‘வெற்றுச் சம்பிரதாயத்தை விட செயல்பூர்வமான முன்னேற்றமே முக்கியம்’ என்ற கருத்தை முன்வைத்துள்ள பொன் வேதமூர்த்தியின் இந்நடவடிக்கை, இந்த தீபாவளிக் காலத்தில் புதிய கருத்துருவாக்கத்தை உருவாக்கியுள்ளது.


