Saturday, April 25, 2026

முகநூல் பக்கத்தில் இந்து கோயில்கள்மீது அவதூறு: தகவல் பல்லூடக ஆணையமும் ஐஜிபியும் அசட்டை

அமைச்சர்கள் சைஃபுடினும் ஃபாமி ஃபாட்சிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர், ஏப்ரல் 04:
‘சட்டவிரோத ஆலயங்கள்’ என்னும் முகநூல் பக்கத்தின் மூலம் மலேசிய கூட்டு சமுதாயத்தில் பாதகத்தை ஏற்படுத்த முயலும் கடும்போக்கினர்மீது உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோனும் தகவல் பல்லூடக அமைச்சர் ஃபாமி ஃபாட்சிலும் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவரும் நாட்டின் சரித்திர சாதனை இயக்கம்-ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்

இந்திய சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் தேசிய காவல்படைத் தலைவர்-ஐஜிபி மௌனம் காப்பதும் மலேசியத் தகவல் பல்லூடக ஆணையத்தின்(MCMC) ‘முதுகெலும்பு இல்லாத’ அணுகுமுறையும் முற்றிலும் வருந்தத்தக்கது; பொறுப்பற்றது. இந்தியர்களை முடக்குவதற்காக ‘மே-13 கலவர’ அத்தி-யாயத்தைப் புதுப்பிக்க நேரில் அழைப்பு விடுக்கும் தரப்பினர், பொது ஒழுங்கு மற்றும் நல்லிணக்கத்தை நேரடியாக மீறுவதுடன், இனப் பிரிவினையையும் வன்முறையையும் தூண்ட வெளிப்படையாக முயல்கின்றனர்.

வெறுப்புப் பேச்சையும் பல்லின சமுதாயத்தில் தீங்கு விளைவிக்கும் கருத்தையும் தடுக்க தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தகவல் பல்லூடக ஆணையம் கோழைத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அதேவேளை, 100க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும்படி Meta-வை கேட்டுக் கொண்டுள்ளது. வேலியே பயிரைமேய அனுமதிப்பதைப் போன்ற இந்த மௌனம், மலேசிய கூட்டு சமுதாயத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஐயத்திற்கு உள்ளாக்குகிறது என்று முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன்தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளார்.

இந்துக்களுக்கு எதிரான இழிவான கருத்துக்களின் சட்டப்பூர்வத் தன்மையை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்; மாறாக, தனிநபர்களோ அல்லது சமூக ஊடக தலங்களோ அல்ல என்றும் பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை