இன உரிமைக்காக மட்டுமல்ல; சமய உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் முதல் தலைவர் பொன் வேதமூர்த்தி!!

மலேசிய இந்திய சமுதாயத்தின் பன்முக மீட்சிக்காக மட்டுமல்ல; சமய உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் முதல் தலைவராக விளங்குபவர் மலேசிய முன்னேற்றக் கட்சி எம் ஏ பி தேசியத் தலைவர், பொன். வேதமூர்த்தி ஒருவர்தான்.
மலேசிய இந்தியர்களின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காக 13ஆவது மலேசியப் பெருந்திட்டத்தில் வெ.25 பில்லியன் நிதி ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பொன் வேதமூர்த்தி, அண்மைக் காலமாக இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் இழிவாக கருத்து பதிவு செய்த தரப்பினருக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்தவர், மலேசிய சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான பொன் வேதமூர்த்திதான்.
இதன் தொடர்பில் தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயூப் கானுக்கு கடிதம் எழுதிய இவர்,

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்து வழிபாட்டு தலங்களை இழிவாகவும் மாண்பு குறைவாகவும் கருத்து பதிவிட்டதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படாது என்று அயூப் கான் தெரிவித்ததற்கு உடனே அடுத்த கடிதம் எழுதி தேசிய காவல் படை துணைத் தலைவருக்கு மறுப்பும் வருத்தமும் தெரிவித்த தலைவரும் இவர்தான்.
தவிர, மலேசிய தகவல் பல்லூடக ஆணையமும் இதன் தொடர்பில் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதுடன் அத்தகைய பதிவுகளை உடன் நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கும் அவசர கடிதம் எழுதி இதன் தொடர்பில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்ட பொன். வேதமூர்த்தி,

இந்து வழிபாட்டு தலங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் மோசமான கருத்துக்களை பதிவிட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு ஆணையிடும்படியும் இந்து ஆலயங்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை அகற்றும்படி தகவல் அமைச்சுக்கும் இந்த அமைச்சின்கீழ் இயங்குகின்ற தகவல் பல்லூடக ஆணையத்திற்கும் உத்தரவு விடும்படியும் அக்கடிதத்தில் பொன் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்.
மலேசிய இந்திய சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தாலும் குரல் கொடுக்கும் எண்ணமும் துணிவும் இல்லாத தலைவர்கள் இந்திய மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருக்கும் வேளையில், மலேசிய இந்திய சமுதாயத்தின் உரிமைக்காகவும் சமய வழிபாட்டு உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பும் ஒரே தலைவர் முன்னாள் அமைச்சருமான பொன் வேதமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.


