
கோலாலம்பூர் மார்ச் 24-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் 134 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோவில், சட்ட விரோதமானது அல்ல என பிபிபி (PPP) கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்துள்ளார்.
நேற்று கம்போங் அத்தாப்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “134 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்தக் கோவில் எவ்வாறு சட்ட விரோதமானதாக கருதப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்பினார்.
“2006 ஆம் ஆண்டு, இந்த கோவில் இடிக்கப்படவிருந்தது. ஆனால், அனைவரும் ஒன்றிணைந்து அதை பாதுகாத்து 2008 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
எனவே, இந்தப் பிரச்சினையை அரசியல் கருவியாக பயன்படுத்தாமல், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற ஒரு தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தலைநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோவில் உடைக்கப்படுமா என்ற அச்சம் இந்துக்களிடையே உருவாகியுள்ளது.
இருப்பினும், “இந்தக் கோவிலை இடிக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும்வரை, கோவில் வழக்கம்போல் செயல்படும்,” என கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் (DBKL) தலைவர் டத்தோ பண்டார் உறுதியளித்துள்ளார்.
அதேபோல், “மடானி அரசாங்கத்தின்கீழ் எந்த ஆலயமும் இடிக்கப்படாது” என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதி அளித்திருப்பதை நினைவுபடுத்திய டத்தோ லோகபாலா, “இதன் அடிப்படையில், பிரதமர் இந்த ஆலயத்தை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிபிபி கட்சியின் தேசியப் பேராளர் கூட்டம் விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தேசிய முன்னணி தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், கூட்டத்திற்கான நாட்கள் அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
பிபிபி கட்சி சமூக சேவைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதையும் “வாரம் ஒருமுறை மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது,” என்பதையும் டத்தோ லோகபாலா குறிப்பிட்டார்.


