
காலம் அறிந்து நேசக்கரம் நீட்டும் பிரதமர் அன்வாரின் கொடை உள்ளம்
ரிக்டர் அளவில்7.7 என்னும் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் புரண்டு கிடக்கும் மியன்மார் நாட்டிற்கு மலேசியாவின் சார்பில் வெள்ளி 10 மில்லியன் நிதி உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருப்பது காலத்தால் செய்த உதவியாக மியன்மார் இராணுவ அரசால் கருதப்படும்.
மியன்மார் நாடும் உறுப்பியடம் பெற்றுள்ள ஆசியான் கட்டமைப்பிற்கு தலைமை ஏற்றுள்ள மலேசியாவிற்கு இத்தகைய தார்மீக கடமை இருக்கிறது. அதை உணர்ந்துதான் பிரதமர் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டு இருக்கிறார்.
ஏற்கனவே 50 பேர் கொண்ட உதவிப்படை, இயற்கைப் பேரிடர் மீட்புப் பிரிவான நட்மா(NADMA) ஒத்துழைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்தக் குழுவும் இன்று முதல் மீட்பு பணியைத் தொடங்குகிறது.
வரும் வாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தலைமையில் மனிதநேய உதவிக் குழுவினர் மியன்மாருக்குச் செல்லவும் பணிக்கப்பட்டுள்ளதாக அன்வார் மேலும் தெரிவித்துள்ளார்
தவிர, ஆசியான்-ASEAN நாடுகளின் தலைவர் என்ற முறையில் ஆசியான் உறுப்பு நாடுகளின் உதவியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் இதன்தொடர்பில் இன்று கூட்டம் நடைபெறுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இரு நாட்களுக்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை மியன்மாரைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கத்தின் தாக்கம் அடுத்த சற்று நேரத்தில் தாய்லாந்தையும் 6.4 என்னும் ரிக்டர் அளவில் தாக்கியது
இதன் விளைவாக மியன்மாரின் Sagaing, Mandalay, Magway, Bago, Eastern Shan Estate மியன்மாரின் தலைநகரம் Naypyidaw ஆகிய மண்டலங்களிலும் தாய்லாந்தின் பேங்காக் நகரிலும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக மியன்மாரில் இதுவரை 1,500 பேர்வரை இறந்தது தெரிவதாகவும் 3,400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் 139 பேரைக் காணவில்லை என்றும் மியன்மார் நாட்டை ஆளும் ராணுவ ஆட்சிக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


