
மக்கள் நீதிக் கட்சி-பி.கே.ஆர். உட்கட்சித் தேர்தல், பரபரப்புக் கட்டத்தை எட்டுகிறது.
பி கே ஆர் உதவி தலைவர் பதவிக்கு பழைய நால்வருடன் புதிதாக நால்வர் களம் இறங்கி உள்ளனர். இதில் எட்டாவதாக இன்று அறிவிப்பு செய்திருப்பவர் கட்சியின் தேசிய துணை பொதுச் செயலாளரும் உலு சிலாங்கூர் தொகுதி பிகேஆர் பொறுப்பாளரும் மருத்துவருமான சத்திய பிரகாஷ் நடராஜன்.
மக்கள் நீதிக் கட்சி-பி.கே.ஆர். 2025 கட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை ஏறக்குறைய 17,600 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக கட்சியின் தேர்தல் குழு செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸலேகா முஸ்தஃபா தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் 222 தொகுதி மட்டத்திலான தேர்தல், முதற்கட்டமாக நடைபெற இருக்கிறது. இதன் தொடர்பில் களம் இறங்கி உள்ளோரின் எண்ணிக்கை, இந்த முறை உச்சத்தைத் தொட்டு உள்ளது என்று கட்சியின் தேர்தல் குழு தெரிவித்துள்ளது.

2022-2025 தவணைக்கான தேர்தல், மூன்று ஆண்டுகளுக்குமுன் இதேக் காலக்கட்டத்தில் நடைபெற்றபொழுது பிகேஆர், ஆட்சிக் கட்டிலில் இல்லை; தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் பிரதமர் பதவியில் இல்லை.
இருந்தபோதும் மகளிர் பிரிவுக்கான தேர்தலும் தேசிய துணைத் தலைவருக்கான தேர்தலும் பரபரப்பாக ஊடக மட்டத்திலும் சமூகவெளியிலும் பேசப்பட்டன.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசித்தியோன், தன் அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தக்க பின்னடைவை எதிர்கொண்ட ஆண்டு 2022. அந்த ஆண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் தேசிய துணைத் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்டு இன்றைய பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லியிடம் தோற்றுப் போனார்.
கட்சி தேர்தலில்தான் தோற்றார் என்றால் ஏறக்குறைய ஆறு மாதங்கள் கழித்து நடைபெற்ற நாட்டின் 15 வது பொது தேர்தலிலும் பண்டார் பாரு கூலிம் நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டார்.

இந்த முறை அவர் கட்சித் தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என்பதெல்லாம் மேத் திங்கள் 3-ஆம் நாள் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கலினபோது தெரியவரும்.
2022 கட்சித் தேர்தலில, உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, 46,075 வாக்குகளுடன் முதல் நிலையில் வெற்றி பெற்றவரும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரும் (மாநில முதல்வர்) கோம்பாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பத்துமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அமிருடன் ஷாரி இந்த முறையும் தேசிய உதவித் தலைவர் பதவியை தற்காக்கப் போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக, தேசிய துணைத் தலைவர் பதவியை குறிவைத்து ரஃபிசி ரம்லியை எதிர்கொள்வார் என பேசப்பட்டது.
உண்மையான கள நிலவரம் மே மாத முதல் வாரத்தில் தெரியவரும்.
கடந்த முறை கட்சியின் நான்கு உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் 17 பேர் களம் கண்டனர். இவர்களில் மணிவண்ணன் கோவிந்தசாமி டாக்டர் ஜார்ஜ் குணராஜ், தீபன் சுப்பிரமணியன், எம் ஏ தினகரன், சண்முகம் ரங்கசாமி ஆகிய ஐந்து தமிழரும் அடங்குவர்.

இவர்களில் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் 33,230 வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பெற்று உதவித் தலைவர் வரிசையில் இடம்பெற்றார்.
இந்த இரு அமிருடின்களுக்கு இடையில் Chang Lih Kang(34,939-வாக்குகள்), Nik Nasmi Nik Ahmad (34,496 வாக்குகள்)ஆகிய இருவரும் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.
29,117 வாக்குகளுடன் ஐந்தாம் இடத்தைப் பெற்ற மணிவண்ணன் வெற்றிக் கோட்டை நெருங்கி நின்றாரேத் தவிர எட்டவில்லை.
செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி குணராஜ் உள்ளிட்ட ஐவரில் ஒருவர் கூட தேசிய உதவித் தலைவராக தேர்வு பெறவில்லை.
நிகழ்கால சிலாங்கூர் ஆட்சி மன்றக் குழுவில் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குணராஜிற்கு அந்த வாய்ப்பு கிட்டாததில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தில் சற்று தொய்வுடன் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்தச் சூழலில் இன்றைய அரசாங்கத்தில் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சரும் பிகேஆர் சுங்கை பூலோ தொகுதியில் எதிர்ப்பார் எவரும் இன்றி தொகுதித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தனிக்காட்டு தனி காட்டு ராசாவைப்போல வலம் வருபவருமான டத்தோஸ்ரீ இரா. இரமணன், தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
துணை அமைச்சராக இருப்பதாலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும் இந்த முறை நான்கு உதவித் தலைவர்களில் ஒருவராக ஆகிவிடும் எண்ணத்தில் ரமணன் களத்தில் குதித்திருப்பதாகத் தெரிகிறது.
அதேவேளை, பிரதமரும் கட்சித் தலைவருமான அன்வாருக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவரும் கட்சியின் தேசிய துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வகிப்பவருமான டாக்டர் ந.சத்திய பிரகாஷ், பிகேஆர் 4 உதவி தலைவர்களில் ஒருவராகி தமிழர் சார்பில் இடம்பெற முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில்தான், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசார் அமிருடின் ஹருண், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட், அறிவியல் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் ச்சங் லி கங் ஆகிய நால்வரும் தத்தம் பதவியை தற்காக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், கட்சித் தலைவர்- பிரதமர் அன்வாரின் மகளும் Pantai Dalam, Permatang Pau நாடாளுமன்ற தொகுதிகளின் மேனாள் மக்கள் பிரதிநிதியுமான Nurul Izzah, தகவல் துறை அமைச்சரும் பி கே ஆர் தகவல் பிரிவு தலைவருமான Fahmi Fadzil, சுங்கை பூலோ எம.பி. இரமணன் ஆகிய எழுவரும் பி கே ஆர் உதவி தலைவர் போட்டிக்கு ஆயத்தமாகி வரும் நிலையில் இப்பொழுது எட்டாவதாக களத்தில் குதித்து இருக்கிறார் டாக்டர் சத்திய பிரகாஷ்.

இவர்களுடன் மணிவண்ணன் கோவியும் சளைக்காமல் களம் இறங்க இருப்பதாகத் தெரிகிறது. கடந்த முறை ஐந்தாவது இடத்தை பிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிவண்ணனின் கவனம் எல்லாம் தற்பொழுது ஜெம்புல் தொகுதித் தலைவராக வாகை சூடுவதில்தான் இருக்கிறது.
பி கே ஆர் கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் உட்கட்சித் தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று களம் காண்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் மணிவண்ணனின் அரசியல் போக்கு புதுமையாக இருக்கிறது.

தொடக்கத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் களம் இறங்கிய மணிவண்ணன் அடுத்து பேராக் மாநிலத்தில் மையம் கொண்டிருந்தார். இப்பொழுது தன் சொந்த மாநிலமான நெகிரி செம்பிலானில் தான் பிறந்து வளர்ந்த தோட்டம் இடம்பெற்றுள்ள ஜம்புல் தொகுதியின் தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கத்தில் களமாடி வருகிறார்.
பி கே ஆர் ஜெம்புல் தொகுதியை வசமாக்கியபின் தேசிய உதவித் தலைவர் பதவிக்கான போட்டியில் களம் இறங்குவதா இல்லையா என்பதை முடிவு செய்ய இருப்பதாகவும் எது எப்படி இருந்தாலும் மே மாதம் மூன்றாம் நாள் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் பொழுது எல்லாவற்றுக்கும் விடை தெரியும் என்று பூடகமாக கோ. மணிவண்ணன் கருத்து தெரிவித்தார்

இதற்கிடையில் சிகாமாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யுவனேஸ்வரன் ராமராஜனும் உதவி தலைவர் பதவியின் மீது மையல் கொண்டிருப்பதாகத் தெரிகிறது; இதைவிட இன்னொரு வியப்பு தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சரும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மண்டியிட்டவருமான சரஸ்வதி கந்தசாமியும் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக அரசல்- புரசல் தகவல் தெரிவிக்கிறது
உண்மையான நிலவரம், கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் இடம்பெறும் மே மாதம் மூன்றாம் நாள் மாலையில்
தேர்தல் குழுச் செயலாளர் முஸ்தபா அறிவிக்கும் பொழுது தெரியவரும்.
கிளை- தொகுதி மட்டத்திலான தேர்தலில் பங்கு பெறுவோர் வேட்பு மனுத் தாக்கல் செய்வது கடந்த (மார்ச்)16ஆம் தேதியோடு நிறைவு பெற்றது.
2025 ஏப்ரல் 11-ஆம் நாள் வெள்ளிக்கிழமை கெடா மாநிலத்திற்கும் அடுத்த நாள் பெர்லிஸ், சிலாங்கூர், மலாக்கா மாநிலங்களிலும் அதற்கு அடுத்த நாள்(ஏப்ரல் 13-ஞாயிறு) பேராக், நெகிரி செம்பிலான், சரவாக் மாநிலங்களுக்கும் தொடர்ந்து ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை கிளந்தான், திரங்கானு மாநிலங்களுக்கும் ஏப்ரல் 19 சனிக்கிழமை பினாங்கு, கூட்டரசுப் பிரதேசம், பகாங் மாநிலங்களுக்கும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தென்பகுதி ஜோகூர் மற்றும் போர்னியோ மண்டலத்து சபா மாநிலங்களுக்கும் தொகுதி-கிளை மட்டத்திலான தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.
அதேவேளை கட்சியில் ஜனநாயகம், உட்கட்டமைப்பு, அனைவருக்குமான உள்ளடக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கட்சி தேர்தலில் பங்கு கொண்டு ஆர்வம் காட்டிவரும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சலேகா.
கட்சியின் தேசியத் தலைவராக இப்பொழுது இருக்கின்ற அன்வாரே தொடர வேண்டுமா அல்லது அந்த பொறுப்பிற்கு போட்டி இருக்குமா என்பதெல்லாம் மே மாதம் தெரியவரும் என்று சலேகா மேலும் சொன்னார். காரணம் கட்சியின் அடித்தள உறுப்பினர்களிடமிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ள தீர்மானங்கள், முன்மொழிவுகள், ஆலோசனை இவற்றின் அடிப்படையில் அதுகுறித்த முடிவு பின்னர் எடுக்கப்படும் என்றும் ஸலேகா தெளிவுபடுத்தினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் தேசியத் தலைவர், தேசியத் துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளுக்கும் போட்டி இருக்கக் கூடாது என்று இந்த ஆண்டு பிப்ரவரி முதல் நாளில் பி கே ஆர் கட்சியின் பன்னாட்டுக் குழு தலைவர் சம்சுல் இஸ்கந்தார் முகமட் ஆ க்கின் தெரிவித்திருந்தார். கட்சி மட்டத்திலான கலந்துரையாடல் எதிர்காலம் குறித்த பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கருத்தை வெளியிட்டதாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் பி கே ஆர் கட்சியின் உயர் மட்ட – தேசிய பதவிகளுக்கான தேர்தல் மேத் திங்கள் இருபத்து நான்காம் நாள் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தல் நடைமுறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இயல்பாகவும் சுமூகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பிகேஆர் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் பூசியா சாலே தெரிவித்துள்ளார்.


