
தேசிய முன்னணி ஆட்சிக் காலம்வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி நிதி ஒதுக்கீட்டில் ஆளுந்தரப்பு எம்பி, எதிர்த்தரப்பு மக்கள் பிரதிநிதி என்றெல்லாம் எந்த பாகுபாடும் நிலவியதாகத் தெரியவில்லை.
ஆனாலும் ஆளும் தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எண்ணற்ற கூடுதலான அனுகூலம் இருந்திருக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அதேவேளை, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆளுந்தரப்பு, எதிரணி என எல்லாத் தரப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கும் சம அளவில் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதில் நியாயமும் ஜனநாயக பாங்கும் இருக்கிறது. காரணம், எல்லா மக்கள் பிரதிநிதியும் அந்தந்த தொகுதி மக்களால்-வாக்காளர்களால்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆளும் தரப்பு எதிர்த் தரப்பு என்பது அவரவர் சார்ந்திருக்கின்ற அரசியல் கட்சி அல்லது அரசியல் அணியைப் பொறுத்தது.
இருந்தபோதும் பக்கத்தான் (நம்பிக்கைக்) கூட்டணி தலைமையிலான ஒற்றுமை மடாணி அரசாங்கம் அமைந்தபிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த சிக்கல் அதிகமாக பேசப்படுகிறது. குறிப்பாக அரசியல் மறுமலர்ச்சி குறித்து அதிகமாக பேசி ஆட்சிக்கு வந்தவரின் தலைமையில் இந்த பிரச்சனை நீடிப்பது ஜனநாயகத்திற்கு அத்தனை ஏற்புடையதல்ல;

எந்தக் கட்சி அல்லது எந்தத்தரப்பு அல்லது சுயேட்சை எம்பி ஆகத்தான் இருக்கட்டுமே; அனைவரும் மக்கள் பணிதானே ஆற்றுகின்றனர். அவரவருக்கும் உரிய தொகுதி நிதியை சம அளவில் பகிர்ந்து அளிப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல் என்று தெரியவில்லை.
இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்க முடியாது என்று தேசியக் கூட்டணி சார்பில் அண்மையில்தான் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்திருந்தார்.
அதற்கு உடனே மறுவினை ஆற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இதுகுறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இப்பொழுது தேசியக் கூட்டணியின் தலைமைக் கொறடாவான தக்கியுடின் ஹசான், வரும் வாரத்தில் இதன் தொடர்பில் நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் இணைந்த ஒற்றுமை அரசாங்கத்திற்கு தேசிய கூட்டணித் தலைமை கடிதம் அனுப்பும் என்று தெரிவித்திருக்கிறார்.
அதன் பிறகு அரசு சார்பில் என்ன விளக்கம் அளிக்கப்படும் அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த சிக்கல் தொடர்வது அவ்வளவு நல்லது அல்ல.
மத்தியக் கூட்டரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் தொகுதி வளர்ச்சிப் பணி குறித்த நிதி, எதிர்த்தரப்பு அல்லது எந்தக் கட்சி என்ற பாகுபாட்டைக் கடந்து அனைவருக்கும் சம அளவில் நிதி வழங்குவதுதான் ஒரு ஜனநாயக ஆட்சிக்கும் நாட்டுக்கும் அடையாளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று குமரி கருதுகிறாள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மூவார் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் பிரதிநிதியான சைட் சாடிக் சைட் அப்துல் ரகுமான், தன்னுடைய தொகுதிக்கான மேம்பாட்டு நிதிக்காக கால்நடைப் பயணம் மேற்கொண்டும் ஆண் ‘மோடலாக’ காட்சி கொடுத்தும் நிதி திரட்டினார்; இது குறித்து ஒற்றுமை அரசாங்கத்திற்கு மனம் கூசியதாகத் தெரியவில்லை


