
மலேசித் தலைவர்கள்கூட போயஸ் தோட்டத்திற்குச் சென்று நேரில் வாழ்த்திய சசிகலாவின் முதல்வர் கனவு சிதைந்தது! .. .. அல்ல அல்ல, சிதைக்கப்பட்டது
வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் சொன்னபடி முகலாய ரத்தத்தைக் கொண்டிருந்த சசிகலா, ஜெயலலிதாவுடன் இணைந்து மேற்கொண்ட அரசியல் பயணத்தின்வழி பெற்ற பட்டறிவால் அரச தந்திர காய்நகர்த்துதலிலும் நன்கு தேர்ந்திருந்தார்.
சசிகலா மிகவும் அரும்பாடுபட்டு, மிக நுட்பமாக திட்டமிட்டு உருவாக்கிய அரசியல் வசந்தம் வாசல்வரை வந்து அப்படியே விலகிச் சென்றது.
எட்டிப் பிடிக்கும் தூரத்தில் கூட அல்ல; இதோ தழுவிக் கொள்ளும் வண்ணம் அருகில் வந்து நின்ற முதல்வர் பதவி, சுமார் எட்டு நாட்கள் தன்னை சுற்றி சுழன்றுவர, சசிகலாவோ ஆவல்மிக காத்திருந்து, காத்திருந்து கடைசியில் முதல்வர் பதவி ஏற்காமலேயே அந்த பாரிய கனவு சிதைக்கப்பட்ட நாள் 2017 பிப்ரவரி 14.
சசிகலா ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொள்ளையடித்தவரா இல்லையா; மதுபான ஆலை முதலாளியா இல்லையா; சிறை தண்டனையும் தண்டமும் விதிக்கப்பட்டவரா அல்லரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஒரு தமிழச்சி முதல்வராக வேண்டிய வாய்ப்பை சிதைத்த கொடூரம் நிகழ்ந்த நாள் இந்த நாள்.

1956 ஆம் ஆண்டு இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பாராண்ட தமிழனுக்கு நாடு என எதுவும் இல்லை; மாநிலம் ஒன்றுதான் என்று உறுதியானது.
அதற்குகூட பிரதமர் நேரு, அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லை. இந்திய அரசியல் சாசனத்தை முதன்முதல் திருத்தும்படி பெரியார் போராடியபொழுது மிகவும் தயங்கி தயங்கி ‘கம்யூனல் ஜி ஓ’ என்னும் அந்த முதல் அரசியல் சட்டத் திருத்தத்திற்கு அவர் சம்மதித்தார்.
அதற்கு அடுத்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கான சட்டத்தில் கையெழுத்திட்ட வேளையில் மிகவும் தயங்கினார் நேரு.
மொழி வழி மாநிலங்கள் உருவானால், இந்தியா சிதறிவிடுமோ என்று அஞ்சி அஞ்சி அந்த சட்டத்தில் கையெழுத்திட்டார்.
எது எவ்வாறாயினும் தமிழனின் ஆட்சி உரிமை, மாநில மட்டத்தில் சுருங்கியதற்கு ஆங்கிலேய ஆதிக்கம் வழிவகுத்து விட்டது

அத்தகைய மாநில அரசக் கட்டிலில் கேரளத்தைச் சேர்ந்த வி. என். ஜானகியால் 24 நாட்களுக்கு முதல் அமைச்சராக அமர முடிந்தது; கன்னடத்தை சேர்ந்த பச்சையான பிராமண பெண்ணான ஜெயலலிதாவால் முதல்வராக முடிந்தது.
ஆனால், தமிழ் மண்ணுக்குரிய ஒரு தமிழச்சியால் மட்டும் முதல்வராக முடியாமல் போனது
ஏன்? எதனால்? யாரால்?
இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் சனாதனம்.
2016 டிசம்பர் 5ஆம் நாள் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தருணத்தில் அவரின் உடல் பொதுமக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மரியாதைக்காக ஒரு பக்கம் கிடத்தி வைக்கப்பட்டிருந்த நேரத்தில் மறுபக்கம் அவசர அவசரமாக புதிய அமைச்சரவை பதவியேற்றது.
அடிமைக்குருதி உடல் முழுக்க பரவி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்றார். அந்த நேரத்தில், ஓ பன்னீர் செல்வத்திற்கு பதிலாக தானே முதல்வராக பதவி ஏற்கிறேன் என்று சசிகலா முனைப்பு காட்டி இருந்தால் ஒருவேளை அது நிகழ்ந்து இருக்கலாம்; அல்லது அப்பொழுதும் தடை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஆனால் இடைக்கால ஏற்பாடாக, பன்னீர் செல்வத்தை பொம்மை முதல்வர் ஆக்கி பின்னால் இருந்து தமிழ்நாட்டு அரசாங்கத்தை நகர்த்திய சசிகலா, அடுத்த ஒன்றரை மாதங்களில் ஓ. பன்னீர்செல்வத்தை அகற்றிவிட்டு, தானே அலுங்காமல் குளுங்காமல் முதல்வர் பதவியை ஏற்கத் திட்டமிட்டார்.
சசிகலா என்ன சொன்னாலும் தட்டாத பன்னீர்செல்வம் இந்த முறை சண்டித்தனம் செய்தார்.
தமிழ்நாட்டை ஆள்வதற்கு ஜெயலலிதாவிற்கு உரிமை அளித்தால் அவரோ, மாநிலத்திற்கு சொந்தமான ‘டான்சி’ நிலத்தை அபகரித்தார்.

இது தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஜெயலலிதா முதல் முறையாக பதவி துறக்க நேர்ந்தது.
அந்தத் தருணத்தில் இடைக்கால ஏற்பாடாக பன்னீரை கொண்டுவந்து நிறுத்தியது சசிகலாதான்.
அப்படிப்பட்ட சசிகலாவைக் கண்டாலே பௌயமாக வளைந்து குனிந்து வாயில் கையை வைத்து நிற்கின்ற பன்னீர்செல்வம், இந்த முறை சசிகலாவின் பேச்சை எதிர்த்து நின்றார் என்றால் ஒருவேளை ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம்.
ஆனாலும் ‘வேறு அம்மா இல்லாமல்’ சின்னம்மா மட்டுமே அதிமுகவின் தலைமை என்று ஆகிவிட்ட நிலையில், வலிமைமிக்க சசிகலா, கட்டாயப்படுத்தி பன்னீர்செல்வத்தை பதவி விலகச் செய்தார்.
அழாத குறையாக பதவி விலகிய பன்னீர், உடனே ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். அம்மா (ஜெயலலிதா)வின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று புதிதாக முழங்க ஆரம்பித்தார்.
அதை புறந்தள்ளிய சசிகலா, அவசரம் அவசரமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி தானே சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கும்படி காய் நகர்த்தினார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக(முதல்வராக) தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி, தன்னை முதல்வராக பதவி ஏற்க ஏற்பாடு செய்யும்படி முறைப்படி கேட்டுக் கொண்டார்.
அடுத்த கணம் முதல் வித்யாசாகர் ராவ் காணாமல் போய்விட்டார்.
ஏறக்குறைய பத்து நாட்களுக்கு ஒரு மாநிலம் அல்ல; இரு மாநிலங்களின் ஆளுநராக இருந்த வித்தியாசாகர் ராவ் நாட்டில் எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் போனது. மராத்திய மாநிலத்தின் ஆளுநராக இருந்த அவர், புது டெல்லியில் குறிப்பாக பிரதமர் நரேந்திர தாஸ் தாமோதர மோடி, அமித்ஷா இருவரின் கண்ணசைவிற்கு ஏற்ப காரியமாற்றுபவராக இருந்தார்.
அத்தகைய ராவை தாங்கள் நினைத்ததை நிறைவேற்றுவதற்காக தமிழகத்திற்கும் இணை ஆளுநராக அமர்த்தி இருந்தனர்.
சட்டப்படி இது சரியாக இருந்தாலும் மரபுப் படி மிகவும் பிழையானது; காரணம் இரண்டு மாநிலங்களும் மிகப்பெரிய மாநிலங்கள்.
ஆக நாட்டின் இரு பெரிய மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. நாட்டு மக்களுக்கும் நடுவணரசு அதைப்பற்றி தெரிவிக்கவில்லை.
இந்த நாடகத்தினுடைய உள்ளார்ந்த பொருள், சசிகலாவை தமிழக முதல்வராக பதவி ஏற்க விடக்கூடாது; அதற்கான சரியான திட்டமிடல் உறுதி செய்யப்படும்வரை வித்தியாசாகர் ராவ் மறைந்திருக்க வேண்டும் என்பது புதுடில்லியின் குயுக்தி.
சசிகலா ஒருவேளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருந்தால் இன்னும் அதிகமாக கொள்ளையடித்திருப்பாரா? இன்னும் அதிகமான மதுபான நிறுவனங்களை வளைத்திருப்பாரா என்பதெல்லாம் தெரியாது;

ஆனால், ஏழை விவசாயிகளுக்கு தமிழ்நாட்டில் இலவச மின்சார உதவி வழங்கப்பட்டதை தடுக்கும்விதமாக புதுடெல்லி தந்திரமாக வரைந்த ‘உதய் மின் திட்டம்’, வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழ் தெரியாத நிலையிலும் தமிழ்நாட்டு அரசாங்க பதவிகளில் அமர்த்தப்படலாம்; அவர்கள் பின்னர் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளலாம் என்னும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கின்ற சட்டம் போன்ற தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்கின்ற சட்டங்களுக்கு நிச்சயமாக ஒப்புதல் அளித்திருக்க மாட்டார்.
ஜெயலலிதாவிடம் பாடம்கற்ற சசிகலாவிற்கு ஓரளவு திராவிட சித்தாந்தமும் நிர்வாக ஆற்றலும் மக்கள்நல சிந்தனையும் இருந்தது.
ஆனால் இடைப்பாடி பழனிச்சாமி என்ற அரசியல் அடிமை, கண்ணை மூடிக்கொண்டு சிந்தனைக்கும் திரை போட்டுவிட்டு இத்தகைய அக்கிரமங்களுக்கு ஆதரவு அளித்தது.
சசிகலா முதல்வராவது நூற்றுக்கு நூறு உறுதியானதும், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் உட்பட கல்விமான்கள் தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் போயஸ் தோட்டத்திற்கு படையெடுத்து சசிகலாவின் கரங்களில் மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து நாங்களும் இருக்கிறோம் எங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தத்தம் பதவி தொடரவும் புதிய பதவி பெறவும் அச்சாரம் இட்டுக் கொண்டிருந்தனர்
இந்த வேலையில் எப்பொழுதும் இல்லாத வகையில் மலேசியாவில் இருந்து மலேசிய இந்திய காங்கிரஸ்-மஇகா பேரியக்கத்தின் அன்றைய தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியன், தேசிய துணைத் தலைவராக இருந்த டத்தோஸ்ரீ சி.கி. தேவமணி, டத்தோஸ்ரீ மு. சரவணன், டத்தோ த. மோகன் உள்ளிட்ட தலைவர்களும் போயஸ் தோட்டத்திற்கு விரைந்து சசிகலாவை வாழ்த்தி விடை பெற்றுத் திரும்பினர்
வழக்கமாக தமிழ்நாட்டிற்கு யார் முதல்வராக பொறுப்பேற்றாலும் மஇகா தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்தியது இல்லை; இந்த முறை ஏன் அப்படி நடந்தது என்று தெரியவில்லை.
ஒருவேளை ஒரு தமிழச்சி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க இருந்ததால் அப்படி செய்தார்களோ?
நாட்கள் கடந்து கொண்டே இருந்தன; பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய ஆளுநர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. புதுடில்லியின் ஆரிய வட்டம் கள்ளச் சிரிப்புடன் மவுனம் காத்தது; நாட்டின் நிர்வாகத் தலைவர் மோடி அமைதியாக இருந்தார். தமிழ்நாட்டில் எட்டு நாட்கள் நிர்வாகம் நிலை குத்தியது. புதிய முதல்வர் எப்போது பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பில் இன்று நாளை என்று நாட்கள் கடந்தன.
சசிகலா மலர் கொத்துக்களையும் பூக் கூடைகளையும் வாங்கி வாங்கி சேமித்ததுதான் மிச்சம்.

ஆளுநர் எப்பொழுது வருவார்? நாளையாவது பதவி பதவியேற்றுக் கொள்ள முடியுமா என்றெல்லாம் பலவாறான எதிர்பார்ப்பில் சசிகலாவின் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது
இந்த சூழ்நிலையில் தான் பிப்ரவரி 14-ஆம் நாள் புதுடில்லியில் இருந்து ஓலை வந்தது.
புதுடில்லி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. உண்மையில் அந்த தீர்ப்பு 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உறுதியான தீர்ப்பு;
ஜெயலலிதா ‘ஏ-1’ குற்றவாளிதான்; அவருக்கு பெங்களூரு நீதிபதி குட்கா வழங்கிய தீர்ப்பின்படி 100 கோடி ரூபாய் தண்டமும் நான்காண்டு சிறைவாசமும் மறுஉறுதி செய்யப்பட்டது. அடுத்த குற்றவாளி என ஜெயலலிதாவிற்கு உடந்தையாக இருந்த சசிகலாவுக்கும் நான்கு ஆண்டு சிறை, இளவரசி, சசிகலாவின் உறவினரான ஆண் உட்பட நான்கு பேரும் தண்டத்திற்கும் தண்டனைக்கும் உரியவர்கள்தான் என்று புதுடில்லி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இடையில் இந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிபதி குமாரசாமி ரத்து செய்தது செல்லாது என்றும் அது தெரிவித்தது
இந்த நேரத்தில் தினமணியும் ஆனந்த விகடனும் ‘நல்லவேளை; இந்த நேரத்தில் ஜெயலலிதா உயிரோடு இல்லை’ என்று தங்களின் மூன்று விழுக்காட்டு பிரிவினருக்கான பாசத்தை வெளிப்படுத்தின.
நிலை குலைந்து போனார் சசிகலா.
இப்பொழுதெல்லாம் நீதிமன்ற தீர்ப்புகள் ஒரு வன்முறையாக பயன்படுத்தப்படுகிறது.
தீர்ப்பு நாள் வந்ததும் அதை அறிவிக்காமல் ஒத்தி வைப்பது; நேரம் பார்த்து அறிவிப்பது; வழங்கப்பட்ட தீர்ப்பை இன்னொருவர் ரத்து செய்வது என்பதெல்லாம் என்ன நடைமுறை என்று தெரியவில்லை!
இத்தகைய ‘நீதித்துறை வன்முறை நடைமுறை’ பெரும்பாலான நாடுகளில் இடம்பெறுகிறது.
அண்மையில்கூட அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட டோனால்ட் டிரம்ப், தன் ஆதரவாளர்கள், தனக்கு இசைவான அதிகாரிகள் மீதெல்லாம் வழக்கு தொடரப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்கள் அத்தனை பேரையும் ஒரே உத்தரவின் மூலம் விடுதலை செய்தார்.
இவர், இந்த முறை பதவியேற்ற பொழுது எந்த சிக்கலும் இல்லாமல் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அதிகார மாற்றத்திற்கு ஏற்ப இயல்பான சூழலை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இதே ஜோ பையன் பதவி ஏற்ற நேரத்தில் அவ்வளவு எளிதாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறாமல் பதவி இழந்த டொனால்ட் ட்ரம்ப்.
சண்டித்தனம் செய்தார்; தன் ஆதரவாளர்களையும் அதிகாரிகளையும் ஏவிவிட்டு கலகம் செய்தார். இதனால் ஒரு சிலர் உயிர் துறக்கவும் நேர்ந்தது.
ஜோ பைடன் ஒரு வழியாக பொறுப்பேற்றபின், டோனல்ட் ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்சியினர்மீது வழக்கு தொடரப்பட்டு அத்தனை பேருக்கும் நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பைத்தான் நான்காண்டுகளுக்குப் பின் மீண்டும் அதிபராக வந்த டோனால்ட் ட்ரம்ப் எளிதாக ரத்து செய்து, கடந்து போயிருக்கிறார்.
இது என்ன நீதிமன்ற நடைமுறை என்று தெரியவில்லை!
ஆளுக்கு ஆள் பதவி-அதிகார உச்சத்தில் இருப்பவர்களுக்கு ஏற்ப நீதிமன்ற நடைமுறை மாறுமா என்ன?
இதைப்போலத்தான் புதுடில்லி உச்சநீதிமன்றத்தால் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை அப்பொழுதே வெளியிட்டு இருந்தால், ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்க வாய்ப்பு இல்லை.
ஆனால், அவர் பதவியில் நீடிப்பதற்கு ஏதுவாக அந்த தன் தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டதாகத் தெரிகிறது.
ஏழு எட்டு மாதங்கள் கழித்து சசிகலா பதவி ஏற்க இருந்த இருந்த நேரத்தில் எங்கோ ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த சம்பந்தப்பட்ட கோப்பு தூசி தட்டி எடுக்கப்பட்டு நேரம் பார்த்து அறிவிக்கப்பட்டு, வி கே சசிகலா என்னும் தஞ்சை தரணியின் தமிழச்சி முதலமைச்சரின் நாற்காலியில் அமர விடாமல் தடை செய்யப்பட்டது.
உலகத் தமிழர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.!!


