Monday, April 20, 2026

வரும்பொழுதெல்லாம் புனித உயிர் குடிக்கும் கும்பமேளாவே?உன் ரத்த வேட்டை தீராதோ?? நீயும் ஒழியாயோ??

கும்பகோணத்து கும்பமேளாவில் இருந்து இப்பொழுது அலகாபாத் கும்பமேளாவரை எந்த கும்பமேளாவாக இருந்தாலும்,

ஏ கும்பமேளாவே, நீ வரும்பொழுதெல்லாம் வெறுங்கையோடு திரும்பமாட்டாயோ என்று கேட்கத் தோன்றுகிறது உன்னிடத்தில்!

புனிதம் தேடி வருகின்ற பலரின் உயிர்களைக் குடிக்கிறாயே, உனக்கு ரத்த வேட்டை என்றால் மிகவும் பிடிக்குமோ?

எங்களிடம் முப்பது முக்கோடி தேவர்கள் இருக்கின்றனர்; இருந்தாலும் போதாதென்று திருவள்ளுவரையும் வளைத்து பிடிப்போம்; அது வேறு கதை! எங்களுக்கு என இவ்வளவு பேர் இருக்க புனித நாமம் சூட்டிக்கொண்டு நீயும் எதற்கு வருகிறாய்?

வட நாடு எனப்படும் உத்தரபிரதேசத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கடந்த ஒன்றரை மாதமாக கும்மாளம் அடிக்கின்ற நீ இரண்டு நதிகளைத்தான் காட்டுகிறாய்; ஆனால் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனிதமாக நான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் மகா மகா கும்பமேளாவே, கங்கையை காண முடிகிறது; யமுனையையும் பார்க்க முடிகிறது இன்னொரு நதியை எங்கே ஒளிய வைத்திருக்கிறாய்?

சரஸ்வதி என்னமோ நிலத்துக்கு அடியில் ஓடுகிறதாமே; அது உண்மையா
நிகழ்கால கும்பமேளாவே?

வேத காலத்தில் இருந்தே சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாய்; ஆனால் கண்ணில் பட்டதே இல்லை சரஸ்வதி நதி!

விவரிக்க முடியாத மக்கள்திரள் சமய நிகழ்வு என்று உன்னை யுனெஸ்கோ சொல்லும்பொழுது எங்கள் ஆர்.டி.எம். (Radio Television Malaysia) வானொலியின் தமிழ்ச் செய்தி பிரிவான மின்னல் பண்பலை வானொலி சொல்கிறது கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் சங்கமிக்கும் இடத்தில் மக்கள் புனித நீராடுகின்றனர் என்று; ஒருவேளை மின்னல் பண்பலை வானொலி பார்த்திருக்குமோ சரஸ்வதி நதியை?

இருக்கும், இருக்கும்! அலகாபாத் மண்ணுக்கு அடியில் மின்னல் பண்பலை வானொலி ஆய்வு மேற்கொண்டு சரஸ்வதி நதியை பார்த்திருக்கக்கூடும்; அதில் இறங்கி, நீந்தி, கரை சேர்ந்திருக்கவும் கூடும்; எல்லாவற்றையும் அறிந்த மகா கும்பமேளாவே நீயாவது எங்களுக்கு எடுத்துச் சொல்ல கூடாதா இதைப் பற்றி? ஆனால், அமைதிதான் காத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், இரண்டு வேலைகளை தட்டாமல்-தப்பாமல் செய்கிறாய் கும்பமேளா; நீ அதிகமானோருக்கு புனிதம் தந்து, குறைவான பேரின் உயிரைக் குடிக்கிறாய்.

நதி என்றால் மண்மீது ஓட வேண்டும்; நாநிலமும் நானில மக்களும் பயனுற வேண்டும். மண்ணுக்கு அடியில் ஓடினால் அதற்குப் பெயர் நதியோ?

மண்ணுக்கடியில் ஓடும் நதி யாருக்காக?

மீனுக்காகவா அல்லது மனிதனுக்காகவா? குறைந்தபட்சம் நீர்வாழ் தாவரத்திற்காகவாவது சரஸ்வதி நதி பயன்பட்டிருந்தால் அதையாவது சொல்லக்கூடாதா மகா கும்பமேளா? என்ன இருந்தாலும் இந்த மௌனம் உனக்கு ஆகாது கும்பமேளா.

எதற்காக சரஸ்வதி காலமெல்லாம் மண்ணுக்கு அடியில் ஓட வேண்டும்?

ஓஹோ! வேதாரண்யத்திற்கும் கொழும்பிற்கும் இடையே கடலுக்குள் இருக்கும் பாலத்தின் கதைதானோ இந்த சரஸ்வதி நதியின் கதையும்!

பாலம் என்றால் மேலே இருக்க வேண்டும். நிலத்தின் மேலோ அல்லது நீரின் மேலோ இருக்க வேண்டும்.

நீருக்கு அடியில் இருக்கும் ராமர் பாலத்தின்மீது எந்தெந்த மனிதர்கள் பயணிக்கின்றனர்? எத்தனை வாகனங்கள் அன்றாடம் செல்கின்றன என்பதையும் உன்னால் சொல்ல முடியாது கும்பமேளாவே!

நான் சொல்வது சரிதானே கும்பமேளா?

அப்படித்தான் மண்ணுக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதியின் கதியும் என்று புரிந்து கொள்ள முடிகிறது; போகட்டும் விடு கும்பமேளா!

ஒரு வினாவுக்குகூட பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய்; புரிகிறது, புரிகிறது; நீ என்ன கைவசம் வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறாய்? இருந்தால்தானே நீ எடுத்து விடுவதற்கு?

அதனால் உன் மௌனத்தை புரிந்து கொள்ள முடிகிறது; பிழைத்துப் போ கும்பமேளாவே!

எல்லாம் சரி, எங்களுக்கு புனிதம் அளிப்பதற்காக வந்து வந்து போகிறாயே கும்பமேளாவே?

ஒரு முறையேனும் நீ வெறுங்கையோடு திரும்புவதில்லையே ஏன்?

உன்னை நாடி புனிதம் தேடி வருகின்ற உயிர்களை மடக்கு மடக்கு என்று குடிக்கிறாயே, ரத்த வெறி என்றால் உனக்கு அத்தனை பிரியமா?

இந்த லட்சணத்தில் புனிதம் என்ற பட்டப் பெயர் வேறு உனக்கு; இது தேவைதானா கும்பமேளா? நீயே எண்ணிப் பாரேன்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை