Thursday, April 16, 2026

2007 ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணிக்குமுன் தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட தில்லுமுல்லு வேலை மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது!

பொன்.வேதமூர்த்தி பிரதமர் அன்வாருக்கு நினைவூட்டல்!!


வரலாற்று உண்மை, இந்து சமூகத்தின் உரிமை மற்றும் பாரம்பரியத்தை புறக்கணிக்கும் வகையில் இந்து புனிதத் தலங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவை என்று வகைப்படுத்தும் பிரதமர் அன்வார், தவறான தகவலையும் பொய்யான விளக்கத்தையும் அளிக்கிறார் என்று மலேசிய முன்னேற்ற கட்சி எம்ஏபி தேசியத் தலைவர் பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

2007 நவம்பர் 25, ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணிக்குமுன் தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட தில்லுமுல்லு வேலை மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

சிலாங்கூர் ஆட்சியாளரின் ஆலோசகராக செயல்பட்ட பிரிட்டிஷ் ஜெனரல், இந்து கோயில்களைக் கட்டுவதற்கும் இந்தியத் தொழிலாளர்களைக் குடியேற்றுவதற்கும் ஆட்சியாளர்களின் முழு ஒப்புதலைப் பெற்றிருந்தததற்கான சான்றுகளை 1800-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1900-களின் முற்பகுதியிலும் பதிவுசெய்யப்பட்ட சிலாங்கூர் அரசாங்க நிர்வாக அறிக்கைகளின் அதிகாரப்பூர்வ குறிப்புகள் தெரிவிக்கின்றன என்று மலேசிய சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள இந்து கோவில்களின் வரலாற்று நிலை குறித்து பிரதமர் அன்வார் இப்ராகிம் தவறான தகவலையும் பொய்யான விளக்கத்தையும் தெரிவிப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மலேசியா முழுவதும் உள்ள இந்து கோயில்கள் சட்டவிரோதமாக கட்டப்படவில்லை என்பதை அன்வாருக்கு நினைவூட்டியுள்ள பொன். வேதமூர்த்தி, பிரிட்டிஷ் நிர்வாகத்தின்போது முறையான நில ஒதுக்கீட்டு முறை இல்லை; அந்த நேரத்தில், காலனித்துவ மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் வெளிப்படையான ஒப்புதலுடன் இந்து ஆலயங்கள் நிறுவப்பட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய தோட்டத் தொழிலாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கொத்தடிமை வேலை செய்தபின், நில உரிமை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக, மலேசிய இந்திய சமூகம் இன்று உலகில் மிகவும் நிலமற்ற இனக்குழுக்களில் ஒன்றாக உள்ளது. ஆங்கிலேய நிருவாகத்தின்கீழ் சட்டப்படி கட்டப்பட்ட இந்தக் கோயில்கள் சட்டவிரோதமானவை என்று முத்திரை குத்துவது நியாயமற்றது. கோயில் இடிப்பை நியாயப்படுத்துவதற்காகவே இப்படி தவறான தகவல் தொடர்ந்து பரப்பப்படுகிறது.

இது, இந்து சமூகத்தை அவமதிப்பது மட்டுமல்ல; மலேசியாவின் உள்ளடக்கத்திற்கும் முன்னாள் தலைவர்கள் வகுத்துள்ள அடிப்படை கொள்கைகளுக்கும் துரோகம் இழைப்பதாகும்.

சீர்திருத்தத்திற்கு உறுதியளித்த இந்த அரசு, நீண்டகால பிரச்சினையைத் தீர்ப்பதில் நியாயத்தையும் நேர்மையையும் நிலைநிறுத்துவது அவசியம்.

“மலேசியாவில் உள்ள இந்து மற்றும் இந்திய சமூகம் வெறும் அங்கீகாரத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தில் அவர்களுக்கான சரியான இடத்தை உறுதிசெய்வதற்கும் உரிமை கொண்டவர்கள்” என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேத
மூர்த்தி பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் நினைவூட்டி உள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை