
கோலாலமபூர்:
பாலஸ்தீன ஹமாஸ் கைதிகளுககு மலேசியாவில் அடைக்கலம் கொடுக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகுறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேலிய நீதிமன்றங்களால் கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப் பட்ட 60 ஹமாஸ் கைதிகளில் ஒரு பிரிவினருக்கு மலேசியா அடைக்கலம் கொடுக்கும் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் 2025 பிப்ரவரி 4-இல் செய்தி வெளியிட்டிருக்கிறது. தற்பொழுது, எகிப்து நாட்டில் சம்பந்தப்பட்ட தண்டனைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மலேசியாவிற்கு நாடுகடத்தப்படுவதற்காகக் காத்திருப்பதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கிறது.
இத்தகவல் உண்மையாக இருந்தால், இம்மாத தொடக்கத்திலேயே செய்தி வெளிவந்திருக்கும் நிலையில், இதுகுறித்து பிரதமரோ அல்லது பிரதமர் துறை அலுவலகமோ இத்தகைய முக்கியமான விவகாரம்குறித்து, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்த அப்பட்டமான மௌனம் பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் வெளிப்படைத்தன்மையும் தார்மீகப் பொறுப்பும் இல்லை என்பதை வெளிப்படையாகக் காண்பிக்கிறது. தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இவ்வளவு முக்கியமான விசயத்தை எப்படி புறக்கணிக்கவோ அல்லது கவனிக்காமலோ விட்டுவிடமுடியும்?

பிரதமர் அன்வார், சம்பந்தப்பட்ட செய்தி அறிக்கையின் உண்மைத்-தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது மறுக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி கோருகிறது; இவ்வளவு முக்கியமான விவகாரம் குறித்து நாட்டுமக்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதற்கு பிரதமர் உடனே விளக்கமளிக்க வேண்டும். குறிப்பாக, வேற்றுநாடு சம்பந்தப்பட்ட இந்த விசயம் நாடாளுமன்றக கூட்டம் நடைபெறும் இந்த நேரத்தில் அங்கு ஏன் முன்வைக்கப்படவில்லை? இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிக்கையை பகிரங்கமாகவோ அல்லது நாடாளுமன்றத்திலோ வெளியிடப்படாதது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு குறித்து கடுமையான கேள்விகள் எழும்புகின்றன என்று மனித உரிமை வழக்கறிஞருமான கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 2024 மார்ச் 27 அன்று நடந்த ஒரு சம்பவத்தையும் பிரதமருக்கு மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி நினைவூட்டுகிறது. அப்போது இஸ்ரேலிய முகவராகக் கூறப்படும் ஷாலோம் அவிடன்-Shalom Avitan என்ற நபர் ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் 158 தோட்டாக்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ந்பர் சம்பந்தப்பட்ட வழக்கு துருக்கிய மற்றும் ஜியார்ஜிய நாட்டினருடன் தொடர்புடையது என்பதால், இது பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மேலும் கவலையை எழுப்புகிறது.
இந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஹமாஸ் கைதிகள் குறித்த இந்த விசயத்தில் பிரதமர் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்; நம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த முடிவையும் மறுபரிசீலனை செய்வது மிக முக்கியம். மலேசியா மற்றும் அதன் குடிமக்களின் நலனுக்காகச் செயல்படவும் நாட்டை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய எந்த முடிவையும் ரத்துசெய்யவும் பிரதமரை மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி வலியுறுத்துகிறது என்று கார்த்திகேசன் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.


