Thursday, April 16, 2026

அன்வாரும் மோடியும் ஒன்றேதான்!மீண்டும் மீண்டும் மெய்ப்படுகிறது.!!

ஜனநாயக அரசியல் பாதையில் இருந்து வழுவி, மதநாயக நடவடிக்கையில் அப்பட்டமாக ஈடுபடுவதாகட்டும், இந்த உலகின் தொல்குடியினரான தமிழினத்தை புறக்கணிப்பதாக இருக்கட்டும் இந்திய பிரதமர் நரேந்திர தாஸ் தாமோதர மோடியும் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் ஒன்றாக செயல்படுகின்றனர்.

இந்திய அமைச்சரவையில் கடந்த 12 ஆண்டுகளாக தமிழர் இடம்பெற வில்லை. பிராமணர்களின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஆட்சியை பிராமண சித்தாந்தத்திற்கு அடிபணியும் ஆர்.எஸ்.எஸ்.காரரான மோடி, கடந்த 12 ஆண்டுகளாக தமிழினத்தை சிறுமைப்படுத்தி வருகிறார்.

அதைப்போல, சுதந்திர மலேசியாவில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைக்கு மாறாக, தன்னுடைய அமைச்சரவையில் பிரதமர் அன்வார், தமிழர் ஒருவரை அமைச்சராக நியமிக்கவில்லை.

முகலாய சாம்ராஜ்ய காலத்தில் அயோத்தி நகரில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் ஆலயத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டியதும் அவர்தான்; திறந்து வைத்த தலைமைக் குருக்களும் அவர்தான். பல இனத்தினர்-பன்மொழியினர்-பல்பாண்டினர் என 140 கோடி மக்கள் வாழும் நாட்டை ஆளும் பிரதமரின் பணியா இது?

அதேபோலவே இந்த மலைத் திருநாடாம் மலேசியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஓர் எளிய வழிபாட்டுத் தலத்தை அகற்ற சம்மதிக்க வைத்துவிட்டு அந்த இடத்திற்கு அருகில் ஓர் இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை மலேசிய பிரதமரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையேற்று நடத்தி இருக்கிறார்.

பல்கலாச்சாரத்தினர்-சர்வசமயத்தினர்-பல்லினத்தினர் வாழும் நாட்டின் பிரதமரின் வேலை இதுவா?

ஓரு பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்ட எத்தனையோ மார்க்க அறிஞர்கள் இருக்கும்பொழுது, ஒரு நாட்டை வழிநடத்தும் நிருவாகத் தலைவர் இதற்குத் தலைமை ஏற்கலாமா?

இதுகூட பரவாயில்லை; காஜாங் பட்டணத்தில் ஒரு பள்ளிவாசலில், ஓர் இந்து இளைஞரை இஸ்லாமியராக மதம்மாற்றும் சடங்கை நடத்தி, ஒரு மார்க்க அறிஞரைப் போல செயல்பட்டதற்கு அன்வார் கொஞ்சமும் மனம்கூச வில்லை. இப்படிப்பட்ட பிரதமராக இந்த உலகத்திலேயே அன்வார் ஒருவராகத்தான் இருப்பார்.

பிரதமர் துறையில், இஸ்லாமிய சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக அல்லது இஸ்லாம் நலம்பேணுவதற்காக கேபினெட் தகுதியுடன் ஓர் அமைச்சர் இருக்கும்பொழுது, மத நடவடிக்கையில் ஒரு பிரதமராக இருக்கும் தாம் தலையிடலாமா என்பதைப் பற்றிகூட பிரதமர் அன்வார் கொஞ்சமும் நிதானிக்கவில்லை.

தமிழ் நாட்டிற்கு வரும்பொழுதெல்லாம், ஏதாவது ஒரு திருக்குறளை தப்பும் தவறுமாக சொல்வது மோடிக்கு வாடிக்கை; பிரதமர் அன்வாரும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்பொழுதெல்லாம் தட்டு தடுமாறி ஒரு திருக்குறளை ஒப்புவிப்பார்; கடந்த 30 ஆண்டுகளாக இப்படி செய்யும் அன்வார், திருக்குறள் வளர்ச்சிக்காக சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போட்டதில்லை; ஒரு வெள்ளிகூட வளர்ச்சி நிதியாக அளித்ததில்லை.

தமிழ் நாட்டில் கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொழுதெல்லாம் எம்ஜிஆர் புகழ்பாடுபவர் மோடி; அதைப்போல தேர்தல் காலக் கூட்டங்களில் எம்ஜிஆரின் நடித்த பாடல்களுக்கு அன்வாரும் ஆடி, தமிழர்களை வசியப்படுத்துவார்.

தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு உரிய நிதியை ஒதுக்காதவர் பிரதமர் மோடி; அதைப்போல தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் உருமாற்றத்திற்கும் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டுவந்த மானியத்தை, அன்வார் தலமையிலான மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்தியாவில் இரு செம்மொழிகள் உள்ளன; அவற்றுள் ஒன்று தமிழ். ஆனால், தமிழ் வளர்ச்சி தொடர்பில் பிரதமர் மோடி அக்கறைப்படுவதில்லை; அதைப்போல மலேசியாவிலும் இரு செம்மொழிகள் உள்ளன; அவற்றில் ஒன்று தமிழ்; அத்தகைய உயர் தனி செம்மொழிக்காக, மலேசியாவில் 20 அரசப் பல்கலைக்கழகங்களின்வழி எந்த அணுகூலத்தையும் செய்ய விரும்பாதவர் அன்வார்.

ஆர்.எஸ்.எஸ்.காரரான மோடிக்கு கொள்கை அடிப்படையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை அறவேப் பிடிக்காது; ஆனாலும் அவரின் புகழ்பாடுவதில் மனம் கூசாதவர் மோடி; அன்வாரும் அம்பேத்கரின் பெருமையை பேசக்கூடியவர்.

சென்னை வானொலி நிலையத்தின் பெயரை ‘தூர்தர்ஷன்’ என்று மாற்றி அதை காவி வண்ணத்திற்கு உருமாற்றி விட்டனர் மோடி தலைமையேற்றபின்; இங்கோ, மின்னல் பண்பலை வானொலியில் காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பப்பட்ட 10 நிமிட உலக செய்தி அறிக்கையும் இரவு 11:00 மணிக்கான 10 நிமிட செய்தித் தொகுப்பும் ஐந்தைந்து நிமிடங்களாக அன்வார் தலைமையிலான பிகேஆர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் குறைக்கப்பட்டது.

இப்படி, எத்தனையோ வகையில் மோடியும் அன்வாரும் ஒன்றுபோல இருக்கின்றனர். ஆனாலும் இந்த இருவரும் ஜனநாயக சிந்தனையில் இருந்துவிலகி, மதநாயகப் போக்கை கைக்கொள்வது நாநிலத்தோருக்கு நன்மை பயக்காது!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை