Thursday, April 16, 2026

நீதிமன்ற ஆணையைமீறி ஸம்ரி வினோத் விடுதலை:

நீதித்துறைக்கு காவல்துறை அவமதிப்பு

கோலாலம்பூர், மார்ச் 30:
கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சமய பேச்சாளர் ஸம்ரி வினோத் காளிமுத்துவிற்கு இரு நாள் சிறைத் தண்டனை விதித்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் அவரை விடுதலை செய்த தேசிய காவல் படை, நாட்டின் நீதிபரிபாலனத்தையும் சட்டத்தையும்மீறி செயல்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது. இந்த முடிவு, சட்டத்தின் மாண்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்று மலேசிய சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பின் பேச்சாளர் டத்தோ செல்வம் செல்லையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெர்சத்து கட்சியின் போர்ட்டிக்சன் தொகுதித் தலைவர், பொதுமக்கள் ஏற்படுத்திய கடுமையான அழுத்தம் காரணமாக, காவல் துறையினர் ஸம்ரி வினோத்தை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது, உண்மையாக இருந்தால், நாட்டின் சட்ட அமலாக்கத்தில் இது ஒரு மிகப்பெரிய அநீதியாக அமையும்; தவிர, ‘சட்டத்தின்படி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தும் கூட்டாட்சி அரசியலமைப்புச் சட்டம், 8-ஆவது பிரிவை அவமதிப்பதாகவும் இது அமைகிறது.

கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், “அனைவரும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும்” என்று நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், மதப் பேச்சாளர் ஸம்ரி வினோத்தை நீதிமன்ற உத்தரவையும் சட்ட அமலாக்கத்தையும்மீறி, தேசிய காவல் படை விடுவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் பெர்லிஸ் மாநில சமயத்துறை அதிகாரிகளுக்கும் ஸம்ரி விநோத்திற்கும் இடையே உள்ள ஆழமான பிணைப்பைக் காட்டுவதாகவும் உள்ளது.

மதப் பிரச்சாரகர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதன்மூலம் தேசிய போலீஸ் படை ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. அரசாங்க அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்ட நபர்கள் எந்த சிக்கலும் இன்றி அலுங்காமல் குலுங்காமல் சட்டத்தை மீறலாம் என்பதை காவல்துறை சொல்லாமல் சொல்கிறது. இத்தகையப் போக்கு, தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தும்; சட்ட அமலாக்கத்தின்மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைக்கும்; எல்லாவற்றுக்கும் மேலாக, பல்வேறு சமய- சமூகங்களைக் கொண்ட மலேசியாவின் அமைதியான சகவாழ்விற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இதற்கெல்லாம் உரிய பதிலை பொதுமக்கள் காவல்துறையிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் அல்லது சமூக-சமய எல்லைசார்ந்த அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, பாரபட்சமற்ற சட்ட அமலாக்கத்தை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் டத்தோ செ.செல்வம் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை